ஆய்வு: கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடுகள் (நான்காம் நிலை)

- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் யாத்த நூல்  தொல்காப்பியம். தமிழ்மொழியின் காலத்தொன்மை பண்பாடு, நாகரிகச் சிறப்பு முதலியவற்றை நுவலும் முதன்மை ஆதாரமாக இந்நூல் திகழ்கிறது. உலகில் தோன்றிய இனங்களில் பொருளுக்கு இலக்கணம் வகுத்தது தமிழினமாகும். ஏனைய மொழிகள் யாவும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்டுள்ள நிலையில் தமிழ்மொழி, பொருளை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் வரையறுத்து வாழ்வை நெறிப்படுத்தியது. இவ்வகவாழ்வு களவு, கற்பு என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இக்களவுக்கால மெய்ப்பாடுகளுள்  ஒன்றான நான்காம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளைக் கலித்தொகையில் பொருத்திப் பார்ப்பதாகக் இக்கட்டுரை அமைகின்றது.

மெய்ப்பாடு
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடே மெய்ப்பாடு ஆகும். இளம்பூரணர், “மெய்ப்பாடென்பது புலன் உணர்வின் வெளிப்பாடு. அது மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று” என்பர்.

அகத்திணை  மெய்ப்பாடுகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப    ”      (தொல்.பொருள்.அகத்.நூ.1)

என்றவாறு, அகத்திணைகளைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று மூன்றாகப் பகுப்பது தமிழ் மரபு. கைக்கிளை என்பது ஒரு தலை வேட்கை பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; ஆதலின் ஒத்த அன்புடைய ஐந்திணையே சிறந்தது என்பதால் இதனை நடுவணைந் திணைக்குள் அடக்குகிறார் தொல்காப்பியர். அகவாழ்வில் களவு, கற்பு என்ற இருநிலைகள் உள்ளன. களவுக் காலத்திற்கு உரியனவாக 24 மெய்ப்பாடுகளையும், கற்புக் காலத்திற்கு உரியனவாக 10 மெய்ப்பாடுகளையும்  தொல்காப்பியர் பாகுபடுத்தியுள்ளார்.

களவுக்கால மெய்ப்பாடுகள்
நல்லூழின் ஆணையால் காதலர் இருவர் தம்முள் கண்ட காட்சி, வேட்கை, இருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையே  போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்தாகப் பகுப்பது மரபு. இவற்றை வடநூலார் அவத்தை என்பர். இவற்றில் முதல் ஆறு உணர்வு நிலைகள் மட்டும் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு  நிலைகளுள் முதல் மூன்று நிலைகள் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும், அடுத்த மூன்று நிலைகள் புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் உழவுக் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவு என்பதன் பொருள்
சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது. தமிழ் – தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில்,வேளாண்மை,உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.

திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.சிறுபான்மை வணிகர்க்கும்,பெரும்பான்மை வேளாளர்க்கும் உரிதாய உழுதல் தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து என்பர் பரிமேலழகர்.அக்கால நிலை அது போலும்,ஆனால் திருவள்ளுவர் உழந்தும் உழவே தலை,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (1031)உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என்பர்.அவர் உழவை மிக மதித்தார் என்பதும் அரசரே உழவர்க்கு அடுத்தபடிதான் என்பதும் அவர் குறளாலேயே விளக்கமுறும்  (1034).

Continue Reading →

கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்பாளுமை

விஞர் வெள்ளியங்காட்டான் - வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்!  காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்!  கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்!  பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில்  பன்முக எழுத்தாளர்!  இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான்  என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட  வெள்ளியங்காட்டான்.  அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள்.  வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர். 

தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.

இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான்  சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார்.   தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.  திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார்.   தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார்.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை

தொல்காப்பியப் புறத்திணைச் சிறப்பு
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -உலக மொழிகளின் இலக்கணங்கள் எல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே அமைந்திருக்க, தமிழ் மொழியில் மட்டும் பொருளுக்கும் இலக்கணம் கண்டுள்ளமை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எழுத்தும் சொல்லும் உரைத்த தொல்காப்பியம், இவ்விரண்டும் அறிந்தவர்கள் இலக்கியமும் தெளிதல் வேண்டும் என்று கருதியே இலக்கிய, இலக்கணம் கூறும் பொருளதிகாரம் கண்டார். மொழிக்கும், மொழி வழித் தோன்றிய இலக்கியங்களுக்கும் மட்டுமல்லாது, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வியல் நெறிகளுக்கும் இலக்கணம் வகுத்துரைத்தவர் தொல்காப்பியர். எனவேதான், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைச் ‘சமூக நூல்’ என்றும், ‘தமிழர்களின் நாகரிகக் கையேடு’ என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியத்தைத் ‘தமிழின் உயிர்நூல்’ என்கிறார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். உலக மொழிகளில் எம்மொழியும் பெறாத தனிச்சிறப்பு பொருளதிகாரத்தால் தமிழ் பெற்றுள்ளது.

அகத்திணை ஏழு என்பதற்கேற்பப் புறத்திணையும் ஏழு எனவே கூறி, அவ்வகத்திணைகளைப் புறத்திணைகளுக்கு இனமான திணைகள் என்று தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

வெட்சி    – குறிஞ்சியின் புறம்
வஞ்சி    – முல்லையின் புறம்
உழிஞை    – மருதத்தின் புறம்    
தும்பை    – நெய்தலின் புறம்
வாகை    – பாலையின் புறம்
காஞ்சி    – பெருந்திணையின் புறம்
பாடாண்    – கைக்கிளையின் புறம்

இதன்வழி தொல்காப்பியப் புறத்திணைப் பகுப்பு அகத்திணைப் பகுப்பின் அடிப்படையிலேயே எழுந்தது என்பதனை அறியலாம்.

தொல்காப்பியப் புறத்திணையியல் போர் பற்றிக் கூறுவதிலும்கூட அறத்தையே பெரிதும் நிலைநாட்ட விரும்புகின்றது. அரசன் வலிந்து போர் செய்தல் இல்லை. தன் மண்ணைக் காக்கவும், தன் அரண் காக்கவும், தன் வலிமையை மாற்றானுக்கு உணர்த்தித் தன் வீரத்தை நிலை நிறுத்தவுமே போர்கள் நடைபெற்றன. காலப்போக்கில் இக்கோட்பாடுகள் நிலை பேற்றையடைய முடியவில்லை. அகம்-புறம் என்ற பகுப்பும், அகப்புறம்-புறப்புறம்-புறஅகம் என வளரலாயின. புறத்திணைகள் ஏழு என்ற நிலையிலிருந்து பன்னிரண்டு எனப் பெருகின. இவற்றுள் பாடாண் திணை குறித்த செய்திகளை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்பு

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்புகதைசொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும் அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்கிறான். கதை இலக்கியங்களில் சொல்லும் முறை காலநிலைக்கு ஏற்ப பல வடிவங்களில் நிகழ்ந்துள்ளன. சங்ககாலத்தில் செய்யுட்களின் மூலமாகச் சிறு, சிறு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை அடிப்படையிலும் கற்பனைகள் கலந்தும் புனைந்துரைக்கப்பட்டன. ஓர் கதைப்பாடலுக்கு கரு, கருவைச் சுமந்துசெல்லும் மாந்தர்கள், பயணிக்கும் சூழல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றது. அவை குறுங்கதைகளைப் போலவும் நெடுங்கதைகளைப் போலவும் காணப்படுகின்றன. இத்தகைய மரபின் அடிப்படையில் காணப்படுகின்ற சங்க இலக்கியத்தினை  கதைப் பொதிக்கவிதைகள் என்பதை பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை விளங்குகிறது.

சங்க இலக்கியம் கதைக்கூற்றுக் கவிதைகளாக காணப்படுகின்றன என்று விளக்கும் கதிர் மகாதேவன், “எல்லா புறநாற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் கதைக்கூற்றுக் கவிதையாய் இன்று நமக்குப் புலப்படவில்லை. ஆனால், திணை துறை அமைப்பு நாடக முன்னிலைக்கு உரியது. ஆயின், சிறுகதைக்கு உரிய பாங்கு அனைத்தும் பெற்றவை அகப்பாடல்கள். புறப்பாடல்கள் பாடிய புலவர்கள் பலரும் அகப்பாடல்கள் பாடியுள்ளனர். முதல், கரு, உரிப்பொருள்களின் அமைப்பில் இரண்டும் ஒரு தன்மையான இலக்கியக் கொள்கைகள் பெற்றவையே.  மன்னனை அன்று மக்கள்  தம் உயிராக மதித்தனர். அவனைப் பற்றிய எண்ணங்களே சுவைக்கு உரிய கற்பனையாக அக்கால(வீரநிலைக்கால) மக்களுக்கு இருந்திருக்க  வேண்டும். களநிகழ்ச்சிகள் என்றுமே கதைநிகழ்ச்சிகள். நிகழ்ச்சிகள் நடந்த காலத்து, அவை ஓவியம் போல் வீரநிலைக் காலத்து மக்கள் உள்ளத்துப் பற்பல கற்பனைளைத் தோற்றுவித்திருக்கக் கூடும், எடுத்துக்காட்டாக,

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்  திங்கள்  இவ்வெண்  நிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டர் யாம் எந்தையும் இலமே”(புறம்-112)

Continue Reading →

ஆய்வு: ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான அறநெறிகளை எடுத்து இயம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம்,வழக்கம்,நீதி,கடமை,ஈகை,புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

ஆத்திசூடியில் அறநெறிகள்
ஆத்திசூடி அமர்ந்த தேவனை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (ஆத்தி.கடவுள் வாழ்த்து)என்று இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.ஆத்திமாலை அணிந்த இறைவன் சிவபெருமான்.ஆத்திசூடி என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர்பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்துக்கு ஒரு பாடலாக மொத்தம் 108 பாடல்கள் உள்ளன.ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது.இதற்கு ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும் என்ற யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் பகர்கிறது.ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளன.சிறுவர்கள் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வடிவில் உள்ளது.

Continue Reading →

ஆய்வு: நிலம் – மையம் – அதிகாரம்

1
- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -இங்கிலாந்தின் நிலவுடைமையிலான உற்பத்தி வரலாறு இடைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. கி.பி 1066 முதல் 1300 வரையிலான நார்மன் ஆட்சிக்காலத்திற்கு முன்பே இங்கிலாந்தில் மேனர் முறை வழக்கில் இருந்தது. மேனர் முறை என்றால் வரி செலுத்தும் நிலப்பகுதிகள் என்று பொருள். இந்நடைமுறை இங்கிலாந்தில் மட்டுமின்றி மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் வழக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இந்நடைமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் அடிமை ஊழியர்களால் பயிரிடப்பட்ட வில் (Vill) என்பதிலிருந்து இது தோன்றியிருக்க வேண்டும் எனவும், ஜெர்மனி நாட்டில் பயிர் செய்யப்பட்ட பிரதேசமாகிய மார்க்கில் (Mark) இருந்து இது நிலவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர்கள் ரோமானியர், டியுடானியர் ஆகியோர்களின் முறைகளில் இருந்து இது தோன்றி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 1086 – இல் எழுதப்பட்ட டூம்ஸ்டே புத்தகத்தில் (Domesday Book) இருந்து தான் நார்மன் ஆட்சியில் மேனர் முறை இருந்து வந்ததைப் பற்றி அறியமுடிகிறது. மேனர்களில் பெரும்பகுதி திருச்சபைகளின் வசம் இருந்தன. பேராயர்கள், ஆயர்கள், பிற சமயத் தலைவர்களும் (பிரபுக்கள்) மேனர்களை அனுபவித்தார்கள். இதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் நிலம் அதிகாரத்தின் மையமாக, அதே சமயத்தில் சற்று கூடுதல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. முதன்முதலில் நிலம் அளவிடும் முறையை அறிமுகப்படுத்திய இராஜராஜ சோழனின் இந்த அணுகுமுறை தன்னுடைய அரசின் வரி விதிப்பில் இருந்து ஒரு சிறு நிலப்பகுதியும் தப்பி விடக்கூடாது என்ற நோக்கினதாகவே இருந்திருக்கிறது.

