மனக்குறள் -19 -20 -21!

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -19  தெய்வத் தமிழ்மொழி

தமிழா உலகந் தனையே வரித்த
அமிழ்தின் மொழியாய் அறிக!

பேசும் மொழியே பெரிதாம் புரிதமிழ்
தேசம் வழங்கும் துணை!

மக்கள் மொழியே வணங்கல் மொழியாமே
புத்திக் கிதுவே புகல்!

வணங்கும் மறைமொழி மண்ணின் அறிவாய்
இணங்கும் இறைமொழி என்ப!

செய்யுள் இலங்கும் சிவனார் மொழியைப்
பொய்யில் அமிழ்த்தால் பிசகு!

முதன்மொழி மூத்த முகையெனப் பூமிப்
பதமொழி சொல்வர் பகர்!

எதுசொல நின்றும் புரிதலே காணாய்
விதிமொழி என்றே விளம்பு !

தெரியா மொழியினைத் தெய்வம் துதிக்கும்
சரிமொழி என்பதா சாற்று?

பிள்ளை அகவல் பெருமானார் வாசகம்
வள்ளலா ருந்தமிழ் வான்!

திருக்குறள், காப்பியம் தேவாரம் ஆழ்வார்ப்
பிரபந்தங் கூறும் தமிழ்

Continue Reading →

சிறுகதை: அக்கா + அண்ணை + நான்..?

முல்லைஅமுதன்இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது.

‘அப்பாடா’

பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது என்பதை விட பழகிக்கொள்ள மனிதர்கள் கிடைத்ததும் மகிழ்வைத் தந்ததென்றுதான் சொல்லவேண்டும். சாப்பாட்டுடன் அறைக்குமாக கிழமை வாடகையாகத் தரவேண்டும் என்பதே பேச்சு. எனினும் அவ்வப்போது கிழமை தவறியும் விடுகிறது.ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும்…அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்கு, அப்பாவின் ஆஸ்துமாவிற்கு மருந்தெடுக்க… கல்லூரிக்குப் போகமிதிவண்டி வாங்க பிரியப்பட்ட தங்கைக்கு…இன்னும் இன்னும் தேவைகள் அதிகமாகவே  மனதை அரிக்கும்..இரவு வேலை..பகலில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பகுதிநேரவேலை என தும்படிக்கவேண்டியிருந்தது…சம்மலமும் வரத் தாமதமாகும்.சண்டைபோடவும் முடியாத இக்கட்டு..இவற்றையெல்லம் அறிந்து எனக்கென விட்டுக்கொடுத்து சமாளித்தபடி …வாடகை கேட்டு நெருக்கடி தராமல் இருக்கும்படியான வீட்டுக்காரர்…மணியண்ணை..கம்பீரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மனிதன் என்கிற உயிர்க்கூட்டைச் சுமந்தவாறு தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவர்.அவரின் மனைவியோ எப்போதும் அலைபேசியை நோண்டியபடியே இருப்பவள்.சமைத்தபடியே காதுக்குள் அலைபேசியை செலுத்தி…தலையை ஒருக்கழித்தபடி பேசிக்கொண்டுப்பார்..கை அலுவலில் இருக்கும்…உடுப்புத் தோய்க்கும்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார்…கலகலப்பானவர்.  

‘தம்பி சாப்பிட்டியே..கறி பிடிச்சுதோ?..’

‘ஓமோம்’ தலையசைப்பேன்..

மணியண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடி நகர்வார்.

மனைவியின் சாப்பாட்டின் ருசி அவருக்குத்தான் தெரியும்.

குறை சொல்லும்படியாக இல்லை..

நன்றாகத் தான் அவர் சமைப்பார்.

‘அக்கா’

‘கடைப்பக்கம் போறன்..என்ன வேணும்?..’

சிலவற்றைச் சொல்லுவார்..சில சமயங்களில் வேண்டாம் என்பார்..

Continue Reading →

மரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் ! (இந்திய சுதந்திரதினக் கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்எனை  ஈன்ற  மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!

வீட்டைப்  பாரு : நாட்டைப்  பாரு
என்பார்கள் !     
வீட்டைப்  பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப்  பார்க்கின்றேன் !

பெற்ற  சுதந்திரத்தைப்,
பெருமையுடன்  காத்துவிட ,
பெறற்கரிய  குடியரசின்,
பேரதனை  நிலை நிறுத்த,

நாட்டைக்  காப்பதற்காய்,
எல்லைப்  புறத்தில், 
இராணுவப்  படையில்,
இன்று  நானும்  ஒருவன் !

