சொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.
சமூக அமைப்பு அதிகாரமும,; பொருளும் பரவலாகி விடக்கூடாது என்ற நுணுக்கமான சிந்தனைசார் சாதியத்தில் தோய்ந்து இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட காலம் தொட்டே அதிகாரத்தையும,; பொருளையும் பரவலாகச் செய்யவிடாமல் தடுத்தே வந்த சாதியம், காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளவும் தவறவில்லை. எண்ணும் எழுத்தும் (கல்வி) சமீப காலம் வரை பிராமணர்களிடமும,; ஆதிக்கச் சாதியினரிடமும் இருந்து வந்தது. இவர்களிடம் இயல்பாக இருந்த ஆதிக்கக்குணம் இவர்களின் கையில் இருந்த கல்வியிலும் இருந்தது. குருகுலக் கல்விப் போதனையை வெறுமனே கல்விப் போதனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்து, அவர்களுக்கு மட்டும் கல்வி புகட்டிய குருக்களின் எண்ணம், புத்தி ஆகியவையும் கல்வியாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம், பொருள் ஆகியவற்றைப் பரவலாக விடாமல் தடுத்த சாதியச் சமூகத்தில் கல்வியின் மூலம் தன் சுகபோக வாழ்வைத் தக்கவைத்துக் கொண்ட குருக்கள், சொற்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இத்தகு சூழலில் தான் சாதியக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி சொற்களுக்குள் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்தப் புரிதலோடு சொற்களை அணுகும் போது சில உண்மைகள் வெளிப்படலாம்.
‘கிழக்கு’ என்ற சொல் சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவே தமிழகத்தின் நிலம் என்பதால் மேற்கு மேடானதாகவும் கிழக்கு கீழானதாகவும் இருக்கிறது. மேட்டில் (மேற்கு (அ) மலை) பெய்கின்ற மழைநீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது என்ற கற்பிதம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ‘கிழக்கு’ என்ற சொல் சாதியப் புரிதலில் ‘தாழ்ந்த’ என்னும் பொருண்மையில் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது.