‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் ஆகஸ்ட் 2005 இதழ் 68 மன வெளிப்பாடுகளுக்கான ஒரு உயரிய சாதனம் கவிதை மொழியாகும் . கவிதை செய்தல் என்பது கலை . கலை அழகின் செறிவு , கருத்தின் பதிவு : மகிழ்ச்சியின் உறைவிடம் ப:ண்பாட்டின் , வளர்ந்த நாகரிகத்தின் சின்னம் . இந்தக் கலையின் பிறப்பிருப்பிடம் இயற்கை இந்த இயற்கை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற கொடைக்கானல் மலைத்தொடரில் அமைந்திருக்கும் கானல் காட்டில் கவிதைகளும் , கவிகளும் ஜுன் 18 , 19 தேதிகளில் முகாமிட்டிருந்தனர் . கல் கற்பிக்கிறது சிற்பிக்கு . வர்ணங்கள் ஓவியனுக்கு என சொல்லிக் கொண்டு போகும்போது சிற்பம் , ஓவியம் , இசை , நடனம் , பஞ்சபூதம் , மனித தேக விஞ்ஞானம் , மரம் , செடி கொடி , சின்ன ரீங்காரத்திலிருந்து நுட்பமான பறவை ஒலிகள் , உயர்ந்த மரங்கள் வண்ணப்பூக்கள் , முட்புதர்கள் என இயற்கை சார்ந்த அத்தனையும் கவிஞனுக்கு ஏதாவதொன்றை கற்பித்துக்கொண்டேயிருக்கிறது . பலசமயம் இயற்கையின் சமீபம் கிட்டாமல் , ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டு , ஜன்னல் வழியே தவணை முறையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு நல்லதொரு செறிவான , மாறுபட்ட , சந்தோஷமான அனுபவமாக அமைந்தது இந்த இரண்டு நாள் மூகாம் .
18 ஆம் தேதி காலை பட்டிவீரன்பட்டியில் நடந்த காலை கூட்டத்தில் , அந்தப் பகுதியைச் சார்ந்த கவிஞர்களின் கவிதை வாசிப்பும் , தொடர்ந்து திரு. மாலன் ,திரு. பொன்னீலன் அவர்களின் உரையும் இடம் பெற்றது . பகல் உணவிற்கு, ஒரு வேன் மற்றும் இரண்டு கார்களில் கானல் காடு பயணம் . பகல் உணவை முடித்துக் கொண்டு ,“அறிதலும் ஆக்கமும்” என்ற அறிமுக , மற்றும் கவிதை பற்றிய விவாதத்திற்கான அமர்வை எழுத்தாளர் திரு . மாலன் தொடங்கிவைத்தார் . கவிஞர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டு கவிதைகள் { இரண்டு மட்டும் }வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் . கவிதை வாசிப்பில் பங்கு பெற்றவர்கள் வைகை செல்வி , கிருஷாங்கிணி , திலகபாமா , தேவேந்திர பூபதி , பா . வெங்கடேசன் ,நித்திலன் , மதுமிதா , இந்திரன் , பா. சத்திய மோகன் , ஆர் . வெங்கடேஷ் , மாலன், ரெங்கநாயகி . அறிமுக உரையுடன் நிறுத்திக்கொண்டார் பிரம்மராஜன் . திரு . பழமலய் எழுதிய கவிதையை அவர் மாணவர் ஒருவர் ஒப்பித்தார் { பாராமல் } என்ன காரணமோ வாசித்த கவிதைகள் விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை.
