‘அம்மா’வின் ஆட்சி முடிவுக்கு வந்ததையிட்டு எதிர் அரசியல்வாதிகள் துள்ளிக்குதிக்கின்றார்கள். அம்மா முதல்வரோ இல்லையோ அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அவர்தான். அவர் சிறையிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும் ஆட்சிக்கயிறு அவர் கையில்தான். இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழக அரசியலின் ஊழற் பெருச்சாளிகளெல்லாம் துள்ளிக்குதிக்கின்றன. விரைவில் இந்தியாவின் பல அரசியல்வாதிகளுக்கெதிரான ஊழல் வழக்குகள் தீவிரப்படுத்தப்படலாம். அம்மாவுக்கே இந்த நிலை என்றால் அவர்களது நிலை.. இப்பொழுதே அவர்களுக்கு வயிற்றைக்கலக்கத் தொடங்கியிருக்கும்.
தமிழக முதல்வருக்கெதிரான இந்தத்தீர்ப்புக் காரணமாக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகச் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஊழல் புரிந்தவர்களெல்லாரும் வெளியிலிருக்கின்றார்கள். அவர்களும் உள்ளே போகும் நிலை வந்தாலே பாரதத்தில் நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகக் கருத முடியும். இந்திரா காந்தியின் படுகொலையின்போது, குஜராத் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுக்குக் காரணமானவர்கள் இன்னும் வெளியிலிருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் உள்ளே செல்லும் நிலை வந்தால்மட்டுமே இந்தியாவில் நீதி இன்னும் உயிருடனிருப்பதாகக் கருத முடியும். அதுவரையில் இத்தீர்ப்பினை முழுமையாக நீதி செத்துவிடவில்லை என்பதன் அடையாளமாகக் கொள்ள முடியாது.