மேனர் நிலங்களைப் பொறுத்தவரை உள்நிலம் (Inland) என்றும், வெளிநிலம் (Out land or villenegium) என்றும் பிரித்தறியப்பட்டது. உள்நிலம் பேராயர்கள், சமயத் தலைவர்கள் முதலியோர்களின் பயன்பாட்டு நிலமாகவும், வெளிநிலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டு நிலமாகவும் இருந்தது. பண்ணையாளர்கள் பயன் படுத்திய நிலத்தின் மீது அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் இல்லை. ஆனால் பேராயர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய நிலம் அவர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது. மேலும் வெளிநிலத்தை வைத்திருந்த பண்ணையாட்களை மாற்றுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருந்தது. நார்மன் காலத்தின் பின்பகுதியில் பண்ணையாளர்களின் நிலங்கள் உள்நிலங்களாக மாற்றப்பட்டு பேராயர்கள் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஆட்சி அதிகாரம் அரசன் கையில் இருந்தாலும், நிலத்தின் உரிமையிலான அதிகாரம் பிரபுக்களின் கையில் இருந்ததால் அதிகாரம் மிக்கவர்களாக பிரபுக்களே இருந்தனர். இவர்களின் ஆதரவிலும், வழிப்படுத்தலிலுமே அரசன் ஆட்சி செய்திருக்கிறான்.

Continue Reading →

ஆய்வு: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்

- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 - சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யாகவும் அமையாது, அப்போதைய தமிழர்களின் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. அன்றைய சமுதாய மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தகவமைத்து, அதற்கேற்ப வாழ்வை நல்வழியில் செலுத்தி வாழ்ந்துள்ளனர்.

மெய்ப்பாடுகள்
மக்கள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்வுகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மனிதனின் உடலின்கண் தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடு ஆகும்.  நமது உள்ளத்தில் நிகழும் உணர்வுகளைப் புறத்தார்க்கும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்தல் மெய்ப்பாடாக மிளிர்கிறது. இந்த மெய்ப்பாடுகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பதை இக்கட்டுரை வழி காண்போம்.

மெய்ப்பாடுகளும், நிலைக்களன்களும்
மெய்ப்பாடுகள் எட்டுவகை உணர்வுகளைக் காட்டுவதாகத் தொல்காப்பியர்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெயப்;பா டென்ப”                    (தொல்.மெய்:247)

என்கிறார். இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாடுகளும் தனக்கென நிலைக்களன்களைக் கொண்டு தோன்றும்.

நகையும், நகைப்பொருளும்
முதற்கண், நகை எனும் மெய்ப்பாட்டைக் காணுமிடத்து எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு அமைகிறது. இதனை,
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப”                 (தொல்.மெய்:248)

என்னும் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.

Continue Reading →

ஆய்வு: ‘தமிழ்த்தென்றல்’ நளினிதேவி:

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)

Continue Reading →

ஆய்வு: சிறுபஞ்சமூலம் உணர்த்தும் சமுதாய நெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.காலத்தின் கோலத்தால் அறநூல்கள் தோன்ற வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதால் சங்க காலத்தை அடுத்து உள்ள காலமான சங்க மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்நூல்கள் அறம்,  அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு ,புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல் கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்இசமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு

ஐந்துவேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர் ,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர் ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல் இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →