ஆய்வு: சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்!

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -தற்காலத்தில் சனநாயகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுதல் வேண்டி பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. மேலும், இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த போது தமக்கு அடிபணிய மறுத்த மன்னர்களை அடக்கி அடிபணிய வைப்பதற்கு தம் படையுடன் தனக்குக் கீழிருந்த பிற மன்னர்களின் படையையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்றனர். இது போன்ற கூட்டணி சங்ககாலச் சமூகத்திலும் நிலவியிருந்துள்ளமையையும் அக்கூட்டணியுள் சில முறிவு ஏற்பட்டுள்ளமையையும் வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

சங்ககாலப் போரில்  அரசர்களின் கூட்டணி
சங்ககால அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தினைப் பிறநாட்டின் மீது திணிக்கும் பொருட்டும் அவர்களின் மண்ணைக் கொள்ளுதல் பொருட்டும், வலிமைமிக்க அரசர்கள் இருவர் அல்லது பலர் கூட்டுச்சேர்ந்து பொதுவான பகைநாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டினைக் கைப்பற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்க் கூட்டணியை சங்கப் பாடல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
2.    வேந்தர் மற்றும் குறுநில மன்னர்  கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத்             தாக்குதல்
3.    வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
4.    வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
5.    இருவேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்

என்பவையாகும்.

Continue Reading →

ஆய்வு: பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)

பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)   --திருமதி ம.மோ.கீதா,  உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -முன்னுரை:
சங்க இலக்கியம் முழுமைக்கும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளார்.ஆற்றுப்படை நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையானது இவரது உரையின் மேற்கோள் திறத்தினால் சிறப்பினை அடைந்தது என்றே கூறலாம்.எனவே,இவரின் மேற்கோள் திறத்தினைப் பற்றி இக்கட்டுரையின்மூலம் அறியலாம்.

மேற்கோள்:
மேற்கோள் என்பது சுருக்கமாகவும் சிந்திக்கக் கூடியதாகவும்,கருத்துடன் உறவினையுடையதாகவும் இருக்க வேண்டும். மேற்கோளினை நாம் அளவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.உரையாசிரியர்கள் தங்களின் புலமையினைக் காட்டுவதற்கு மேற்கோள்கள் உதவிபுரிகின்றன.

”உப்புபோல் இருக்க வேண்டுமே தவிர
அதுவே உணவாகி விடுதல் கூடாது”1

என்பார் இலக்குவனார்.குறியீடுகள்,மேற்கோள்கள் ஆய்வு நிகழ்த்தும் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அறிஞர்கள் மேற்கோளினை இரண்டு நிலையாகக் குறிப்பிடுகின்றனர்.அவை ஒற்றை மேற்கோள்,இரட்டை மேற்கோள் என இரு வகைப்படும்.

மேற்கோளின் தேவை:
ஒரு நூலிற்கு மேற்கோள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒன்றிற்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் கூறலாம்.எளிதில் விளக்கந் தர வேண்டிய இடங்களில், எடுத்துக்காட்டுத் தேவைப்படும் இடங்களிலும் மேற்கோள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.மேற்கோளின்மூலம் கருத்துச் சிக்கல் என்பது இல்லாமல் இருக்கின்றது.எல்லா இடங்களுக்கும் மேற்கோள்கள் தேவைப்படுவதில்லை.சில இடங்களுக்கு மட்டுமே மேற்கோள்கள் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்   சங்கம் மருவிய  காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்  கீழ்க்கணக்கு நூல்கள் என  வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்  அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் இடம் பெறும் கல்விச் சிந்தனைகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 குறள்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.கல்வி தொடர்பானக் கருத்துக்கள் கல்வி,கல்லாமை,கேள்வி போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

Continue Reading →

ஆய்வு: இசையறிவியலும் இராகங்களும்

எழுத்தாளர் க.நவம்இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.

இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே  இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன.  ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும்,  பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் தனிமனிதன்; நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தனிமனிதன் என்பதன் விளக்கம்

சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி  தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு,மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

Continue Reading →

ஆய்வு: ‘செடல்’ பாத்திரப் படைப்பு – ஆய்வு நோக்கில் ஒரு பார்வை

 - ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின்  எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள். 

வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.

வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள்.  ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.

