’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்

’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதுபோல், இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி. ஒரு மசாலாப் படத்திற்குரிய எல்லா இலட்சணங்களும் இதற்கு உண்டு என்று அப்பட்ட உண்மைத்தனத்தோடு இந்த நிகழ்ச்சி பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறியிருந்தால், பின், இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமிருக்காது.

அப்படிக்கூட உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பெயரில் தகாததாக எந்தக் கருத்தையாவது, காட்சியையாவது ஒலி-ஒளிபரப்பினால் கண்டிப்பாக பொதுமக்கள், பார்வையாளர்கள் கேட்பார்கள் தான்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கூட்டுப் பாலியல் வன்முறை தொடர்பான காட்சிகள், வசனங்கள் ஒளிபரப்பட்டதற்காய், குடும்பத்தார் – குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சியில் அத்தகைய காட்சி ஒளிபரப்பட்டதற்காய் வழக்கு தொடரப்பட்டு அதற்காய் அபராதம் விதிக்கப்பட்டதோடு அத்தகைய காட்சியமைப்புக்காய் ஒரு வாரம் அந்த நாடகத்தின் ஆரம்பத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், ‘பிடிக்காவிட்டால் சேனலை மாற்றிப் போகவேண்டியது தானே. கைவசம் ரிமோட் இல்லையா என்ன?’ என்று கேலி பேசி கடந்துபோய்விடப் பார்ப்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் தோன்றுகிறது.

தொலைக்காட்சி மெகாத்தொடர் நாடகங்கள் முன்வைக்கும் பெண் குறித்த பிற்போக்குக் கருத்துகள் கொடூரமானவை. அதற்காக, அவற்றோடு ஒப்பு நோக்கி நாங்கள் குறைவாகத்தானே பழித்தோம் என்று BIGG BOSS தப்பித்து விட முடியாது. அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், Promotional செயல்பாடு கள், ஏதோ அண்டப் பேரதிசயம்போல் அதைப் பற்றி ஊடகவெளிகளி லெல்லாம் ஒரே முழக்கமாயிருந்தது,

சமூகத்தின் நான்காவது தூண் என்றும் பத்திரிகைச் சுதந்திரம் என்றும் முழங்கியதுபோக ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்ச்சிக்காக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தால் அழைக்கப்பட்டு, அவர்கள் பிக் பாஸ் பங்கேற்பாளர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்பதை பத்து கேள்விகளாக எழுதித்தரும்படி அந்த நிறுவனத்தால் பணிக்கப்பட்டு, அந்தப் பத்தில் மூன்றை மட்டும் அந்த நிறுவனம் அனுமதித்து அவற்றிலும் ஒன்றை மட்டுமே ஒளிபரப்பிய பிக் பாஸின் அதிகாரம் எத்தனை விரிந்து பரந்தது என்பதை ஊகிக்க முடிகிறது.

அதில் பங்கேற்ற மதுமிதா என்ற நடிகை தமிழ்க் கலாச்சாரம் என்ற சொற்றொடரை இரண்டு மூன்று முறை கூறியதற்காக அவரை ஏதோ பிரிவினைவாதி போல் பாவித்த, சித்தரித்த போக்கு சரியல்ல. அப்படியே அவர் அதை வெற்றிபெறுவதற்கான உத்தியாகக் கையாண்டிருந்தாலும் அந்த எண்ணத்தை அவருள் தோற்றுவித்தது பிக் பாஸ் சீஸன் 2இல் அத்தகைய கருத்துகள் மொழியப்பட்டதும் அவற்றை சம்பந்தப்பட்ட சேனல் தடை செய்யவில்லை என்பதும்தான்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமலஹாசன் பிக் –பாஸ் இரண்டாம் சீஸன் சமயம் தமிழகத்தில் பெரிய அரசியல்தலைவராக உருவெடுத்துவிடு வார் என்ற எதிர்பார்ப்பு மக்களில் சிலருக்கு இருந்ததுபோலவே அந்த சேனலுக்கும் இருந்திருக்கலாம். அதனால் அவர் அரசியல் சிந்தனைகளாக, தத்துவங்களாக நிறைய பேச அந்த சேனல் – விஜய் டிவி அனுமதித்திருந்தது. சீஸன் 3ன் சமயம் அரசியல்வாதி கமலஹாசன் போகவேண்டிய தூரம் அதிகம் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டபடியால்  ‘தனது ஆயிரத்தோரு + நிபந்தனைகளில் ஒன்றான பிக் பாஸ் வீட்டுக்குள்ளே அரசியல் பேசக்கூடாது என்ற நிபந்தனையை இறுக்கமாகப் பின்பற்றத்தொடங்கிவிட்டது.

