குணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும்

குணா கவியழகன்குணா கவியழகனின் நூல்கள்குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது  5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட  இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி  அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது  உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு. இது பாரதியாரிலிருந்து இன்றைய அனோஜன் பாலகிருஷ்ணன் வரை ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற அவலம். இதில் ஈழ – புகலிட இலக்கிய உலகம் இன்னுமொரு படி மேலே. அரசியல் நெருக்கடிகளுக்குள் அதிகம் சிக்கித் தவித்து வரும் எம் சமூகமானது, தமது நெருக்கடிகளின் மூச்சுத்திணறலினை படைப்பாளியின் மீது பிரயோகிப்பது இன்று சர்வ சாதரணமாகிவிட்டது.  இதில் முக்கியமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரு துருவ எதிர்முனைப்புடன் இயங்கும் எம் சமூகத்தினர்  ஒவ்வொரு படைப்பாளியையும் இந்த நுண்நோக்கி கருவியுடனேயே ஆராய முற்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு படைப்பாளியும் பலத்த நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கல்களுக்கும் ஒரு வித மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். மேற்குறித்த  சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு படைப்பாளியையும் அவன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஒற்றைப்பரிமணா படிமங்களை உடைத்து அதில்  இருந்து அவனை மீட்டெடுத்து அவனது பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தி,  மீண்டும்  வாசகர்கள் முன் அவனை மீள் அறிமுகம் செய்வதும் இன்று எம்முன் உள்ள தலையாய கடைமையாகும்.  

இங்கு குணா கவியழகனும் மேற்குறித்த சுழிகளுக்குள் சிக்குண்டே கிடக்கின்றார். அவர் மீது வாசிக்கபப்டும் குற்றப்பத்திரிகையும் மிகக் குறைவானவையல்ல. எனவே  குணா கவியழகனையும் கூட  ஒரு மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அவர் சிக்குண்டு கிடக்கும் படிமக் கூண்டிற்குள் இருந்து அவரை மீட்டெடுத்து அவரது பண்முகப் பரிமாணங்கள் மீதான ஒரு கறாரான விமர்சனத்தை முன் வைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும். குணா கவியழகன்  நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம், போருழல் காதை எனும் 5 நாவல்களை எழுதி முடித்துள்ளார். அவரால் எழுதப்பட்ட படைப்புக்கள் மூலம் அவரை அறிய முற்பட்ட அனைவரும் அவரை ஒரு தமிழ்த் தேசிய தளத்தில் இயங்கும் ஒரு புலி ஆதரவுப் படைப்பாளியாக அடையாளங் காணுகின்றனர். அதனால் புலி ஆதரவு தளத்தில் இயங்கும் வாசகர்கள் அவரை ஒரு ஈழ விடுதலைப் போராட்டத்தின்  உன்னத  வரலாற்றை எழுதும் ஒரு படைப்பாளியாகக் கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர். புலி எதிர்ப்புத் தளத்தில் இயங்குபவர்கள் அவரை புலிகளின் அராஜகங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும், இறந்து போன தமிழ்த் தேசியத்திற்கு உயிர் கொடுக்க முனையும்  ஒரு பாசிச எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றனர்.  குணா கவியழகன் மீது குத்தபட்ட இந்த முத்திரையை அகற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இதற்கு இவரது வாழ்வு, சூழல், பின்புலம் குறித்த விசாரணையுடன்  இவரது நூல்களையும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி ஒரு மீள் பரிசீலனை செய்வது மிகவும்  அவசியமானதாகும்.

Continue Reading →

என் பார்வையில் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன்காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். “முத்தைத்தரு” என்று அருணகியாரைப் பாடவைத்து – அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது.இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு ” சந்தத்தை ” தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. கால மும்கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.

நாத்திகம் பேசி நாத்தழும் பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது.” நாத்தினாக இருந்தது இரண்டு, மூன்று , ஆண்டுகளே ”  கந்தபுராணம் , பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயி ரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் ,இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன் ஆனால் அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார்.” நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன் ” என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.

கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? ” திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா ” என்பதாகும்.அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் ” கிருஷ்ணர்” படமாகும்

Continue Reading →

கவியரசர் கண்ணதாசன் ‘தென்றல்’ என வந்த தீந்தமிழ்க் கவிஞன்..! (கண்ணதாசன் பிறந்த தினம் – யூன் 24)

கவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்..! (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24) - வி. ரி. இளங்கோவன். -கவியரசர் கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகை அறுபதுகளின் முற்பகுதியில் அரசியல் – இலக்கிய ஆர்வலர்களின் கைகளில் தவழ்ந்தது. ஒவ்வொரு தமிழாசிரியர் கைகளிலும் ‘தென்றல்’ தடவிச் சென்றது எனச் சொல்வார்கள்..! அவர் தி. மு. க.வைவிட்டு வெளியேறி ஈ. வி. கே. சம்பத்தின் தலைமையில் ‘தமிழ்த் தேசியக் கட்சி’யைக் கட்டியெழுப்பிச் செயற்பட்ட அக்காலத்தில் காரசாரமான அரசியல் கட்டுரைகளைத் தென்றலில் எழுதிவந்தார். அண்ணாத்துரையையும் அவர்தம் தம்பிமாரையும் ‘கோயபல்சும் கூட்டாளிகளும்’ என்று திமுகவின் திராவிட நாடுக் கோரிக்கையைக் கடுமையாகத் தாக்கி எழுதினார். தன் மனதில் தோன்றுவதை அப்படியேபேசுவது – எழுதுவது அவரது குணாம்சம். வஞ்சகமற்ற இதயமுள்ளவர் என அவரைப் புரிந்துகொண்டவர்கள் கூறுவார்கள்.

காமராசரைத் திட்டினார் – புகழ்ந்தார்.
அண்ணாவைப் புகழ்ந்தார் – திட்டினார்.
நேருவைத் திட்டினார் – புகழ்ந்தார்.
இந்திராவைத் திட்டினார் – புகழ்ந்தார்.
கருணாநிதியைப் புகழ்ந்தார் – திட்டினார்.
எம். ஜி. ஆரைத் திட்டினார் – புகழ்ந்தார்.

அவரின் தாக்குதலுக்கு இலக்காகாத தலைவர்களே தமிழகத்தில் இல்லையெனலாம். ஆனால் யாரும் அவர்மீது கோபங்கொண்டு வசைபாடவில்லை. அவரது அழகு தமிழ்த் தாக்குதல்களை அவர்கள் இரசித்தனர் என்றே கூறலாம். இதனை எம். ஜி. ஆரே கூறியுள்ளார். சீனப்பெருந்தலைவர் மாஓ – வை ‘மா சே தூ’ என்று ‘ராக் அன் ரோல்’ நக்கல் கவிதை பாடினார். ‘சிவப்பு நிலா மாஓ’ எனப் புகழ்ந்தும் பாடினார்.

‘பஞ்சைப் பராரிகள் ஒன்று பட்டால்
அது கோட்டை தகர்த்திடும் கூட்டு
அதைக் கூட்டட்டும் நாட்டில் என் பாட்டு’..

என எழுச்சிக் கவிதையும் படித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் மறைந்தபோது ஆறாத்துயர்கொண்டு எழுதினார்.

”மேடையில் ஓர் வேங்கை பாயுமே கைகளை
விண்ணோக்கி வீசி வருமே
வீறுகொண் டோர்யானை போரிற் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே… …”

எனத் தொடர்ந்தது அவர் எழுத்து..!

Continue Reading →

பாலகுமாரனின் தாயுமானவன் நாவலில் பெண் சித்திரிப்பு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -பெண் மென்மையானவள், அமைதியானவள், அடக்கமானவள், சிந்திக்கும் தகுதியுற்றவள், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவள் என்று உருவாக்கி வைத்த கருத்தாக்கங்களும் அதனை நடைமுறைப்படுத்திய சமூகமும் இன்று மாற்றம் அடைந்து வருகின்றன. மக்கள் வாழ்வை வெளிப்படுத்துவதில் மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் நாவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே சமுதாயத்தில் மகளிரின் நிலை குறித்தும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தாயுமானவன் நாவலில் கூறும் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

பாலகுமாரனின் பெண்ணியச்சிந்தனை
பாலகுமாரன் அடிப்படையில் பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கிறார். அவருடைய எல்லாப் படைப்புகளும் பெண்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவைகளாக இருக்கின்றன. பெண்கள் தம் வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பல உள்ளன. பெண் என்பவள் குடும்பத்தைத் தாங்கும் தூண் போன்றவள். அவளாளையே குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் தூய்மையானதாகவும் பாசத்தின் பிறப்பிடமாகவும்  நம்பிக்கையின் தாயகவும் விளங்குகின்றது. இதனை, பாலகுமாரன்.

”யப்பா…! வேலை செய்யற இடம் முன்ன பின்ன இருக்கலாம் சரசு.வீடுன்ற இடம் நெஞ்சுக்கு இதமா இருக்கணும்.வீடு இதமா இருந்துச்சுன்னா எத்தினி துக்கமும், எவ்வளவு கஷ்டமும் சமாளிச்சுட முடியும். வீட்டை வீடா வச்சுக்கற பொம்பளை இருந்தா போறும், ஆயிரம் யானை பலம்.”( பாலகுமாரன், தாயுமானவன். பக்.127)

இவ்வாறு தம் ‘தாயுமானவன்’ எனும் நாவலில் கூறியுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவைத் தொடர்ந்து வருகின்றன. சிக்கல்களை அவர்கள் எதிர்க்கும் போது அவர்கள் ஆடவருக்கு எதிராகப் போராடுகின்றனர் எனும் நிலையும் உருவாகியது. மேலும், பெண் கணவனை நினைத்து தினமும் பயப்படுகின்றாள் என்பதை, ”உங்களையும் சுருட்டி கைக்குள்ள போட்டுக் கிட்டாங்களோன்னு பயம்தான்.” (மேற்படி. பக்.237) என்று கூறுகின்றார். பெண்களின் சிக்கல் என்பது வெறுமனே பெண்களின் சிக்கல்களாகா. அவை வாழ்க்கையின் சூழ்நிலைகளில் இருந்து வந்தவைகள் தான். அவற்றை பாலகுமாரன் தன் நாவல்களில் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

“வாழ்க்கை நாடகம்தான். எல்லாரும் எங்கோ ஓரிடத்தில் நடிக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான்.ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம்.அந்த உணர்வுக்குப் பெயர்தான் மென்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்.”(மேற்படி. பக்.66)

“மேல மேலன்னு போறவனுக்கு இடறத்தான் செய்யும்.கைபிடிச்ச பிடி நழுவிரத்தம் வரும்.சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும்.பல்லைக் கடிச்சுக்கிட்டு மேலே ஏறணும்.மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக் கூடாது சரசு.”(மேற்படி. பக்.125)

”சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும்.சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும்.வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.”( (மேற்படி. பக்.140)

வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பாலகுமாரன் குறிப்பிடுவதைப்போல மிக லாவகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாவல் இலக்கியங்கள் பொதுமைப்படுத்துகின்றன.

Continue Reading →

பண்பாட்டுக்கூறுகள் மோதும் முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா

எழுத்தாளர் ஆசி.கந்தராஜாதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.

அ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த – அவதானிந்த – மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.

ஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.எஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.

சமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.

இத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.

Continue Reading →

அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா என்னும் யுகபுருஷர்

அல்வாயூர்க் கவிஞர்  மு. செல்லையா என்னும் யுகபுருஷர்அறிமுகம்
வண்டுவிடுதூதும் வளர்பிறையும் அறியாதார் ஈழத்து இலக்கிய உலகில் இருக்கமுடியாது. சிறந்ததொரு கவிஞராகக் கால்பதித்து வேரூன்றிய திரு மு.செல்லையா அவர்களின் நுண்மதியும் பன்முக ஆளுமையும் அவரை ஓர் யுகபுருஷராக மிளிரச் செய்துள்ளது. நல்ல தமிழ் ஆசிரியராக, நிருவாகியாக, தலைசிறந்த கவிஞராக. சோதிடராக ஆற்றல் மிகுந்த தலைமைத்துவப் பண்புடையவராக வாழ்ந்து காட்டியமை அவருடைய பல்பரிமாணத் திறன்களுக்குச் சான்றாகும். கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழுத்தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.

மு. செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகள்
திரு மு.செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகளை அவர் தலைமை ஆசிரியராகச் செயற்பட்டமை, ஆசிரியர்களை உருவாக்கியமை,  பாடசாலையை உருவாக்கியமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து மாணவர்களை ஊக்குவித்தமை முதலிய விடயங்களின் கீழ் ஆராயலாம்.

வடமராட்சியில் செயற்பட்டுவந்த பல உயர்சைவப் பாடசாலைகள் மிகவும் மட்டுப்படுத்திய நிலையில் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருந்தாலும் அவை உரியமுறையில் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்கவில்லை. அக்காலத்தில் கிறீத்தவ மதநிறுவனங்கள் உருவாக்கிய பாடசாலைகள்கூட உயர் சமூகத்தவரின் எதிப்புகளுக்கு அஞ்சியவையாக கற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்த விரும்பாத சூழலில், எமது சமூகத்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்ய வேண்டுமானால் தனியானதொரு பாடசாலை அமைக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தனர். இத்தகைய முனைப்பான சிந்தனையே சைவகலைஞான சபையின் வழிநடத்தலால் தேவரையாளிச் சைவவித்தியாசாலை உருவாகக் காரணமாயிற்று. எமது சமூகத்தவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தேவரையாளிச் சைவ வித்தியாசாலையும் பிற்காலங்களில் தேவரையாளி இந்துக் கல்லூரியும் செய்த  பங்களிப்புப்பற்றி நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் உபாத்தியாயர் அவர்கள் 24 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்தமுறையில் அதனை நடாத்தி வெற்றிகள் கண்டார். இக்காலத்தில் தேவரையாளி சைவ வித்தியாசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாக இருந்தாலும் பாடசாலையின் அயற்சூழலில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் கல்வியில் பங்கேற்பதற்குரிய விழிப்புணர்வு உண்டாயிற்று. பெற்றோரும் பிள்ளைகளும் கல்வியில் ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆயினும், இப்பாடசாலை எதிர்நோக்கிய முக்கியமான அறைகூவலாக சைவசமயம் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இன்மை அமைந்தது. ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருந்தார்கள் எனினும் சைவப்பாடசாலை ஒன்றின்; அடிப்படைத் தேவைகளை அவ்வாசிரியர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை   

இத்தருணத்தில் உபாத்தியாயர் அவர்களின் முதன்மையானதும் முக்கியமானதுமான பணி பாடசாலைக்குத் தேவையான சைவஆசிரியர்களை உருவாக்குதலாக அமைந்தது. திரு கா.சூரன் அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்று,  தமது ஆற்றலை மேம்படுத்திக் கொண்ட உபாத்தியாயர் அவர்கள் தாமே முன்னின்று தமது மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கினார். ஆசிரியர் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் அன்றைய காலச் சூழலுக்கேற்ற எதிப்பார்ப்புகளைத் துரிதமாக மேம்படுத்தும் என்ற தொலைநோக்கு இங்கு வெற்றி காணப்பட்டுள்ளமை சமூக அசைவியக்கத்திற்கான அடிப்படையாகும். இன்று எங்கள் சமூகங்களில் அநேகர் ஆசிரியர்களாக இருப்பதற்கும் அவர்களின் வழிகாட்டலில் அநேகமானோர் கல்வியில் முன்னேறியிருப்பதற்கும் இப்பணி மூலக்கல்லாய் அமைந்தது.

Continue Reading →

புகலிட இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை

புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார்புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று – கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார். இராஜேஸ்வரி, கந்தப்பர் குழந்தைவேல் – கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தையாவார். இராஜேஸ்வரி  1969 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் அவர்களை திருமணம் செய்து,  இராஜேஸ்வரி மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர். 1970களில் இருந்து இன்றுவரை இலண்டனில்   வசித்து வருகிறார். இலண்டனிலே இவர் தம்மை முழுமையாக இலக்கிய உலகில் அர்ப்பணித்துள்ளார். இவர் சிறுகதை,  நாவல், கட்டுரைகள் முதலான ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். இராஜேஸ்வரி,  யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணி புரிந்தார். பின்னர்,  இலண்டன் சென்று பல ஆண்டுகளுக்குப் பின், தமது குழந்தைகள் வளர்ந்த பின் பல துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பட்டம் (BA) (London College of Printing 1988)  பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத் துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

இலங்கையில் 1960 களுக்குப் பின்னர், பல பெண் எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் பிரவேசிக்கத் தொடங்கினர். இக்காலப்பகுதியில் இலக்கிய ரீதியான தமிழகத் தொடர்பு நெருக்கமுற்றமையும் எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு துணை புரிந்தது. இக்காலப் பகுதியில் பெண்கள் தொடர்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய கதைகளை முதல் முதலாக எழுத முற்பட்டவர் பவானி ஆழ்வாப்பிள்ளை. இக்கால கட்டத்திலே இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி இராசதுரை, நயீமா சித்திக், இராஜம் புஸ்பவனம், பூரணி, பத்மா சேமகாந்தன், தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா போன்ற பெண் எழுத்தாளர்களையும் விதந்து கூறலாம். அதிகளவு புலம்பெயர் நாவல், சிறுகதைகளைப் படைத்த பெண்ணிய எழுத்தாளராகவும் இன்றுவரை இலக்கிய உலகில் எழுதுபவராகவும் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளராகவும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,   தமது எழுத்துக்களால் பிரபல்யம் அடைந்துள்ளார். மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய ஆக்க இலக்கியங்களையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். 

