ஆய்வு: சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.

“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவிறெல்
மண்புக்கு மாய்வது மன்”1

என்பது வள்ளுவர் வாய்மொழி. அன்பும் அறனும் எங்கெங்கும் பரவிப் பெருகி வாழும் வாழ்க்கைப் பண்பும் பயனுமாக மிளிர்வது பண்பாட்டின் நோக்கமாகும். தனிமனிதனின் ஒழுக்கமும் பண்பும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளை நம் முன்னோர்கள் வடிவமைத்த சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாக அமைகின்றது

தனிமனிதப் பண்பாடு
பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால் சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும்  பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துக்கூறியுள்ளனர். இதனையே,

“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்……”2

என்று குறிப்பிட அறியலாம். நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை சங்க நூல் குறிப்பிடுவதனை அறியமுடிகிறது.

Continue Reading →

ஆய்வு: நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6 நூற்றாண்டு வரை இருந்து  பதினெட்டு நூல்களைத் தோற்றுவித்தது.கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர். இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் காணப்படும் கல்விப் பற்றிய சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்விக்கு அகராதி தரும் விளக்கங்கள்
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான என்பதற்குத்   EDUCATION தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)

தமிழ் – தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு  அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு, நுனரஉயவழைn  என்று பொருள் கூறுகிறது.(ப.266) கௌராத மிழ்அகராதி அறிவு, கற்றல், நூல், வித்தை, கல்வியறிவு, கற்கை, பயிற்சி, உறுதி, ஊதியம்.  ஓதி,கரணம்,கலை,கேள்வி,சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கல்விக்கு பொருள் கூறுகிறது.(ப.233)

Continue Reading →

ஆய்வு: சித்தர்களின் பாடல்களில் நிலையாமைச் செய்திகள்.

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மறைந்து போகும். இது ஒவ்வொரு உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் , தவிர்க்க முடியாததாக இயற்கை வடிவமைத்திருக்கும் கட்டமைப்பாகும். மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது மற்றவையெல்லாம் மாறக் கூடியவை என்பதை சித்தர்கள் நன்கு உணர்ந்தார்கள். இதனால்தான் உடல் அழியும் , இளமை நீங்கும் , அழகு சிதையும். இன்பம், செல்வம் நிலைக்காது என்ற நிலையாமைக் கொள்கையை சித்தர்கள் தங்கள் பாடல்களில் வலியுறுத்துகின்றனர். ஆகவே சித்தர்களின் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமைக் குறித்த செய்திகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை

” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானு
நில்லா வுலகம்  புல்லிய நெறித்தே ”   (தொல். பொருள். நூற். 78)

என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று  குறிப்பிடுகின்றார்.

நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,

“ நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” (குறள் -331)

என்ற அடிகளில் உணர்த்துகின்றார். மேலும்,

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ”(சிறைசெய்காதை .135.36)

என்று மணிமேகலை பாடல்அடிகள் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.

Continue Reading →

ஆய்வு: விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும்

முன்னுரை:
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா”  என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம்.

பசி:
பசி என்ற ஒற்றைச் சொல்லால் உயிர் விடுகின்ற ஒரு சக ஜீவராசியைக் கூட காப்பாற்ற முடியாத ஒருகையற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம்.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட்வோம் என்றார் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் பசிக் கொடுமையினால் கூட்டம் கூட்டமாக,கொத்துக்கொத்தாக மனிதர் தன்இன்னுயிரை விடுகின்றனர்.என்ற கொடுமை நம் நெஞ்சினிலே ஈட்டியாகப் பாய்கின்றது. இந்த உலகில் ஏற்படும் அனைத்து நொய்களுக்கும் மருந்து தமிழனிடமே உள்ளது. அம்மருந்தின் மூலத்தினை நம் முன்னோர்கள் நம்மிடையேசொல்லிச் செல்கின்றனர். அது தான் “விருந்தோம்பல்” எனும் அருமருந்து ஆகும்.