பனிபடர்ந்த  மலைகளின் சாரலில்,
மரணத்தின்  விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும்  எனக்குள்  சுழல்வது,
உந்தன்  நினைவுகளே !

Continue Reading →

ஆய்வு: “குவளை உண்கண் குய்ப்புகை கமழ? கழும? – மூலபாட ஆய்வியல் நோக்கு”

முன்னுரை

ஆய்வுக்கட்டுரைதங்கள் உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் கவிதைகளாக வடித்தெடுப்பதில் சங்ககாலக் கவிஞர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதற்குச் சங்கப்பாக்களே சான்று. ஏதேனும் ஒரு பாவகையில் அக்கருத்துகள் பாடல் வடிவில் வெளிப்படும் பொழுது தாங்கள் கூறவந்த கருத்துக்களுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவது புலவரின் மாண்பு. அப்பாடல்களுள் பெரும்பான்மை பலநூறு ஆண்டுகளைத் தாண்டி இன்றும் கிடைக்கின்றன என்றாலும் காலப்போக்கில் சிற்சில மாற்றங்களையும் அவை பெற்றுள்ளன என்பது இயற்கைத்தன்மைத்து.  இயற்கையான நிகழ்வு சிற்சமயம் செயற்கையாய் அமைவதும் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக ஆராயும் ஆய்வே மூலபாட ஆய்வு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கு அடித்தளமிட்டவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களுக்குப்  பின்  ஏடுகளில் இருந்த  இலக்கண, இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கிய பொழுது இத்திறனாய்வுப் பார்வை இன்னும் வலுப்பெற்றது. குறிப்பாக ஒரே நூல் பலரால் உரை மற்றும் பதிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொழுது பல்வேறுவகையான கருத்துக்கள் தோன்றின. பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பெனப்பட்ட சொற்களை மூலபாடம், பாடம் என்றும், ஏற்பில்லாதவற்றைப் பாடபேதம், பிரதிபேதம் என்றும் கூறத்தொடங்கினர். ஆயினும் பதிப்பாசிரியர், உரையாசிரியர் ஆகியோரைத் தாண்டி அப்பிரதியை  வாசிக்கும் வாசகர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை ஆராய்வது இன்றைய தேவையாக இருக்கின்றது. இந்நோக்கில் சங்கஇலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையின் 167 ஆம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்த அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”
– குறுந்.167

கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட இப்பாடல் “கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது” எனும் துறையில் அமைந்துள்ளது. கற்புக் காலத்தில் தலைவி தலைவனுடன் இல்லறம் நடத்தி வந்த பொழுது அதைப் பார்த்துவிட்டு வந்த செவிலித்தாய், நற்றாயிடம் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கினை எடுத்துக்கூறும் சூழலில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது .    இப்பாடலின் மூன்றாம் அடியாக அமைந்துள்ள “குவளை உண்கண் குய்ப்புகை கமழ” எனும்அடி மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. இவ்வடியின் இறுதிச் சொல்லாக அமைந்த ‘கமழ’ எனும் சொல் ஆய்வின்  மையப்பொருளாக அமைகின்றது.

Continue Reading →

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள் 10

அநாமிகா (லதா ராமகிருஷ்ணன்  கவிதைகள் 10!)

1.கைவசமாகும் நட்சத்திரங்கள்!

காலடியில் அப்படி ஒளிர்ந்துகொண்டிருந்தது
ஒரு துண்டு ஜிகினாத்தாள்!
பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது
சில நூறாண்டுகள் இருக்கலாம்!
சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து
தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்
அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்
தீட்டி மேகங்களாக்கி
அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில
சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய
நிறைய நிறைய மழைபொழிந்தது!
கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்
கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து
நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து
’நட்சத்திரங்கள்’ என்றாள்!
’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’
என்ற கேள்வியைக் கேட்கநினைத்து
அவளை ஏறிட்டுப்பார்த்தபோது
கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின
சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!