கவிதை வாசிப்புக்குப்பின் திரு . மாலன் ‘கவிதை செய்தல் / கவிஞனின் பார்வை’ என்ற பொதுவான அம்சங்களோடு விவாதத்தை தொடங்கிவைத்தார் . மரபிலிருந்து விலகி ,நகர்ந்து கொண்டிருக்கும் கவிதை பற்றியும் , புதுக்கவிதை தனக்கென்று ஏதாவதொரு இலக்கணத்தைக் கொண்டிருக்கிறதா என்பது பற்றியும் பேசினார்கள் . தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதைகளை “நவீன கவிதை “ என்றே குறிப்பிடவேண்டும் என்றார் பிரம்மராஜன் . இந்த நவீன கவிதைபற்றிய விவாதம் “private poetry & public poetry” என்று தொடர்ந்தது . private poetry என்பதை கடுமையாக சாடி அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்துப் பேசினார் கவிஞர் பழமலய் . தற்போதைய கவிதைகள் private poetry என்று சொல்லும்படியாக , அக வயக் கவிதைகளாக இருக்கின்றன . தன் விருப்பம் , தன் சோகம் , தன் கோபம் என்று கவிஞன் தன்னைப்பற்றிய பிரஸ்தாபிக்கும் private poetry யை விட , சமுதாயப் பிரக்ஞை கொண்ட public poetry {?} மேலானது என்ற ரீதியில் பேசினார் பழமலய் . இதற்கு எதிர்வினையாக தன்வயப்பட்டு கவிதை செய்யும் அத்தனை கவிஞனும் கவிஞனின் கனவு திரும்பத் திரும்ப கவிதை வழியாகச் சொல்லப்படும்போது சுற்றி நடக்கும் தவறுகள் நின்று போகவும் வாய்ப்பு உண்டு . கிட்டத்தட்ட கவிஞன் ஒரு influence ஆகச் செயல் படுகின்றான் என்ற ரீதியில் பேசியவர் , கவிஞனின் பிரக்னை , ஆதர்சம் எல்லாமே உலகம் முழுவதும் இனிமையும் அமைதியும் பரவ வேண்டும் என்ற கனவு மட்டுமே இந்தக் கனவு காண்பது , கவிதை வழி அதை express செய்வதுதான் கவிஞனின் வேலை என்று ஏன் இதை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பேசினார் . அப்போதுதான் கவிஞர்களைச் சுற்றியிருக்கும் “ஒளிவட்டம்” பற்றிய பேச்சு மறுபடியும் எழுந்தது . {தொடக்கத்தில் திரு . மாலன் குறிப்பிட்ட ஒளிவட்டம் மொழியின் உயரிய வெளிப்பாடன கவிதையாத்தலை செய்து வரும் , “இருண்மைத்தன்மை” என்ற வாசகக் கருத்துக்கு பதிலாகவே இந்த “ஒளிவட்டம் “ என்ற அம்சத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடும் : வித்வத்கர்வமே அந்த ஒளிவட்டம் மற்றும் அதில் தவறில்லை என்பதான விவாதம் தொடர்ந்தது . கவிஞர் , மதுமிதாவிற்கு இந்த “ஒளிவட்டம்” பற்றிய ஐயம் கடைசிவரை இருந்துகொண்டே இருந்தது . மறுபடியும் , மரபு மீறல் மட்டுமே புதுக்கவிதையாகுமா என்ற விவாதம் மேற்கொள்ளப்பட்டது (. ஒரு ‘இன்ஃபார்மல்’ முகாம் என்பதால் அட்டவணைப்படியான விவாதங்களோ , கலந்திரையாடலோ நடக்க வாய்ப்பில்லை } வெறும் மரபு மீறல் கவிதையாத்தலில் இருக்க முடியாது : கூடாது . மரபுடைத்தல் என்பது மற்ற டிஸிப்ளினில் {அதாவது இசை , ஓவியம் என்ற மற்ற கலைகளில் நடக்கும் பொழுதுதான் (நடந்தாலொழிய) இலக்கியத்தில் , குறிப்பாக கவிதையில் , :வரலாறு ரீதியான “ மரபுடைத்தல் சாத்தியமாகாது என்று குறிப்பிட்டார் பிரம்மராஜன் .