கமலஹாஸனே அதிகம் அரசியல் பேசாத நிலையில் நிகழ்ச்சிப் பங்கேற்பாளரான மதுமிதா ‘ஆளுக்கொரு குறுஞ்செய்தியைச் சொல்லுங்கள்’ என்று கேட்கப்பட்ட போது வருணபகவானும் கர்நாடகாக்காரரோ – தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதில்லையே என்பதாக கருத்துரைத்ததற்கு மற்ற பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் அவரை (மதுமிதா தமிழ்க் கலாச்சாரம் பற்றிப் பேசியதற்குப் பிறகுதான், அது தொடர்பான விவாதங்களுக்குப் பிறகுதான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சில பெண்களின் ஆடைகள் ஓரளவுக்கேனும் கண்ணியமாக மாறின என்று சொன்னால் மிகையாகாது) கூட்டாகப் பழித்து, பரிகசித்து, அழவைத்து இறுதியில் கையை அறுத்துக்கொள்ளும் அளவுக்குத் தள்ளியிருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீஸன் – 3இல் ஒரு கன்னடப் பெண்ணும் – அவர் தமிழில் தான் அதிகம் நடித்திருக்கிறார் என்று அறிகிறேன் – இருந்ததால் அவர் மனம் நோகும் என்று மதுமிதாவின் கருத்தைத் தடுத்திருக்கலாம். அரசியல் பேசலாகாது – நீங்கள் கூறியது ஒளிபரப்பப்படாது என்று சுட்டிக்காட்டியிருக் கலாம்.

அவ்வாறே, 24 X 7 நிகழ்ச்சியை படம்பிடித்துக்கொண்டிருக்கும், அதாவது கண்காணித்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியாளர்கள் அதைச் செய்த கையோடு மதுமிதாவை இனியும் பழிக்கக் கூடாது, gang-ragging செய்யக்கூடாது என்று சம்பந்தப்பட்ட மற்ற போட்டியாளர்களிடம் எடுத்துரைத்திருக்கலாம். நடிகர் சரவணன் என்றோ செய்த ஈவ்-டீசிங்கைப் பற்றிச் சொன்னதற்காக அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியவர்கள், இப்போது, தங்கள் கண் முன் ஒரு பெண் இப்படி மதிப்பழிக்கப்படுவதைப் பார்த்தும் வாளாவிருந்தது ஏன்?

[இந்த நிகழ்ச்சி ‘நேரலை நிகழ்ச்சியல்ல’ என்னும்போது நடிகர் சரவணன் கூறிய அந்தக் கருத்தை ’எடிட்’ செய்யாமல் வெளியிட்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ரசித்துக்கேட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் – நடிகர் கமலஹாஸன் ஆகியோரும் தவறிழைத்தவர்களல் லவா என்று நிறைய கேள்விகள் எழுந்தன. ஆனால், தன் அதிகார பலத்தால் விஜய் டிவி அவற்றையெல்லாம் புறமொதுக்கிவிட்டு தன் பிக்-பாஸ் ராஜபாட்டையில் பீடு நடை போட்டுக்கொண்டிருந்தது.]