Continue Reading →

ஆய்வு: திருமுருகாற்றுப்படையில் சமயம் – பண்பாட்டியல் நோக்கு

 சு. குணேஸ்வரன் -அறிமுகம்
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்தாகக்  கொள்ளக்கூடியதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது.

ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்தல்’ எனப் பொருள்படும். ‘ஆறு’ என்பது வழி; ‘படுத்தல்’ என்பது செலுத்துவது;  அதாவது ஒருவர் செல்லவேண்டிய வழியைத் தெரிவித்தலாகும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்;
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
1

என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு திருமுருகாற்றுப்படையை  ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது.

திருமுருகாற்றுப்படை
முருகு எனவும் புலவராற்றுப்படை எனவும் அழைக்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை என்பது திரு –  முருகு –  ஆற்றுப்படை என அமையும். திரு என்றால் அழகிய, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது. அதாவது அழகிய முருகனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துவது எனப் பொருள்படும். “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது” 2 என்று திருமுருகாற்றுப்படைக்குப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். “திருமுருகாற்றுப்படை யென்பதற்கு முத்தியைப் பெற்றானொருவன் பெறுவதற்குப் பக்குவனாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமி யிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக” 3 என்று ஆறுமுகநாவலர் குறிப்பிடுவார்.

Continue Reading →

ஆய்வு: அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அறநூல் பதினொன்று, அகநூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற முறையில்அமைந்துள்ளன.இந்நூல்கள் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் விளங்குகின்றன.இந்நூல்களின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார், கபிலர் ஆவார். இவர்களின் கடவுள் வாழ்த்து செய்யுள் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது.இந்நூல்களில் காணப்படும் தனிமனித நட்பு நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தனிமனிதன் என்பதன் விளக்கம்
சென்னைப் பல்கலை ஆங்கில அகராதி தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொது நோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு,உயர் நிலையாளரின் பின்னணிக்குழு,வழித்துணைக்குழு,மெய்க்காவலர்,பீடிகைநீங்கியபத்திரம்,பெரும்பான்மையளவு, உருவம்அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தனிமனிதன் என்பதற்கு one among the person> மக்களில் ஒருவர், தனியன், தனியொருவன், துணையிலி, ஆதரவற்றவன் என்று பொருள் விளக்கம் தருகிறது.

நட்பு என்பதன் விளக்கம்
நட்பு என்பதற்கு அகராதிகள் பல சொற்களை வகைப்படுத்திக் கூறியுள்ளன. நண்பன்-தோழன்,கணவன் என்று கழகத் தமிழ் அகராதி (ப.592) சுட்டுகின்றது.இதன் மூலம் கணவனும் தன் மனைவியிடம் நண்பனாக இருக்கிறான் என்பது தெளிவாகிறது.

Continue Reading →

ஆய்வு: உரைநடை எனும் சிந்தனை மாற்றம்

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -தமிழ் மொழியின் இன்றைய வளர்ச்சி என்பது பல்வேறு ஊடக மாற்றங்களைக் கடந்து வந்த ஒன்று. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழ்மொழி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் காலத்திற்கேற்ற சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாததாக இருந்துள்ளது. இன்றளவும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மொழி அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கு உரைநடை ஒரு அடிப்படை சிந்தனைமாற்றமாக இருந்துவருகின்றது. இலக்கண உலகில் இதன் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

தொடர் அல்லது வாக்கியத்தின் இலக்கணத்தைக் கட்டமைப்பது தொடரிலக்கணம். சொல்லிலக்கணக் கூறுகளே தொடரிலக்கணத்திற்கு வடிவம் தருகின்றன. எழுவாய், பயனிலை ஆகிய இரண்டும் இணைந்த வடிவமே வாக்கியம் எனும் அமைப்பைத் தருகின்றன. பெயர், வினை இவற்றோடு இணையும் உருபுகளே வாக்கியத்தின் முழுமையானப் பொருளைத் தீர்மானிக்கின்றன. “முன்பும், பின்பும் எதுவும் வருதல் வேண்டாம் என்ற அடிப்படையில் முன்பும் பின்பும் வருகின்ற விட்டிசையும், குறிப்பிட்ட குரலிசைகளையும் உடையன வாக்கியம்”1 என்று வாக்கியத்திற்கான விளக்கம் தருகிறார் டாக்டர் முத்து சண்முகன். ஆரம்ப காலத்தில் கிரேக்க இலக்கணத்தில் தொடரிலக்கணம் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. சொல்லிலக்கணக் கூறுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. டயோனிசியஸ் த்ராக்ஸ் (Dionysius Thrax) என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாவது கிரேக்க மொழி இலக்கணம் எழுதப்பட்டது. இந்நூல் ஸ்டாயிக் மற்றும் அலெக்ஸாண்டிரிய இலக்கண அறிஞர்களைக் கடந்து வினையடை, மூவிடப்பெயர், முன்னுருபு என்னும் இலக்கணக் கூறுகளை விளக்கியது. இந்நூலில் சொற்றொடர், வாக்கியம் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடரியல் (Syntax) பற்றிய சிந்தனை கிரேக்க இலக்கண மரபில் தோற்றம் பெற்றுள்ளது.