Continue Reading →

சிறுகதை: “ஒரு முழு நாவல்”

ஶ்ரீராம் விக்னேஷ்– “கனடாத்    தமிழ்   எழுத்தாளர்   இணையத்தின்  வெள்ளிவிழாவை முன்னிட்டு  நடத்தப்பட்ட ,சர்வதேச  அளவிலான சிறுகதைப்  போட்டி –  2019 ல் இந்தச் சிறுகதை, மூன்றாவது பரிசு பெற்று,   உலக அரங்கில்    எழுத்தாளன்  என்னும் அங்கீகாரத்தைப்  பெற்றுத் தந்தது. இதற்காக மாண்புடை கனடாத்    தமிழ்   எழுத்தாளர்   இணையத்துக்கு என் மனம் நிறை  நன்றி! நன்றி!” – ஸ்ரீராம்  விக்னேஷ்


பத்திரிகைத்துறையில்  எனது   பதினெட்டு  ஆண்டுகால  அனுபவத்தில், ஓய்வுபெற்ற   தமிழாசிரியர்   திரு.கங்காதரன்   போன்ற  ஒரு  விமர்சகரைப்  பார்த்ததேயில்லை. சொல்லப்போனால்,   எனது  பள்ளிக் காலத்திலிருந்து,  பல்கலைக்கழக   நாட்களிலும்,   பின்  பத்திரிகை  நிருபராகப்  பணிபுரிந்த  வேளையிலும்,  தொடர்ந்து  அவரது  விமர்சனங்களை   அவ்வப்போ, பல  பத்திரிகைகளில்  படித்திருக்கின்றேன்.  ஆனால்,   தற்போது….  மூன்று   ஆண்டுகளாகப்,   பொறுப்பாசிரியராய்  நான்  சென்னையிலே  பணியாற்றும் “சிறகுப்பேனா”  வாரப்பத்திரிகைக்கு   அவரிடமிருந்து  விமர்சனங்கள்  அடிக்கடி  வந்துகொண்டிருக்கும்  சந்தர்ப்பத்தில்தான்,  அவரைப்பற்றிய   விபரங்களை   என்னால்   அறியமுடிந்தது.

கங்காதரனுக்கு   வயது  எழுபது. மனைவியை  இழந்தவர்.  திருநெல்வேலி  மாவட்டம்   –   வீரவ நல்லூரில்  ;    மகன்,  மருமகள், பேத்தி    என்ற உறவுகளுடன்  வாழும்  அவர்,  தனது  மாதாந்த  ஓய்வூதியப் பணத்திலே   பாதிக்குமேல்,  தன்னுடைய  இலக்கியப்  பசிக்குத்  தீனிபோடுவதில்   செலவு  செய்கின்றார்.   உள்ளூர்  நூலகத்துப்  புரவலர்களில்  ஒருவராக  இருக்கின்றார்.      அஞ்சல் அட்டை,  அஞ்சல் உறை,  மற்றும்  தபால் தலை, ஆகியன  வாங்கி  வைத்துவிட்டு,   பத்திரிகைகளுக்கும், அதிலே  எழுதும் படைப்பாளிகளுக்கும்  என, மாறிமாறித்  தனது மனப்பூர்வமான   பாராட்டுக்கள்,   கண்டனங்கள்,   சுயகருத்துக்கள் ஆகியவற்றை  எழுதி  அனுப்புகிறார்.
தமிழ் சம்பந்தமான  மாநாடுகள், விழாக்கள்  எங்காயினும்  அங்கிருப்பார்.         நாலாவது  தமிழாராய்ச்சி   மாநாடு   யாழ்ப்பாணத்தில்   நடந்தபோது, அங்குசென்றவர்   சிங்களப் போலீசின்   தாக்குதலுக்குள்ளாகிப்,    பட்ட  காயங்களைக் காட்டி,  “வீரமண்ணில் கிடைத்த  விழுப்புண்” என்று இப்போதும்   பெருமை   பேசுகின்றார்.

“சிறகுப்பேனா”வில்,  “மெய்க்கீர்த்தி” என்னும்  புனைபெயரில்,  நான் எழுதிவரும்,  “அவள் ஒரு காவல்தெய்வம்” என்னும்   தொடரில்,  இதுவரை வெளிவந்த   நாற்பத்தி ஆறு  தொடருக்கும், தவறாது  விமர்சனக்  கடிதங்கள்  எழுதியிருந்தார்.  பேச்சளவிலேதான்  அவை  கடிதங்கள்.  ஒவ்வொன்றும்  திறனாய்வுத் தீபங்கள்.  “யார் சார் அந்த மெய்க்கீர்த்தி?  அவரை  நேரிலே  பார்க்கவேண்டும்போல   இருக்கின்றது….”      அடிக்கடி   கேட்டு   எழுதுவார்.