மருத்துவ நூல்கள்

1.    தாயும் சேயும்
இவரது ‘தாயும் சேயும்’ என்ற மருத்துவ நூல் 2002ஆம் ஆண்டு மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒரு பெண்ணின் முக்கிய சவால்களான கருத்தரித்தல், கர்ப்ப காலம், மகப்பேறு, புதிய சிசுவை வளர்த்தெடுத்தல் முதலானவற்றை இராஜேஸ்வரியின் தாயும் சேயும் என்ற நூல் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது. இந்நூலில் தாயினதும் சேயினதும் உடல், உள வளர்ச்சி பற்றி விபரிக்க முனைந்துள்ளார். இந்நூல் தாய்மையின் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறந்து முதல் ஐந்து வருடங்களையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

2.    உங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி
மருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த இந்நூல் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இவரது இரண்டாவது மருத்துவ நூலாகும். இது தமிழ் மக்களின் ஆரோக்கிய விருத்தியை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  இருதய நோய்கள், நீரிழிவு, உளவியல், பாலியல் முதலானவை பற்றி இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை பல ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள விடயங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளன.

Continue Reading →

அஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான்!

எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான்நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் தோப்பில் முகம்மது மீரான். அவர் மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பலரின் பதிவுகள் தாங்கி வந்தன.  அமைதியாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளி தோப்பில் முகம்மது மீரான். பல்வகையான இன, மத ரீதியாக இன்னல்கள் பலவற்றை முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும்  இன்றைய காலகட்டத்தில் தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள் இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது: அது அவரது படைப்புகள் முஸ்லீம் மக்களின் சமுதாயத்தை, அவர்கள் மத்தியில் நிலவும் பல்வகைக் கருத்துகளை, அவர்கள் மத்தியில் பேசப்படும் மொழியினை இவற்றுடன் அவர்கள்தம் வாழ்வினை வெளிப்படுத்தும் படைப்புகள். அவை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும் இலக்கியச் சுவைத்தலுக்கு மேலதிகமாகத் தருகின்றன. அத்துடன் அவரது படைப்புகள் முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விமர்சிப்பதையும் காண முடிகின்றது. அவ்வகையிலும் அவர் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

படைப்பாளியொருவருக்கு நாம் செய்யும்  முறையான அஞ்சலி அவரது  படைப்புகளை வாசிப்பதுதான். அவ்வகையில் அவருக்கு அஞ்சலி செய்யும் இத்தருணத்தில் அவரது வலைப்பதிவான ‘வேர்களின் பேச்சு தோப்பில் முஹம்மது மீரான்’ பக்கத்திலிருந்து அவரது நேர்காணலொன்றினையும், அவரது முக்கிய மூன்று நாவல்களில் இரண்டான ‘துறைமுகம்’, ‘சாய்வு நாற்காலி’ ஆகிய நாவல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரைகளிரண்டையும் இங்கு தொகுத்துத் தருகின்றேன். அஞ்சலி செய்யும் ஒவ்வொருவரும் இத்தருணத்தில் அவற்றைப்படிப்பது அவசியம். அவரை, அவரது படைப்புகளை மற்றும் அவரது எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமென்று கருதுகின்றேன்.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாக் குறிப்பு: தோப்பில் முகமது மீரான் https://ta.wikipedia.org/s/11kk

தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 – மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

விருதுகள்: சாகித்திய அகாதமி விருது – சாய்வு நாற்காலி (1997),  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,  இலக்கியச் சிந்தனை விருது,  லில்லி தேவசிகாமணி விருது,  தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது &  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

எழுதிய நூல்கள்: (முழுமையானதல்ல)
புதினங்கள்: ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988),  துறைமுகம் (1991), கூனன் தோப்பு 1993),  சாய்வு நாற்காலி (1997), அஞ்சுவண்ணன் தெரு,  குடியேற்றம்(2017)
சிறுகதைத் தொகுப்புகள்: அன்புக்கு முதுமை இல்லை,  தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்:  தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது), வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

Continue Reading →

பாலியல் வன்முறை

- ஸ்ரீரஞ்சனி -– நெதர்லாந்தில் நிகழ்ந்த 34வது பெண்கள் சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை –

பாலியல் வன்முறை என்பது பாலியல் இலக்கை நோக்கிய உடல்ரீதியான மற்றும் உளரீதியான ஒரு துன்புறுத்தல் ஆகும். எங்களுடைய கலாசாரம் மற்றும் அமைப்புமுறைக் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் இது அதிகாரத்தின் ஒரு வகையான வெளிப்படுத்தலாக இருக்கிறது. பால்மயமாக்கப்பட்ட இந்த வன்முறையைச் சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு, அதன் பல்வகைமையான தோற்றுவாய்களை அடையாளம்காணல், அவை பற்றிப் பேசல்,  அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகளை இனம்கண்டறிதல் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன.