Continue Reading →

ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் புலால் உண்ணாமை

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அந்நியர் படையெடுப்பின் காரணமாக சமுதாயத்தில் மாற்றம்  ஏற்பட்டது.சங்க காலத்தில் புலால் உண்ணலை வழக்கமாக மேற்கொண்ட மக்கள் காலமாற்றத்தின் காரணமாகவும்,பிற ஆட்சியின் காரணமாகவும்,சமயத்தின் காரணமாகவும் சங்கமருவிய காலத்தில் புலால் உண்ணலை தவிர்க்கும் நெறியினை மேற்கொண்டுள்ளனர். இக்காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் புலால் உண்ணாமை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதில் திருக்குறளில் காணப்படும் புலால்மறுத்தல் அதிகாரத்தில் இடம்பெறும் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.முப்பால் என்பது இதன் பெயர்.உத்திரவேதம்,தெய்வ நூல்,பொய்யா மொழி,வாயுறை வாழ்த்து,தமிழ் மறை,பொதுமறை,திருவள்ளுவப் பயன்,திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உண்டு.இந்நூலின் ஆசிரியர் வள்ளுவநாயனார், தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், மாதாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர்,பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.அதிகாரம்133 மொத்த குறள்கள் 1330 இவைகள் குறள் வெண்பாவால் ஆனது.அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது.(பாயிர இயல் 4,இல்லறவியல் 20 ,துறவியல் 13 ,ஊழியல் 1 என்ற 4 இயல்களையும் கொண்டுள்ளது)பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது.(அரசியல் 25 ,அங்கவியல் 32,குடியியல் 13,ஊழியல் 1)காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது.(களவியல் 7 ,கற்பியல் 18 )பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் நூல். மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களைத் தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்பண்டைய மனிதன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களைப் பாகுபடுத்தி இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தான். அக்காலத்தில் பாலைவனம் என்பது குறிஞ்சி, முல்லை நிலங்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக உருவாகும் நில அமைப்பின் மாற்றமாகும். இது அரிதாகவே காணப்பட்டது. இன்று பாலையைத் தவிர மற்ற நிலங்களைக் காண்பது அரிதாக உள்ளது. தொழிற்புரட்சியின் விளைவு இயற்கை, செயற்கையாக மாறியது. எனவே ஓசோனில் ஓட்டை விழும் அளவிற்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இன்று பல ஆறுகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சுப்ரபாரதிமணியன் ‘சாயத்திரை” புதினத்தில் திருப்பூர் நகரத்தின் தொழில் வளர்ச்சியையும், விளைவையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எடுத்துரைக்கின்றார்.

திருப்பூர்

இந்தியாவின் ‘டாலர்சிட்டி”, ‘பனியன் நகரம்”, ‘குட்டி ஜப்பான்”, என்று பலவாறு அழைக்கப்படும் நகரம் திருப்பூர் ஆகும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கானக் காரணம் ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிப்பதே ஆகும். அன்றைய நாட்களில் 100-க்கும் குறைவான தொழிற்சாலைகளே இருந்தன காலமாற்றத்தின் காரணமாக ‘1914-ல் 22 பின்னலாடைத் தொழிற்சாலைகள் இருந்தன. 1991-ல் கணக்கெடுப்பின்படி 2800 ஆக உயர்ந்துள்ளது”. (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன்இ ப.5) தற்போது இதன் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது. ‘1940-களில் திருப்பூரில் சாயப்பட்டறை இல்லை. தற்போது 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் உள்ளன”. (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன,; ப.5) இந்நகரம் தொழில் வளர்ச்சியின் காரணமாகப் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்தாலும் சுகாதாரத்தில் அளவுக்கு அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. ‘திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் பின்னலாடைத் தொழிற்சாலைகளின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1985-ல் ரூ.19 கோடியாக இருந்தது. 1996-ல் இது ரூ.2,000 கோடியைத் தாண்டியது (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன் , ப.5) இதனால் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூரை நோக்கி வருகின்றனர். மக்கள் நெருக்கடி உள்ள நகரமாகவும் மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நகரமாக திருப்பூர் உள்ளது.

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -முன்னுரை:
“இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி சங்க இலக்கியத்தைக் காணும்பொழுது “சங்க காலம் பொற்காலம்” எனும் கருத்து ஏற்புடைய கருத்தாகத் தோன்றவில்லை.பண்டையத் தொன்மரபு சித்தாந்த கோட்பாட்டினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிலர் புனைந்துரைத்த விளக்கமாகவே இதனைக் காண முடியும்.ஏனெனில் சங்க இலக்கியங்கள் அக்காலத்தையப் பதிவுகளைச் செறிவாகத் தன்னகத்தே பெற்றுள்ளன.அப்பதிவுகளின் வெளிப்பாட்டினைக் காணும் பொழுது சில உண்மைகள் உரக்கச் சொல்ல முடியும்.அவ்வகையில் புறநானூற்றுப் பாடல்களில் வெளிப்படும் கைம்மைநோன்பு நோற்கும் பழக்கவழக்கங்கள் எத்தன்மையில் வெளிப்படுகிறது என்பதை அறியும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

பழக்கவழக்கம் _ வரையறை:
ஒரு தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பது பழக்கம் ஆகும்.அவ்வாறு வந்தமைந்த நடத்தையானது தலைமுறை தலைமுறையாக மரபு வழி பின்பற்றபட்டு வருமாயின் அப்பழக்கம் வழக்கம் ஆகிறது.இப்படி மரபு என்ற சொல்லோடு தொடர்புடைய தன்மையதாகப் பழக்கவழக்கம் அமைகின்றது.

கற்பு – விளக்கம்:
சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.

