பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் ஒரு சில வெளி நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்தப் பிரிவில் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு என்னோடு இன்னுமொரு இளம் மாணவி மட்டுமே.
இரசாயனவியல் தொழில்நுட்பம் என்னும் பாடம் தொடர்பாக ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காக ஒரு மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளராக இருந்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி. இரசாயனவியலில் முதுகலைமானிப்பட்டம் பெற்றவர். எல்லோரும் வரவேற்பறையில் எங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம். சரியாக குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு உயர்ந்த சற்று தடித்த தோற்றமுடைய மனிதர் அங்கு வந்தார். கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாங்கள் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்றோம்.
ஒவ்வொரு கட்டங் கட்டமாக பார்வையிட்டோம். மாணவரின் கேள்விகளுக்கும், விரிவுரையாளரின் வினாக்களுக்கும் மிக சாதாரணமாக விளக்கம் கொடுத்தார் அந்த மனிதர். கணினியின்( computer )துணைகொண்டு தொழிற்சாலை இயந்திரங்களை ஒவ்வொரு படிவத்திற்கும் நகர்த்துவதையும்,கண்காணிப்பதையும் ( process technical ) அவதானிப்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இங்கு 1500 இற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இடையிடையே பேசிக்கொண்டதில் அந்த மனிதர்தான் அந்த நிறுவனத்தின் நிர்வாகி என்று தெரியவந்தது.