சங்ககாலப் போரில் நீர் நிலைகளை அழித்தல், வயல்வெளிகள் மற்றும் ஊரை நெருப்பிட்டு அழித்தல், காவல்மரங்களை அழித்தல், அரண்களை அழித்தல், வழித்தடங்களை அழித்தல், ஊர்மன்றங்களை அழித்தல், விளை நிலங்களைக் கொள்ளையிடுதல், பகையரசரின் உரிமை மகளிரின் கூந்தலை மழித்தல் மற்றும் கவர்ந்து வருதல் போன்ற செயல்களில் சங்ககால அரசர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற அரசன் பகையரசரின் நாட்டில் உள்ள வயல்கள், ஊர்மன்றம், வழித்தடங்களில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளனர். இக்கழுதை உழவு, வன்புலப் பயிர்களின் விதைப்பு மற்றும் அதன் பின்புலம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கழுதை உழவும் வன்புலப் பயிர்களின் விதைப்பும்
தன் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்துத் திறை செலுத்தாத பகைவர் புலத்தை அழித்து அவர்களின் நிலத்தில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளதை,
“……………………………………….கொடாஅ
உருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும் (புறம்.392: 5-8)1
என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது.
பல்யானை செல்கெழு குட்டுவனின் அரசாதிக்கத்தால் அவனின் காலாட்படைகள் ஊர் மன்றங்களை அழித்தும் கழுதை ஏர்பூட்டியும் பாழ்செய்யப்பட்டுள்ளதை,“நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி” (ப.ப.25:4) என்ற பாடலடி மூலம் அறியமுடிகின்றது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைப் பகைத்துக் கொண்ட மன்னர்களின் நாட்டிலுள்ள தேரோடும் வீதிகளை அழித்துக் கீழ்த்தன்மை விலங்கெனக் கருதப்பட்ட கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டுள்ளமையை,