முன்னுரை:
தமிழ் இலக்கிய பரப்பில் ஒளவையார் பாடியதாகப் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன. அந்த வரிசையில் சங்ககாலத் திணைப் பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல், ஞானக்குறள், அசதிக்கோவை, நன்னூற் கோவை, நாண்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனத்தந்தாதி, தனிப்பாடலில் ஒருபாடல், திருவள்ளுவமாலையில்; அமைந்துள்ள ஒரு வெண்பா போன்ற இலக்கியங்களின் ஆசிரியர் ஒளவையார் என்பதாகக் காணப்படுகின்றன. ஆயினும், இவற்றை ஒருவரே எழுதியிருக்க வாய்ப்பில்லை.
ஒளவையார் பெயரில் காணலாகும் இவ்விலக்கியங்கள் ஒரே காலட்டத்தைச் சார்ந்ததை அல்ல. வெவ்வேறு காலகட்டச் சமூக அமைப்பையும், அச்சமூக அமைப்பின் கருத்தியல், பண்பாட்டு இலக்கியக் கொள்கை அமைவுகளுக்கு ஏற்பவும்; அமைந்திருப்பவை. எனவே இவற்றையெல்லாம் ஒருவரே பாடியதாகக் கொள்ள முடியாது. வேறுவேறு காலத்தில் வாழ்ந்த கவிஞர்களே ஒளவை எனும் பெயரில் எழுதியிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும். வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தாகக் கருதப்படும் பல ஒளவைகளைக் கலவையாக்கி ஒரே ஒளவை என்பதான சிந்தனைத் தோற்றம் தமிழ்ச் சிந்தனை மரபில் திணிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஒளவையார் என்னும் உருவகம் தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து வந்திருப்பதால் ஒளவையார்களை வகைப்படுத்தியும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.
ஒளவையார் இத்தனை பேர்தான் என வரையறுப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், ஒளவைகள் மூவர் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர். “சங்க கால ஒளவையார் அகம், புறம் இரண்டையும் அகவற்பாவால் பாடியவராகையால் அவரது பாடல்களில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்பட வாய்பில்லை. இரண்டாம் ஒளவையார் பாடியனவாகக் கருதப்படும் நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியன ஒரே பாடு பொருளை உள்ளடக்கியமையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடமையாலும், தொகுப்பு நூல்களாக அமைந்தவையாலும் அவர் பாடியனவாக ஏற்கத்தக்கன. மூன்றாம் ஒளவையார் தனிப்பாடல்களைப் படைத்தவராகவும் சிற்றிலக்கிய வகைகளைப் படைத்தவராகவும் ஏற்கத்தக்கவராவார்”1 என்ற மு.பழனியப்பன் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் ஒளவையார் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர் என்று வரையறுக்கலாம். இதில் அறநெறியும் பக்தியும் பாடிய இடைக்கால ஒளவையாரின் பாடல்களே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.