1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்
2. இடைக்கற்பு கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்
3. கடைக்கற்பு கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல்.

Continue Reading →

ஆய்வு: பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுகின்றன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு
பழமொழி நூல் நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு காணப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.இந்நூல் பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துள்ளனர்.இந்நூல் பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.இந்நூலகத்துப் பண்டைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை,

பிண்டியின் நிழல் பெருமான் அடிவணங்கி
பண்டைப் பழமொழி நானூறும் -கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்து அமைத்தான்
இன்றுறை வெண்பா இவை (பழ.பாயி.1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்

முன்னுரை
ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்    உலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. அதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது மனிதா்களே. ஏனெனில், தனது சுயநலத்திற்காகவும், தனது மகிழ்ச்சிக்காகவும் மனிதன்  இயற்கையை எப்போது தொட நினைத்தானோ அப்போதே பிரச்சனைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. அப்பிரச்சனைகளிலிருந்து, மனிதன் மீண்டுவர நினைத்தால்கூட அது முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது.

நமது பூமி இன்று மோசமான ஒரு வானிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குளிர்காலங்களில் மழையும், வெயில் காலங்களில் பனிப்பொழிவும், மழைக்காலங்களில் வெயிலின் தாக்கமும் பார்த்தோமேயானால் இவையெல்லாம் நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாகவே நாம் கருத வேண்டும். இன்று உலகநாடுகளின் பெரும் பிரச்சனையாக இருப்பது வெயிலும் வெப்பமும். ஏனெனில் வெயிலின் உச்சமும், வெப்பத்தின் தாக்கமும், மனிதா்கள், விலங்குகள், செடிகொடிகளை மட்டுமல்ல இந்த பூமியையும் ஆட்டிப்படைக்கிறது. வெயிலையும், வெப்பத்தையும்  குறித்த செய்திகள் நம் இலக்கியங்களில்கூட காணக்கிடைக்கின்றன. அந்த வகையில், சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெயிலின் தாக்கங்கள் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை வழிக் காண்போம்.

இலக்கியங்களில் வெயிலும் வெப்பமும்
முற்காலத்தில் மக்கள் வெயிலையும், வெப்பத்தின் கடுமையையும் உணா்ந்திருந்த போதிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெினில் அக்காலத்து மக்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்து அதன் தன்மையோடு பொருந்தி வாழ்ந்துள்ளனா். குறிஞ்சியை, மலையும் மலைசார்ந்த இடமாகவும், முல்லையை, காடும் காடு சார்ந்த இடமாகவும், நெய்தலை, கடலும் கடல் சார்ந்த இடமாகவும், மருதத்தை, வயலும் வயல் சார்ந்த இடமாகவும்  பிரித்தும், பாலையை மட்டும் குறிக்குமிடத்து,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயா் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் “       ( சிலம்பு – காடு.காண். காதை  64-66 )      

Continue Reading →

ஆய்வு: இனவரைவியல் நோக்கில் புறநானூறு

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -ஒரு சமூகத்தின் தத்துவார்த்த விழுமியங்களை அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வ விளைவுகளில் ஒன்று ஆய்வு. அது தமிழ் அறிவுசார் மரபில் ஒரு பண்பாட்டு வடிவமாக இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு அசைவாக்கங்களை அத்தகைய ஆய்வுகளை துல்லியமாக புற உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து வருகின்றன. பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை இலக்கியங்கள் ஆகும். அதிலும் தமிழரின் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களைப் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் வழி தமிழர் தொல்கூறுகளை பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியை அறிந்து வெளிப்படுத்த இயலும். சங்க இலக்கியம் தொடாபான அண்மைக்கால ஆய்வுகளில் பலபுதிய போக்குகள் பதிவாகியுள்ளன. மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் சார்ந்த சிந்தனைகளை உள்வாங்கிச் சங்க இலக்கியங்களைப் பொருள்கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளன. அவ்வகையில் மானுடவியல் புலங்களுள் ஒன்றான இனவரைவியல் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பொருள்கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.

இனவரைவியல் – விளக்கம்
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மேலைநாட்டுக் கல்விப் புலங்களில் அறியப்பட்ட மானுடவியல் துறையின் ஒரு உட்பிரிவே இனவரைவியல் அல்லது இனக்குழுவியல் எனப்படுவது ஆகும். இனக்குழு என்னும் பொருளுடைய Enthnograpy என்னும் ஆங்கிலச்சொல் ‘Ethonos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. Ethnos என்பதற்கு இனம், இனக்குழு, மக்கள் என்பது பொருள். Graphein என்பதற்கு எழுதுவது அல்லது வரைதல் என்பது பொருள். ஆகவே இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றிய முழமையான படிப்பு என்னும் வகையில் இப்பிரிவை இனக்குழுவியல் என்றும் கூறலாம்”.1

Continue Reading →