வாசிப்பும், யோசிப்பும் 348 : தேவகாந்தனின் ‘நவீன தமிழ் இலக்கியம்: ஈழம் – புகலிடம் – தமிழகம்’

வாசிப்பும், யோசிப்பும் : தேவகாந்தனின் 'நவீன தமிழ் இலக்கியம்: ஈழம் - புகலிடம் - தமிழகம்' அக்டோபர் 5 அன்று ‘டொராண்டோ’வில் வெளியிடப்படவுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் ஐந்து நூல்களிலொன்று ‘நவீன இலக்கியம்: ஈழம் –  புகலிடம் – தமிழகம்”.  பூபாலசிங்கம் (இலங்கை) பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நூல். தேவகாந்தனின் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் பேசும் விடயங்களாக தமிழ்க்கவிதைகளின் செல்நெறி, இலங்கைத்தமிழ்க் கவிதைகள் பற்றிய வரலாற்றுப் பார்வை, இலங்கைத்தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனப் பார்வை, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் நா.பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகள் , தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நோக்கு, புலம் பெயர் இலக்கியம், மலேசிய இலக்கியம், பின் காலனித்துவ இலக்கியம், கனடா இலக்கியச் சஞ்சிகைகள் இவற்றுடன் மு.தளையசிங்கத்தின்  படைப்புகள் ஆகியன அமைந்துள்ளன. கட்டுரைகள் 1998 -2018 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

தேவகாந்தன் அவர்கள் முகத்துக்காக எழுதுபவரல்லர். தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். இங்குள்ள கட்டுரைகளில் அவரது இவ்வாளுமையினைக் காணலாம். அவரது சிந்தனை வீச்சினைக் காணலாம். ஒருவரது படைப்புகளை வாசித்துச் சிந்தித்து அவர் எடுக்கும் முடிவுகளிலிரிந்து இதனை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மு.தளையசிங்கத்தின் படைப்புகளிலிருந்து அவர் எடுக்கும் பின்வரும் முடிவினைக் கூறலாம்:

“சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும் , இச்சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக்கொண்டு. அப்படியில்லை என்று வாதிடுவதெல்லாம் வீண்.”
(பக்கம் 118; கட்டுரை ‘படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த. குறித்தான ஓர் இலக்கிய விசாரணை’.)

தொகுப்பின் கட்டுரைகள் கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் எனப் படைப்பாளிகள் பலரை அவர்கள் தம் எழுத்துகளை, சஞ்சிகைகள், இணைய இதழ்களை அறிமுகப்படுத்துவதுடன் தேவகாந்தனின் கருத்துகளையும் கூடவே வெளிப்படுத்துகின்றன. நவீனத் தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள் பற்றிக் குறுப்பிடுகையில் “இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிக விஸ்தீரணமானது.  அதுமனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்சினைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை, நம்பிக்கைகளை, பெண்ணிய எழுச்சிகளை, ஜனநாயக அறை கூவல்களைப் பேசுகின்றது.  சில கவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சில கவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில் பொருளாதாரத்தளத்தில்  மூன்றாம் உலக நாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமை பற்றியும் , சில உலகப் பொதுப் பிரச்சினைகளான விபசாரம், எயிட்ஸ் நோய் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்து ஒரு பொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களுமுண்டு. இத்தனிப்பண்புகள் கவிதைத்தரத்தை நிர்ணயிக்க, பொதுப்பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன.” (பக்கம் 1 & 2;  கட்டுரை 1: ‘சமகால தமிழ்க்கவிதைகளின் செல்நெறி குறித்து….) என்று அவர் கூறுவது ஓருதாரணம்.

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!

காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!1. காலத்தால் அழியாத கானங்கள் : ‘அபுது கே துமசி கரு குஷி அபுனி’

ஜெயாபாதுரி, லதா மங்கேஷ்கார், எஸ்.டி.பர்மன் & மஜ்ரூத் சுல்தான்பூரி கூட்டணியில் உருவான இன்னுமொரு நெஞ்சிற்கினிய ‘அபிமான்’ பாடல் ‘அபுது கே துமஷி கரு குஷி அபுனி’. filmy Quotes இணையத்தளத்திலிருந்த இப்பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றேன்.

படம்: அபிமான்
இசை: எஸ்.டி.பர்மன்
பாடகர்: லதா மங்கேஷ்கார்
பாடல் வரிகள்: மஜ்ரூத் சுல்தான்பூரி
https://www.youtube.com/watch?v=emKJ5_cMEHk

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்
என் வாழ்க்கை இருப்பது உனக்குத் தியாகம் செய்வதற்காகத்தான்.
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
உலகம் என்ன கூறுகின்றது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.
என் உறவினர்கள் யாரும் என்னைப்பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பது பற்றி.
எனக்குக் கவலையில்லை.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
நான் உன்னுடன் இணைந்து புகழும் பெற்றுள்ளேன்.
யாருக்குத் தெரியும் எனது அமைதியின்மை என்னை எங்கே கொண்டு செல்லுமென்று.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

Continue Reading →

மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’

மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'எழுத்தாளர் மாலன்சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருந்த ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ நூலின் நான்கு பிரதிகளைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.


உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முடிந்தவரையில் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். சிறப்பானதொரு கவிதைத்தொகுதியினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள சாகித்திய அகாதெமியினருக்கும், தொகுத்த எழுத்தாளர்

மாலனுக்கும், தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் .


தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:


அமெரிக்கா:


1. கோகுலக் கண்ணன் – அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை

2. பெருந்தேவி – உடைமை

3. வேதம் புதிது கண்ணன் – வீடுபேறு, மணம்

4. கவிநயா – கைப்பைக் கனவுகள்


ஆஸ்திரேலியா:


1. ஆழியாள் – உப்பு, குமாரத்தி


இங்கிலாந்து:


1. நா.சபேசன் – நான் காத்திருக்கிறேன்

2. தவ சஜிதரன் – படர்க்கை

3. நவஜோதி ஜோகரட்னம் – சதா மெளனம், வயது வந்தாலென்ன


இலங்கை:


1. நுஃமான் – பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு

2. அனார் – இரண்டு பெண்கள்

3. சோலைக்கிளி – எலி

4. தீபச்செல்வன் – ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்

5. எம்.ரிஷான் ஷெரீப் – ஆட்டுக்குட்டிகளின் தேவதை

6. அபார் – தாள் கப்பல்

Continue Reading →

ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்

எழுத்தாளர் தேவகாந்தன்ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில் தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன.  

பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு முன்னுரையாகவன்றி நூலின் திறனாய்வாகவே அது உருக்கொண்டிருக்கிறது. அந்தளவு ஓர் கனதியான முன்னுரையை தாங்கக்கூடிய வலிமை ந.மயூரரூபனின் கட்டுரைகளுக்கு இருக்குமாவென, அதை முதலில் வாசிக்கையில், என்னில் ஐயுறவெழுந்தது. கட்டுரைகளை வாசித்த பின்னால் இது ‘காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்த கதை’யாக இல்லையென்பதைத் தெரியமுடிந்தது.

இந்த பத்தொன்பது கட்டுரைகளை நோக்குகையில் படைப்பு – படைப்பாளி – வாசகன் ஆகிய தளங்களில் தனித்தனியாகவும், பின் ஒட்டுமொத்தமாகவும் ‘புனைவின் நிழல்’ தன் கருத்தை முன்வைத்திருப்பதாகக் கொள்ளமுடியும்.

இப் பிரதி முன்வைக்கும் கருத்துச் சாராததும் நூலாக்கம் சம்பந்தப்பட்டதுமான இரண்டு அம்சங்களை முதலில் குறிப்பிடுவது நல்லது எனத் தோன்றுகிறது. ஒன்று, தெளிவற்றதும் தீவிரமற்றதுமான சில கட்டுரைகளை, குறிப்பாக ‘ஆண்குறியாலான அதிகாரம்: காலம் கலங்கி மடியும் மந்திரம்’ என்பதுபோன்றவற்றை தொகுப்பில் சேர்க்காது விட்டிருக்கலாம். அவை பொருள் மயக்கமும் தெளிவின்மையும் கொண்டிருக்கின்றன. ஏனைய கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் அவை வலிமை குறைந்தவையும். அடுத்து, நிறுத்தக் குறியீடுகள் தேவையற்ற இடங்களிலும், அதிகமான இடங்களில் தவறான பிரயோகத்திலும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். இதனால் பொருள் கோடலின் இடைஞ்சல் வாசிப்பின் வேகத்தையும் சுகத்தையும் தடுக்காது இருந்திருக்கும்.  