கதையின் நாயகி சுமித்ரா. வயது இருபத்தெட்டு. உறவினர்  யாருமில்லை. எட்டு  வயதில்  பெற்றோரை இழந்து,   “அநாதை”  ஆகியவள்.  குழந்தைகளைக்  கடத்தி விற்கும்   கும்பல் ஒன்றால்   கடத்தப்பட்டு,  பம்பாயில்  விற்கப்படுகின்றாள்.  ஆனால், அங்கிருந்து தப்பி,  குழந்தையற்ற   பணக்காரத்  தம்பதிகள்  ஒன்றால்,     தத்தெடுக்கப்படுகின்றாள்.  காலப்போக்கில்,  சுமித்ராவின் சுவீகாரப் பெற்றோரும்  காலமாக, அத்தனை  சொத்துக்கும் ஒரே வாரிசான  அவள்,  அவற்றையெல்லாம் விற்றுவிட்டு  ஊருக்கே  வந்து,     “அநாதை ஆசிரமம்” ஒன்றை  நிறுவுகின்றாள்.   கணிசமான அளவு  குழந்தைகள்  –  முதியோர்கள் சேருகின்றனர்.

Continue Reading →

பெண்கள் – பிணி தீர்க்கும் சமய சஞ்சீவினிகள்!

woman art by rachanaமுனைவர் ஆர். தாரணி – முனைவர் ஆர். தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினால், உன்னதமான பல  ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மக்களும் அறிய வேண்டும் என்ற துடிப்பில் அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மிகவும் விரும்புவது காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஆங்கிலக் கவிகளான ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த், பைரன், W. B.  யேட்ஸ் போன்ற கவிகளின் எழுத்துக்கள். அதனுடன், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற பொன்மொழிக்கேற்ப, பயணம் மேற்கொண்டு பல நாடுகளில் உள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, மற்ற நாடுகளின் மேன்மைகள், மாறுபட்ட கலாச்சாரங்கள்  என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள மிகுந்த ஆவல் கொண்டவர். இதுவரைக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வெளி நாடுகளையும் , இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் பற்றி அறிந்து கொள்ள பயணம் சென்று வந்தவர். உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள  முனைப்புடன் இருப்பவர். அவரின் இந்தக் கட்டுரையானது பெண்ணின் படைப்பு என்பதே ஒட்டுமொத்த மனித குலத்தின் நலத்தைப் பேணிப் பராமரித்துக் காக்கத்தான் என்ற நோக்கில், இல்லத்திலும், சமூகத்திலும் பெண்கள் தங்களைச் சார்ந்திருப்போரின் உடல்நலம் காப்பதில் எவ்வாறு  தங்கள்  பங்களிப்பை அளிக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. –


“விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!” – மகாகவி பாரதியார்

மனிதகுலம் உருவானது பற்றிய கற்பனைக்கதைகள் அல்லது ஒருவேளை கட்டுக்கதைகள் என்றாலும் கூட, அவற்றின் மூலம் இன்றைய சமுதாயம்  ஆதி முதலாக உதித்த ஆதாம் மற்றும் அவனின் அன்புக்குப் பாத்திரமான ஏவாள் முன்னொருகாலத்தில் ஜீவித்திருந்திருப்பார்கள் என்றும் அவர்களைக் கடவுள் தனது கண்ணின் மணிகளாகக் கருதி அவரின் ஈடன் தோட்டத்தில் எல்லாவித சலுகைகளையும் பெற்று, கவலையற்று சுற்றித் திரிந்து வாழ்வை அனுபவிக்க முழுசுதந்திரமும் முதலில் கொடுத்திருந்தார் என்று இன்றளவும் பெரிதும் நம்பும்அளவு செய்திருக்கிறது. மனித குலம் முழுமைக்கும்  மூதாதையரான அவர்களின்  அப்படிப்பட்ட சுதந்திரமும், மற்றட்ட மகிழ்வும் இரண்டாக பிளவுபட்டு துக்கித்து நிற்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் பாம்பு வடிவச்சாத்தானின் கேடு விளைவிக்கும் தூண்டுதலால் என்பதும் அனைவரும் அறிவர்.