வாழ்க்கைக் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் மூன்றில் ஒரு பெண்ணும், ஆறில் ஒரு ஆணும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பெண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பாலியல் வன்முறை பொதுவானதாயினும், இன்றைய எனது பார்வை தமிழ் பெண்களாகிய எங்களை நோக்கியதாகத்தான் இருக்கப்போகிறது.

இலங்கையில் வாழ்ந்த எங்களுக்கு ரெயினில், பஸ்சில் போகும்போது நிகழ்ந்த பலவகையான பாலியல் வன்முறைகள் நினைவிருக்கலாம். ஆனால், அந்த நேரம் அது பற்றி நான் எதுவுமே செய்யவில்லை. அப்படித்தான் எங்களில் பலர் இருந்திருப்போம். அப்படியான நேரங்களில் முடிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்போம்; நகரவே முடியாத நெருக்கடி எனில், அது எவ்வளவுதான் அருவருப்பைத் தந்திருந்தாலும் அதைச் சகித்திருப்போம். இவ்வகையான சம்பவங்கள் நாங்களும் அவற்றை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை அல்லது நாம் எதுவும் செய்யமாட்டோம் என்பதால் என்னவும் செய்யலாமென்ற தைரியத்தை அந்தப் பாலியல் வன்முறையாளர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடும். அதனாலும் அந்தப் பாலியல் வன்முறையாளர்கள் அப்படியான செயல்களை மேலும் மேலும் செய்திருக்கலாம். எனவே முடிந்தவரை உடனடியான எதிர்ப்பைச் சொல்லல் மிகவும் முக்கியமாகும். முடியாதபோது அவரவர் விருப்பத்துக்கும் செளகரியத்துக்கும் ஏற்ப அதனை எப்படி மேவுவது என ஆராய்வது நல்லது.

பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, பாலியல் உறுப்புக்களை வெளிக்காட்டல், விரும்பத்தகாத கருத்துரைகள் சொல்லல், இரத்த உறவுள்ளவர்களுக்குள் வன்புணர்வு எனப் பலவகைகளில் பெண்கள் மீது இந்தப் பாலியல் வன்முறை நடாத்தப்படுகிறது. 

ஆரம்ப காலங்களில் துணையை இழந்த பெண்ணை அவனுடன் உடன்கட்டை ஏற்றுதலில் ஆரம்பித்த பால் அடிப்படையிலான இந்தப் பாலியல் வன்முறை, பின் கைம்மைகாப்பது எனத் தரையில் படுக்கும்படி, தலைக்கு மொட்டையடிக்கும்படி, சுகங்களைத் துறக்கும்படி அறிவுறுத்தி, அதன்பின் வெள்ளைச் சீலை, பூ, பொட்டு இன்மையுடனான ஓர் அபசகுணமாக பெண்ணை உருவகப்படுத்தியது. தற்போது, காலத்துடனான மாற்றமாக மேலும் பல்வேறு புது வடிவங்களில் இந்தப் பாலியல் வன்முறை உருவெடுத்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கின்றனவே அன்றி பெண்கள் மேலான இந்தப் பாலியல் வன்முறையின் தீவிரம் குறையவில்லை.

Continue Reading →

தமிழ் மொழியின் எதிர்காலம்!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்ஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும் தரகராக வேலை செய்கிறது. தரகர் என்பவர் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவர். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி , அம்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல்,பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது. இதற்கு உதாரணம் இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப் படும் ஆங்கில மொழியாகும். பதினைந்தாம் றூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத ‘தரகனாகவும்;’ செயற் படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு, அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப்பேசுவது தமிழார்வலர்களாற் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்று பட்டு இணையும் சில அமைப்புக்களின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆழமான சர்ச்சைகள் நடக்கின்றன.. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமானவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள ‘புத்திஐPவிகளின்;’ சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.

ஓரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாகவிருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் ‘குறிப்பிட்ட’காரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதால் அம்மொழி; மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப் போனவை ஒரு சில சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயுதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும். அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.

இன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமைதெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அதேமாதிரி, இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.

Continue Reading →