இக் கட்டுரைகள் பலவிடங்களில் இயங்கியல், அமைப்பியல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. இயங்கியல் என்ற வார்த்தையை இயங்குமுறை எனக் குறிக்கவேண்டுமிடங்களிலும் பயன்படுத்துவதால் விளக்கக் குறைவு ஏற்பட்டு வாசகனை மலைக்க வைக்கின்றது. அவை கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பேச்சு வழக்கில் பயன்படும் அமைப்பியல் என்ற பதம் (சிலர் அமைப்பியலெனவே எழுத்திலும் பயன்படுத்துகின்றனர்) இன்று எழுத்திலும் அவ்வாறே பயன்படுத்தப் படுவதில்லையென்பது ஆய்வுலகில் அறிய வந்துள்ள விபரம். அது அமைப்பு மையவாதமெனவே படுகின்றது (பார்க்க: ‘அமைப்பு மையவாதமும் பின்அமைப்பயிலும்’, க.பூரணச்சந்திரன்). இது முக்கியமான அம்சமில்லையெனினும் வாசக தெளிவுக்காக இதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

Continue Reading →

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)  கீழுள்ள படங்களை அழுத்தினால், அவை பெரிதாக, தெளிவாகத் தெரியும்.

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி  (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)

Continue Reading →

பதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்!

- ‘அசை’ சிவதாசன் -‘பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –


பதிவுகள் தை 2009 இதழ் 109
அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக உழைத்த மல்கம் எக்ஸ் ஒரு தடவை சொல்லியிருந்தார் “ முதுகில் ஒன்பது அங்குலங்களுக்குக் கத்தியைப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் ஆறு அங்குலங்களை வெளியே இழுத்துக் கொள்வதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது” என்று. ஒபாமாவின்-அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான-தெரிவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். புஷ் ஆட்சியின் போது ஜனநாயக உலகின் மார்பில் செருகப்பட்ட கத்தியை மக்கெயினைத் தோற்கடித்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஆறு அங்குலங்களால் இழுத்திருக்கிறார்கள். ஒபாமாவின் தெரிவு இக் கத்தி இழுப்பின் ஒரு பக்க விளைவே.

அதிசயமேதான். இந்த நூற்றாண்டில் இது நடை பெற்றிருக்க முடியாதுதான், ஆனால் நடைபெற்றிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்றார், மக்கள் கொடுத்திருக்கிறார்கள்-ஒரு இனத்தால், மதத்தால், நிறத்தால் கலவை செய்யப்பட்ட ஒரு மனிதரிடம். பராக் ஹுசெய்ன் ஒபாமா கலவை செய்யப்பட்ட பிறவி சரி ஆனால் கொள்கைகளாற் சலவை செய்யப்பட்டவரா? அவகாசம் வேண்டும்.

சரி பாதியாகப் பிளந்த ஜனநாயக அமெரிக்காவின் உதரத்திலிருந்து தோன்றிய இந்த மாயக் குழந்தையின் பிறப்பு இயற்கையாயின் அது நிச்சயமான மாற்றமேதான். ஆனால் பிரசவத்தின் பின்னர் உறவு முறை சொல்லிக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு முகாமிட்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது குழந்தை பரிசோதனைக் குழாயில் உருவாக்கப்பட்டதா அல்லது புஷ் குடும்பத்தின் ‘குளோனிங்’ வாரிசா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒபாமாவின் தெரிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் குழப்பநிலை, போட்டியாளரின் தகைமை, ஒபாமாவின் திறமை இவற்றுக்கு மேலாக அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்பதே மறுமொழி.

‘தக்கன வாழும்’ என்பது பரிணாமக் கொள்கை. இன்றய ஒரு துருவ உலகில் நவ-பழைமைவதிகளின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்போது உலகை அழிக்க வல்ல சகல வல்லமை பொருந்திய அணுவாயுத வல்லரசின் ஆட்சியை ஒரு கறுப்பரிடம் கையளிக்க உலகம் தயாராகவிருந்திருக்குமா? ‘அமெரிக்காவை ஆழ்பவர் உலகை ஆழ்பவர். அதற்குத் தேவையான அனுபவம் ஒபாமாவிடம் இல்லை’ என்று தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் எதிர் முகாம் கர்ச்சித்தது. அதற்கு ஒரு பத்தி எழுத்தாளர் பதில் எழுதியிருந்தார் ‘ அமெரிக்காவின் கொள்கைகள் ஜெருசலெம் நகரில் வகுக்கப்படும்போது அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிக்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று. ‘அவர்கள்’ செயல் எல்லாம் புரிந்தவராக இருந்திருக்க வேண்டும் அந்த எழுத்தாளர்!

Continue Reading →