சுய-வதை தவறு, அதைக் கையாண்டதால் அந்தப் பங்கேற்பாளரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றிவிட்டோம் என்பவர்கள், பிக் பாஸ் வீட்டினுள் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவமானங்களே அவரை அந்த நிலைக்குத் தள்ளியது என்பதைச் சிறுதளவு கூட எண்ணிப்பார்க்க மறுப்பது ஏன்? தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டி ருக்கக்கூடாது என்று கூறுபவர்கள் கொத்தடிமை முறையை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ’எலிமினேட்’ ஆகி வெளியே வந்தவர்களில் அந்த gang-ragging நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் ஒருவர்கூட மதுமிதா என்ற ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவே காண்பித்துக்கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட டிவி சேனல் அல்லது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவமானத்திற்காக ஒரு பேச்சுக்காவது மன்னித்துவிடும்படி சொல்லச் சொல்லி அறிவுறுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட மற்ற பங்கேற்பாளர்கள் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், சேனலும் அதுகுறித்து அலட்டிக்கொள்ளவேயில்லை.

மதுமிதா சொல்வது அப்பட்டப் பொய் என்றால் சம்பந்தப்பட்ட அந்த நாளின் குறிப்பிட்ட அந்த இரண்டுமணிநேர நிகழ்வின் பதிவை ஒளிபரப்பலாமே. பிக் பாஸ் பற்றிப் பேசிக்கொண்டேயிருக்க ஓராயிரம் இணைய சேனல்கள் ஓயாது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனவே.

அந்தப் பெண் தமிழ்க் கலாச்சாரம் பற்றிக் கூறியதற்காக அவரிடம் அரசியல் பேசவேண்டாம் என்று அறிவுறுத்திய அதே நிகழ்ச்சியில்தான் இன்னொரு பங்கேற்பாளரான சாண்டி திரையில் தெரியும்போது ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தொடங்கும் திரைப்படப்பாடல் ஒளிபரப்பப்பட்டது. அது எப்படி என்று யாரும் கேட்கக்கூடாது.

இந்த நிகழ்ச்சியின் இறுதிநாள் விழாவில் நடிகை மதுமிதாவும், நடிகர் சரவணனும் இடம்பெறவில்லை. ஆனால், மதுமிதாவின் கணவர் இறுதிநாள் விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருப்பதாகக் காட்டப்பட்டது. இப்போது முன்பொரு நாள் கலந்துகொண்டதை இறுதி நாள் விழாவுக்கு வந்திருந்ததாக பொய்யாகக் காட்டியிருப்பதாக மதுமிதாவின் கணவர் ஒரு காணொளிக் காட்சியில் கூறியிருக்கிறார்.

இந்தத் தில்லுமுல்லெல்லாம் போதாதென்று ‘WE ARE THE BOYS’ என்று பிக்-பாஸ் பங்கேற்பாளர்கள் சாண்டி, முகேன், தர்ஷன், கவின், லாஸ்லியா (ஒரு பெண்ணாக இருந்தும் லாஸ்லியா சக பெண் மதுமிதாவை மதிப்பழித்து அலைக்கழிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது.) எல்லோரும் பாடல் ஒன்று பிரபலமாகிக்கொண்டிருக் கிறது. ஆண்களின் நிலையை எடுத்துரைக்கும் பாவனையில் பாடப்பட்டிருந்தாலும் அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே ஆணாதிக்கம் தொனிக்கிறது – ‘WE ARE THE BOYS’.

இந்தப் பாடல்தான் இப்போது கல்லூரிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளி லெல்லாம் தவறாமல் இடம்பெறுகிறது என்கிறார்கள். இது கவலைக்குரியது.

இணையம் முழுக்க பல காணொளிகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என் எதிர்வினையாக கீழேயுள்ள பாட்டை எழுதினேன். ஆனால், பிக்-பாஸின் அதிகாரத்தின் முன், ஆணாதிக்கத்தின் முன் என்னுடைய இந்தப் பாடலெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமே.


பாட்டுக்குப் பாட்டு

’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்

ஆணென்ன பெண்ணென்ன என்று சொல்லிக்கொண்டே
WE ARE THE BOYS என்று கூவுவது நியாயமா?
நின்னா குத்தமில்லை நடந்தா குத்தமில்லே

பெண்ணைத் தனியாவோ எட்டுபேராகவோ ‘
Gang ragging செஞ்சா
அதுவென்ன மனிதநேயமா?
அதற்கு சட்டப்படி தண்டனை
என்னான்னு தெரியுமா?

