கடவுளைத் தேடுதல்
கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தான் வெவ்வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடவுள், பல்வேறு கடவுள்களுக்கு பல்வேறு வழிமுறைகள். ஒவ்வொரு நெறிமுறையும் ஒவ்வொரு மதமாகும். ஆண் கடவுளே ஒவ்வொரு மதத்திற்கும் தலைமை கடவுளாக இருக்கிறார். பெண் கடவுள் ஒன்றுகூட மதத்தின் தலைமை கடவுளாக இருக்கவில்லையே ஏன்? ஆண் கடவுள்கள் மதத்தின் அடையாளங்களாக நீடித்தபோதும், இயற்கையில் அடையாளங்களை ஆண் கடவுள்களால் கைப்பற்ற முடியவில்லையே ஏன்? நிலம், கடல், வனம், நதிகளின் பெயர்கள் ஆகியன தாய்மையின் அடையாளங்களாகவே இன்றும் சுட்டப்படுகின்றன. இவைகளுக்கு ஆண்மையின் அடையாளங்கள் ஏன் பொருத்தப்படவில்லை. கண்ணகி என்ற கற்புக் கடவுளை கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களே, அந்த பெண் கடவுளர்களுக்கு கணவன்மார்களாக யார் இருந்தார்கள்? பொதுவாக, உலகைப் படைத்ததாக சொல்லப்படுகின்ற கடவுள், இந்த உலகில் எப்போது, எதற்காக, எப்படி உருவானார்? கடவுள் பிறந்து வளர்ந்த கதைதான் என்ன? கடவுள் பற்றிய சுவாரசியமான, குழப்பமான, முரண்பாடான பல்வேறு கதைகளைக் கடந்து, பொதுவான சில உண்மைகளை உணர்வதற்காக இக்கட்டுரை முயல்கின்றது. அறிவியல் தத்துவம் விளக்கும் சமூக வரலாறிலிருந்து கடவுளின் ஜாதகத்தை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். கடவுளைத்தேடி காலம் கடந்து பயணித்த, காதலிலிருந்து கடவுள்வரை என்ற கலை இலக்கிய அனுபவத்திலிருந்து இக்கட்டுரையின் விவரிப்புகளை அமைக்க முயல்கிறேன். சமூக வரலாற்றில் கடவுளின் வழிபாடுகள் நான்கு நிலையில் கட்டமைந்துள்ளன.
1.இயற்கை வழிபாடு
2.தாய் தெய்வ வழிபாடு
3.தந்தை தெய்வ வழிபாடு
4.பத்தினி வழிபாடு
இயற்கையை வழிபடுதல்
கடவுள் தோன்றாத பழைய உலகின் எல்லை, மனித சமூகம் தோன்றாத ஓர் உலகமாக இருந்தது. உண்பதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் எந்த வசதிகளும் செய்யப்படாத நிலைமைகளே சூழ்ந்திருந்தன. இயற்கை ஆடையின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டவையாக எந்தப் பொருள்களும் இல்லை. செயற்கையின் அடையாளமாக சிறு கோமணம்கூட கிடையாது. செயற்கையற்ற அந்தப் பழங்கால உலகின் பிரமாண்டங்களாகப் பலவித உயிரினங்கள் திரிந்துகொண்டிருந்தன.