இந்தக் கதை, கற்பனையாக இருந்தாலுமே, இது தோன்றிய காலம் முதலில் இருந்தே, ஏவாள் சாத்தானின் முகஸ்துதியில் மயங்கி தன் அன்புத் தோழனை வற்புறுத்தி கடவுள் தடை செய்த கனியைச் சுவைக்கச் செய்ததினால், அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டு, ஈடன் என்னும் சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, துக்கமும், துன்பமும் நிறைந்த புதிய உலகான  பூமி வாழ்வை  அடைய நேரிட்ட காரியத்தைப் பற்றி  பல்வேறு தீவிர விமர்சனங்கள் என்றென்றும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கற்பனைக்கதையில் வரும் ஏவாள் எனும் பெண்ணானவள் துரோகம் செய்யத்தூண்டும் குற்றவாளியாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆயினும் இந்தக் கதையில்  உள்ள நேர்மறையான ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தோமானால், ஏவாளின் பழம் சுவைக்கும் விருப்பம் வெளிப்படையாக  மேலோங்கி நிற்பதுடன், அதிலும், மனித குலத்துக்கு மிகச் சிறந்த ஆரோக்யத்தைக் கொடுக்கக் கூடிய ஆப்பிள் கனியை, ஒரு ஆப்பிளை தினமும் சுவைத்தால், மருத்துவரை தூரத் தள்ளி வைக்கலாம் என்று இன்றளவும் உலா வரும் பழமொழிக்கேற்ப, அவளின் அன்புக்கணவனை  வற்புறுத்தி சுவைக்கத் தூண்டிய செயல் தெளிவாகப்புலப்படும்.

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 343: பல்வகைச் சிந்தனைகள்!

விஜை சேதுபதி  முத்தையா முரளிதரனாக...

முத்தையா முரளிதரன் சிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரன். அதே சமயம் முரளிதரனின் இலங்கைத்தமிழர்கள் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முரளிதரன் என்னும் ஆளுமையை வைத்து ஒருவர் திரைப்படம் தயாரித்தால் அதில் நடிக்கும் நடிகர் ஒருவரை அவ்வேடத்தில் நடிக்கக்கூடாது என்று கூறுவது நடிகர் ஒருவரின் நடிப்புச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.  எடுக்கப்படும் திரைப்படம் முரளிதரன் என்னும் ஆளுமையைக் குறை, நிறைகளுடன் வைத்து வெளிப்படுத்துகின்றதா என்று பார்க்க வேண்டுமே தவிர அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர் ஒருவரைப்பார்த்து நீ அவ்வேடத்தில் நடிக்கக்கூடாது.நடித்தால் உன் படத்தைப்புறக்கணிப்போம் என்று வெருட்டுவது சரியான செயற்பாடு அல்ல. முரளிதரனின் ஆளுமையை எதிர்ப்பவர்கள் படத்தைப்புறக்கணியுங்கள். அது பற்றிய உங்கள் விமர்சனத்தை முன் வையுங்கள். ஆனால் நடிகர் ஒருவரைப்பார்த்து நீ அவ்வேடத்தில் நடிக்காதே என்று கூறுவதன் மூலம் அந்நடிகனின் நடிப்புச் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.

யூதர்களை இனப்படுகொலை செய்த அடொல்ஃப் ஹிட்லரை வைத்து எத்தனை  திரைப்படங்கள் , தொலைக்காட்சித்திரைப்படங்கள் வெளியாகின. இத்திரைப்படங்களிலெல்லாம் ஹிட்லரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். நடிகர்கள் பலர் ஹிட்லரின் வேடங்களில் நடித்திருப்பார்கள். யூதர்கள் யாரும் இத்திரைப்படங்களில் நடித்த நடிகர்களை எவரையாவது பார்த்து  ஹிட்லரின் வேடத்தில் நடிக்காதே என்று கூறியிருப்பார்களா? அப்படிக்கூறியிருந்தால்கூடக் கலையுலகம் அதனை ஏற்றிருக்குமா?

நாம் எதிர்க்கவேண்டியது அல்லது விமர்சிக்க வேண்டியது முரளிதரனின் திரைப்படம் வெளியாகும்போது அத்திரைப்படத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உண்மையினைத்திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றைத்தாமே தவிர அப்படத்தில் முரளிதரனாக நடிக்கும் நடிகரை அல்ல. யுத்தச் சூழலில் இந்தியப்படைகளுடன், இலங்கைப்படைகளுடன் எல்லாம் பல்வேறு முரண்பாடுகள் காரணமாக இயங்கியவர்களையெல்லாம் இன்று இலங்கைத்தமிழ் மக்கள் தம் அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமானதொரு சூழலில் முரளிதரனின் கூற்றுகளை அதுவும் பலவருடங்களின் முன்னர் கூறிய கூற்றுகளை வைத்து அவருக்கெதிராகப்போர்க்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தைத்தருகின்றது. இத்தனைக்கும் அவர் அரசியல் தலைவர்களில் ஒருவர் கூட அல்லர்.

Continue Reading →