நின்னா குத்தமா நடந்தா குத்தமா
இது உங்களுக்கு மட்டுமா?
ஒரு பெண் தன் கருத்தைச்
சொன்னா மட்டும் குத்தமா?
சூழ்ந்துகொண்டு கேவலப்
படுத்தலாமா மொத்தமா?
உங்களுக்கு வந்தா மட்டும்
ரத்தமா?
நீங்கள் செய்தது உத்தமமா?
கேட்பாரு பிள்ளையா
அலைஞ்சாக்கா பத்துமா?

உன் தாயும் பொண்ணுதான்
அக்கா, தங்கையும் பொண்ணுதான்
ஊரான் பெண்ணைப் பழிக்கும்போது
இருக்காதே யதை நினைக்காது.

ஊருக்குள்ளே நாலுபேர் உங்களைப்
பார்த்துகிட்டு இருப்பாங்க
நல்லவங்களா வாழ
நாலு சொல்லித் தருவாங்க.
கேட்டா கேட்டுக்கோ
கேட்காகாட்டி கெட்டுப்போ
செஞ்ச தப்பை சரி செய்ய
வாழ்நாள் போதாது
யப்போ யப்போ!

’வின்’ பண்ண இருந்தவளை
வீட்டுக்கு அனுப்பிவைத்த
பெண் பாவம் உங்களை
சும்மாதான் விட்டுடுமா?

புண்ணாக்கியதற்கு  வருந்தி
மன்னிப்பு கேட்டால்
மருவாதை தான் குறைஞ்சிடுமா?
மண்ணோடு மறைஞ்சிடுமா?

ஆறறிவு நமக்குண்டு
அதனினும் பெரிய மனசாட்சியுண்டு
அவற்றின்படி நடக்காதவர்
அகிலப்புகழ் பெற்றாலுமே
அஃறிணைக்கும் கீழாமே!
அறிவோமே நாமே!

 


THE CONDEMNED (2007 American Action Film) & THE BIGG BOSS

–  லதா ராமகிருஷ்ணன் –

முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில சேனலில் பார்க்கக் கிடைத்த படம் THE CONDEMNED.

கதாநாயகன் ஜாக் கான்ராட் மரண தண்டனைக் கைதியாக ஊழல்மிக்க சால்வடார் நாட்டுச் சிறையில் இருக்கிறான். (படம் பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டன என்பதால் கதையின் விவரங்களைத் துல்லியமாக நினைவிலிருந்து தர இயலவில்லை).

ஒரு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் புதிய பரபரப்பான, ‘உலகெங்கும் முதல் முறையாக’க் காண்பிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி லாபம் தேடும் வியாபார நோக்கோடு ஜாக்கையும், அவனைப் போலவே வெவ்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் வேறு சில கைதிகளை யும் (அதில் ஒரு பெண் கைதியும் உண்டு) ’விலை’ கொடுத்து வாங்கிவருவான்.

ஒருவரையொருவர் எதிர்த்துத் தாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் இறுதியில் உயிரோடிருப்பவருக்கு நிறைய பணமும் தண்டனையி லிருந்து விடுதலையும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு அவர்கள் ஏதோ காடு போன்ற பகுதியில் விடப் படுவர்.

அது ஒரு சட்டத்திற்குப் புறம்பான கொடூர விளையாட்டு. எங்கே நடக்கிறதென்பதும், எங்கேயிருந்து படம் பிடிக்கப்படுகிறது, ஒளிபரப் படுகிறது என்பதும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்பட் டிருக்கும்.

தண்டனையிலிருந்து விடுபடவேண்டி அந்தக் கைதி கள் ஒருவரை யொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொள்வது இணையதளம் மூலம் காண்பிக்கப்படும். ஒவ்வொரு கைதியின் கணுக்காலிலும் ஒரு டைம் பாம் இணைக்கப் பட்டிருக்கும். 30 மணிநேரம் கடந் தால் அது வெடித்துவிடும். 400 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட போட்டி தொலைக்காட்சி யைத் தோற்கடிப்பதே இந்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளரின் நோக்கம். நிகழ்ச்சி பரபரப்பாகப் பார்க்கப் படும்.