கிரேக்க இலக்கணத்தில் காணப்பட்ட தொடரியல் பற்றிய இலக்கணத்தை இந்திய இலக்கணமரபு கொண்டிருக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் இலக்கணத்தில் அத்தகைய நிலையைப் பார்க்க முடிகின்றது. ஆனால் தொடர் பற்றிய சிந்தனை தமிழ் இலக்கண அறிவாண்மையாளர்களுக்கு இருந்துள்ளது. தொடரிலக்கணம் பற்றி தனித்துப் பேசப்படவில்லை எனினும் அதற்கானக் கூறுகளைச் சொல்லிலக்கணத்தில் காணமுடிகின்றது. “சொல்லாக்கத்திற்கும் சொற்றொடராக்கத்திற்கும் காரணமாக அமையும் ஓரெழுத்து ஒருமொழி முதலாய மூவகை மொழிகளையும் தொடராக்க அடிப்படையில் பிரித்துணர இலக்கண நோக்கில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்றும், பாட்டு உரை நூல் முதலாய எழுவகைச் செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொன்னூல் வழி நின்று தொல்காப்பியம் பாகுபாடு செய்து உணர்த்துகின்றது.”2 சொல்லிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதில் தொடரிலக்கணத்திற்கான கூறுகளைத் தமிழ் மரபிலக்கணங்கள் அமைத்துக் கொண்டுள்ளதை இக்கூற்று தெளிவாக்குகின்றது.

Continue Reading →

தொல்காப்பியரும் அறிவியலும்! –

ஆய்வு! தொல்காப்பியரும் அறிவியலும்! -                           தொல்காப்பியர் அறிமுகம்
இன்று தமிழில் கிடைக்கக்கூடிய மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதே அறிஞர்களின் முடிபாகும். தொல் – கா – பியம் என்பதே அதன் விரிவாகும். தொல் என்பது தொன்மை, கா என்பது காட்சி, இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கௌ;ளமுடியும். இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும். தொல்காப்பியமே தற்போதைய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால, இயற்கை, செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமற் போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும். அதில் ஏறத்தாள 280 ற்கு மேட்பட்ட இடங்களிலே என்ப என்றும், என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்திய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தனை இன்றைய தமிழ் மொழியின் வித்து எனலாம்.

தொல்காப்பியத்தின் காலம்

தொலகாப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக குறிப்பிட்டுள்ளனர். சிலர் கிமு 10,000; ஆண்டிற்கு பலகாலத்திற முற்பட்டது என்றும,. பொள்ளாச்சி மகாலிங்கம் கிமு.10,676 என்றும், நாவலர் சோமசுந்தர பாரதியார் கிமு 10ஆம் நூற்றாண்டு, மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கி.மு 7ஆம் நூற்றாண்டு என்றும், பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்,ஆர்.தீட்சிதர் கி.மு 5ஆம் நூற்றாண்டு என்றும், மறைமலை அடிகள் கிமு.3ஆம் நூற்றாண்டு, சீனிவாச ஐயங்கார் கிமு 4ஆம் நூற்றாண்டு, பி.டி.சீனிவாச ஐயங்கார் கிபி இரண்டாம் நூற்றாண்டென்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள். தொல்காப்பியத்தின் அகப், புறச் சான்றுகளை வைத்தே காலத்தினைக் கணிப்பர். இந்தவகையில் தேவநேயப் பாவாணர் கூறிய கி.மு. 7ஆம் நூற்றாண்டினை அல்லது 5ஆம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ளமுடியும் என்று பொதுவாக அறிஞாகளால் ஏற்கப்பட்டுள்ளது.

Continue Reading →