அப்படிப் பார்ப்பவர்களில் கான்ராடின் காதலியும் ஒருத்தி. கான்ராட் உண்மையில் போர்க்கைதியாக சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் விவரம் தெரியவரும். அந்தக் கைதிகள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்துக் கொண்டு மற்ற கைதிகளை ஒழித்துக்கட்டுவதும், அவர்களிடையே இருந்த பெண் கைதி மற்ற கைதிகளை தன் வசப்படுத்தி அவர்களை வீழ்த்துவதும், இறுதியில் அவளும் கொடூரமாகக் கொலைசெய்யப் படுவதும் என்று எல்லாம் காண்பிக்கப்படும்.

இவற்றைப் படம்பிடித்துக்கொண்டிருப்பவர்களில் சிலருக்கு போகப் போக நிகழ்ச்சியின் குரூரமும், அதைத் தயாரிப்பவனின் குரூர மகிழ்ச்சியும் பிடிக்காமல் போகும். சிலர் நேரடியாகவே எதிர்ப்பு காட்டு வார்கள். அத்தகைய ஊழியர்களை நிகழ்ச்சித் தயாரிப்பாளன் பல வகையிலும் அச்சுறுத்தி, ஆசை காட்டி பணியில் தொடரச் செய்வான். ஒரு கட்டத்தில் கான்ராடுக்கு இந்த நிகழ்ச்சியின் அப்பட்டமான வியாபாரநோக்கம் புரியவர, அவன் காட்டிலிருக்கும் தகவல் தொடர்பு கோபுரத்திற்குச் சென்று தன் காதலியைத் தொலை பேசியில் அழைத்து தாங்கள் இருக்கும் இடத்தின் அடையா ளங்களை ஓரளவுக்குத் தெரிவித்து விடுவான்.

முடிவில் இரு கைதிகளுக்கு எதிராக கான்ராட் காட்டில் தனித்து விடப்படுவான். அவனுக் கிருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு அந்தத் தொலைக்காட்சித் தயாரிப்பாளரும் அவனை ஒழித்துக்கட்டப் பார்ப்பான். ஒரு கட்டத்தில் அவன் இறந்துவிடுவதாக முடிவுகட்டி மீதமிருப்பவன் வெற்றியாளனாக அறிவிக்கப் படுவான்.

ஆனால், வெற்றிப்பரிசுத்தொகையை அவனுக்குத் தராமல் ஏமாற்று வான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன். கோபத்தில் அந்தக் கைதி தயாரிப்புக் குழுவைச் சுட அதில் சிலர் இறக்க, பணத்தாசை பிடித்த நிகழ்ச்சித் தயாரிப்பாளனே நிகழ்ச்சியை எதிர்க்கும் சக தொழில் நுட்ப வல்லுனர்கள் சிலரைச் சுட, இறுதியில் கான்ராட் வந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளனைச் சுட என்று பேரழிவு நிகழும்.

கான்ராட் தன் காதலியிடம் ஒரு சுதந்திர மனிதனாக வந்துசேர்வதோடு படம் முடியுமென்றாலும் அந்தப் படம் முழுவதும் வெளிப்படும் அப்பட்டமான தொலைக்காட்சி வர்த்தகப் போட்டியும், பணவெறி யும், குரூரங்களை ரசிக்க எப்படி இந்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மக்களைப் பழக்கப்படுத்துகின்றன, ஊக்கப்படுத்து கின்றன என்பதும் நெடுநேரம் நம் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும்; நம்மை அமைதியிழக்கச் செய்து கொண்டிருக்கும்.

கதாநாயகன் கான்ராட் வந்து அந்த தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கும் போது அது நியாயமே என்று தோன்றும்.

வழக்கமான அடி தடி சண்டைப் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் ஒளியூடகங்கள், அவை மக்களை எப்படி பாவிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சமூகப்பொறுப்போடு ஒரு ‘மெஸேஜ்’ உபதேசமாக அல்லாமல் கதைப்போக்கில் அழுத்தமாகத் தரப்பட்டிருக்கும்.

படுமோச மெகாத்தொடர்நாடகங்களுக்கும், அபத்த அரசியல் விவாதங் களுக்கும் மாற்றுவேண்டும் முனைப்பில், அப்படியொரு மாற்று இந்த நிகழ்ச்சி என்ற ஒருவித willing suspension of disbelief மனநிலையில் BIGG BOSS நிகழ்ச்சியைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் படம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.


BIGG BOSSம் BRAINWASHம்

– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) –

பெரியோர்களே தாய்மார்களே!
பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே!
சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே!
சுற்றியுள்ள சடப்பொருள்களே!
சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே!
ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே!

ஆற்றுமீன்களே
வேற்றுகிரகவாசிகளே!
இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள்
விலங்கினங்கள் புள்ளினங்கள்
மரம் செடி கொடிகளெல்லாம் _

BIGG BOSS பாருங்கள் –
BIGG BOSSஐயே பாருங்கள்!
காணக்கிடைக்காத தரிசனம் இது;
காணவேண்டியது;
கண்ணாடியாய் நம்மைப் பிரதிபலிப்பது;

(*பொறுப்புத்துறப்பு: எத்தனை சொல்லியும்
உங்களையதில் காணமுடியவில்லையென்றால்
காவல்நிலையத்தில் புகார் தந்துவிடவும்)

வீட்டிலும் வெளியிலும் முடிந்தால் கடலுக்கடியிலும்
முட்டாள்பெட்டியிலும் மடிக்கணினியிலும் மௌபைலிலும்

பாருங்கள் பாருங்கள்
BIGG BOSS பாருங்கள்!
BIGG BOSS பார்த்தால் நமக்கு ஞானக்கண் திறக்கும்
பின், அதையும் பயன்படுத்திவீர் BIGG BOSS பார்ப்பதற்கே!
தமிழ்க் கலாச்சாரம் பற்றி அறியவேண்டுமா?
தொலைவிலுள்ள கீழடிக்கெல்லாம் ஏன் போகவேண்டும்?
BIGG BOSS பாருங்கள்!

தொடையைக் காட்டிக்கொண்டுகால்மேல் கால் போட்டுக்கொண்டு
அமர்ந்திருக்கும் பெண்கள்

திடீரென்று தழையத் தழைய பாவாடையோடு
தாவணிக்கு மாறிவிடுவார்கள்
(மார்பை போர்த்துவதற்கு தாவணி என்பது பழமைவாதம் என்றால்
மறுக்க முடியுமா உங்களால்?)
பாருங்கள் பாருங்கள்!
BIGG BOSS பாருங்கள்!!
BIGG BOSS போட்டியாளர்கள் குடிக்கும் குளிர்பானம்
உங்கள் குரல் வளைக்குள் சில்லென்று இறங்குவதாக
உணரமுடியவில்லையென்றால்
நாமெல்லாம் என்ன தமிழர்கள்?
பாடுங்கள் பாடுங்கள்!
BIGG BOSSஸைப் போற்றிப் பாடுங்கள்!
அசந்தால் உங்களையுமறியாமல் பேட்டியெடுக்கப்பட்டுவிடுவீர்கள்
BIGG BOSSஸை ஒட்டிப் பேசினாலும் வெட்டிப் பேசினாலும்
அது BIGG BOSSக்குப் பெருமைதானே!
’போற்றி’ பாடலும் ’அறம்’ பாடலும்
பழந்தமிழர் மரபு என்று தெரியாதவர்கள்
காற்றடைத்த பையாய் மண்ணோடு மண்ணாகிப் போக.
ஆக, அப்பா தன் மனைவியைத் தனியறையில் கட்டித்தழுவி
முத்தமிட்டு அன்பைக் காட்டினால் மட்டும் போதாது –
அனைவரும் காண அதைச் செய்யவேண்டும்;
அத்தோடு, மகளைக் கட்டியணைக்கவேண்டும்
மருமகளைக் கட்டியணைக்கவேண்டும்
மாமியாரைக் கட்டியணைக்கவேண்டும்
மாட்டேன் என்று சொல்லலாகாது
மடிசஞ்சியா நீங்கள்?
மொழியறிவு updated ஆக இருக்கவேண்டியது அவசியம்
ஆம், தமிழ் பேசுவதாக தங்கிலீஷ் பேசவேண்டும்
அத்தையை ஆண்ட்டி என்றழைக்கலாம்
ஆண்ட்டியை அத்தை என்று அழைத்தால்
அது பிழையாகிவிடலாம் – அதிகவனம் தேவை
அங்கங்கே மானே தேனே சேர்த்துக்கொள்ளலாம்
அத்தோடு நிறுத்திக்கொண்டால் நல்லது.
தமிழ் வளர்ப்போம் என்று முழங்கினாலும்
மழலை உச்சரிப்பைப் பழகவேண்டியது அவசியம்.
அது சரி TASK TASK என்கிறார்களே- அது என்ன?
அட வெண்ண – இதுகூடவா தெரியாது?
நன்கு துவைக்கப்பட்டிருக்கும்,
அல்லது புத்தம்புதிய துணியின் ஓரங்களில்
சிறிதே மண்ணொட்டித் தந்தால்
இல்லாத நெற்றிவியர்வையைத் துடைத்தபடி யதை
அடிஅடியென்று அலுங்காமல் நலுங்காமல் அடித்துத்
துவைக்கவேண்டும்!
‘வேண்டும் வேண்டும் BIGG BOSS வேண்டும்
மீண்டும் மீண்டும் BIGG BOSS பார்க்கவேண்டும்…..

அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் எவரெவரோ சொல்கிறார்கள்
எல்லோருமே சொல்கிறார்கள்.
எனவே, ஊரோடு ஒத்துவாழ்வதே மேல்.

கேள், நாளொன்றுக்கு நாற்பதாயிரம்போல் ஊதியத்தில்
BIGG BOSS போட்டியாளர்கள் இடுப்புவளையாமல்
பெருக்குவார்களே –
அதற்கு இணையாகிடுமா
நாள்தவறாத துப்புரவுத்தொழிலாளர்களின்
அற்பக்கூலி பெறும் உழைப்பு?
கம்பின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிச்
சிறுமிக்காய்
கண்கலங்கத் தெரிய வேண்டும் –
கலையாத ஒப்பனையோடு.
பருவமழை பொய்த்தாலும் நாள் தவறாமல் காண்பீர் BIGG BOSS
விற்பனைக்குக் கடைவிரிக்கப்படும் மனித உணர்வுகள்
மலிவு விலையில்; தள்ளுபடி யுண்டு.
சமூகத்தின் நான்காவது தூணான இதழியலாளர் களிடமே
பத்து கேள்விகள் முன்கூட்டியே எழுதி வாங்கி
அதில் மூன்றை மட்டுமே கேட்கச் சொல்லி
அதில் ஒன்றை மட்டுமே ஒளிபரப்பி
‘Paid News’ பற்றி நினைக்கச் செய்த BIGG BOSS புகழ்
பாரெங்கும் ஓங்கட்டும்!
ஓங்கட்டும் ஓங்கட்டும்!
BIGG BOSS புகழ் ஓங்கட்டும்!!

முடிக்கு முன் ஒரு கேள்வி:
(*சரியான பதில் சொல்லும் பார்வையாளருக்கு
தொலைவிலிருந்து BIGG BOSS இல்லத்தை தரிசிக்கும் பேறு கிட்டும்)
நகைச்சுவையென்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டியும் கூட நம்மால்
சிரிக்கவியலாது போக
ஒலிப்பதிவுக்கருவிமூலம் சிரிப்பையும் கைத்தட்டலையும்
ஒரே சீரான இடைவெளியில் அரங்கம் அதிர
எதிரொலிக்கச் செய்யும்
BIGG BOSS நிகழ்ச்சியே
பெரும் பொய் புரட்டு அரசியலாயிருக்கையில்
தனியாக அதில் அரசியல் பேசத்
தேவையிருக்கிறதா என்ன?

ramakrishnanlatha@yahoo.com