நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை

  -  நடேசன் -– அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல்,  இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை –

நீலகண்டப்பறவையைத்தேடி – வங்காளம்

ஹோமரின் இலியட் மற்றும்  ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா.

மிருகங்களை பாத்திரமாக்கிய  ஐதீகக்  கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இறுதிவரையும் நாயொன்று சொர்க்கத்திற்கு செல்கிறது. பாரதத்திலே  இயற்கை கதைக்களமாக மாறியது. ஆறுகள்,  வனங்கள் மற்றும் கடல்கள் இந்திய இலக்கியமெங்கும் செறிந்தள்ளன. மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசம் சென்றதுபோல் இராமாயணத்திலும் பதினான்கு வருடங்கள் இராமன்,  சீதை, இலக்குவன் சென்ற காடு வருகிறது.  காளிதாசனின் மேகதூதம் போன்று இயற்கையையும் கொண்டாடும் கதைகள் உருவாகிய இடம் பாரதம்.
வங்காள நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலை வாசித்தபோது,  புதிய முரண்பாடுகளைத் தன்னிடம் கொண்ட பழங்கால இந்திய இலக்கியத்தின் உண்மையான நேரடி வாரிசாக வங்காள இலக்கியம் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வங்காளிகளான ரவீந்திரநாத் தாகூர்,  சத்யஜித்ரேய் போன்றவர்கள் சர்வதேசப் புகழையடைந்தது தற்செயலான சம்பவமல்ல. மற்றைய இந்திய மொழிகளில் நாவல்கள் வெளியாவதற்க பல வருடங்கள் முன்பாக வங்காளத்தில்  நாவலிலக்கியம் (1865 துர்கேசநந்தினி) தொடங்கிவிட்டது. முகமதிய படையெடுப்பு முக்கிய கருவாக  அமைந்தது.

வங்காள நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பவங்களின் கோர்வையாக வருவதை விட்டு விலகி மனஓட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.  பாதர் பதஞ்சலி (1929 )அபராஜிதா(1933) கவிபூதிபூஷண் (Bibhutibhushan Bandyopadhya) போன்றவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாவல்களே.

இவர்களை அடியொற்றித் தோன்றிய  நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி  நாவல், தற்போதைய வங்காளதேசம் எனப்படும் அக்கால கிழக்கு வங்காளத்தில் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த கதையைச் சொல்கிறது .

Continue Reading →

வித்துவான், பண்டிதர் வேந்தனார் “ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர்”

வித்துவான், பண்டிதர் வேந்தனார் “ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர்”– வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் 05.11.18. அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.  வித்துவான் வேந்தனாரை அறிஞர்கள் பலர், பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில், விதந்து பேசியும் எழுதியும்  வந்துள்ளனர். தலைசிறந்த உரையாசிரியர், நனி சிறந்த கட்டுரையாளர், மிகச் சிறந்த குழந்தைப் பாடலாசிரியர், ஆற்றல் மிகுந்த கவிஞர், பேராண்மைமிக்க சொற்பொழிவாளர், தனித்தமிழ்ப் பற்றுமிக்க தமிழ்ப் பேரன்பர்,  சைவ சித்தாந்த தத்துவங்களை நன்கறிந்த சித்தாந்த சிரோமணி என பல துறைகளில் சிறப்புற்றிருந்த வேந்தனார் அவர்கள், மாணவர் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பெரும் தமிழாசானுமாவார். வேந்தனாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, வேந்தனாரின் உரையாசிரியத் தன்மையின் சிறப்பினை விதந்து போற்றி, அவரின் மாணவரும்,  நீண்டகாலம் வேந்தனாரை அறிந்தவருமான இளவாலை புலவர் அமுது  அவர்கள், 2006 ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்’ நூலில் எழுதிய கட்டுரையிது –


ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் ஒருவர், எங்கள் காலத்தில் இருந்தார் என்றால், அவர் வித்துவான் வேந்தனார் தான். வேந்தனார் ஒரு பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்றாலும் அவரை உரையாசிரியர் என்பதே முற்றும் பொருந்தும். பொதுத் தராதரப் பரீட்சைக்கு எனக் குறிப்பிட்டிருந்த இலக்கியப் பகுதிக்குப் பல ஆண்டுகளாக உரை எழுதி வந்தவர் வித்துவான் வேந்தனார்! வேறு சிலரும் இந்தத் துறையில் முயன்றனராயினும், வேந்தனாரின் உரை ஆற்றலுக்கு ஈடுகொடுக்க இயலாமற் போய்விட்டனர். பல்லாயிரம் தமிழ் மாணவர் வேந்தனாரின் உரைச்சிறப்பை அறிந்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் உயர்ச்சியும் பெற அவர் வழிவகுத்தார் எனலாம். அரும்பத உரை, பொழிப்புரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு, எடுத்துக் காட்டு, வரலாறு, நயம் உரைத்தல் என்பனவாக அவர் குறிப்பிட்டு எழுதிய திரவியங்கள் தேடக் கிடைக்காதவை.

இலக்கியம் என்பது ஒரு பசு மாடு. அதிலே பழக்கமில்லாதவர்கள் பால் கறக்கமுடியாது! கண்டவர்களும் மடியில் கைவைத்தால் அது காலால் அடிக்கும், கொம்பால் குதறும் என்று அஞ்சினார்கள் சிலர். இலக்கியம் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களுடைய முதுசம் பண்டித பரம்பரையின் சீதனம். அந்தத்துறையை கரையிலே நின்று பார்க்கலாமேயன்றி உள்ளே கால்வைப்பது ஆபத்தானது என்று எண்ணியவர்களும் இருந்தார்கள். இலக்கியம் என்பது இலக்கணத்தில் ஊறிக்கிடக்கும் ஊறுகாய். ஆழ்ந்த  அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களே அதை எடுத்து வாயில் போடலாம் என்று சிந்தித்தவர்களும் இருந்தார்கள். தேள், கொடுக்கான், சிலந்தி விடச் செந்துக்களைப்போல இலக்கியம் பாமரர்களை ஒற்றை விரல் காட்டி அச்சுறுத்தியது. கற்கக் கசடறக் கற்பவை… எனத் தொடங்கவே நாக்குத் தெறிக்கும் குறள் வரிகள், அதில் வரும் இன்னிசை அளபெடை. சொல்லிசை அளபெடை அதற்குப் பரிமேலழகர், “எவன் என்னும் வினாத்தொகை என் என்றாய் ஈண்டு இன்மை குறித்து நின்றது” என்றவாறான உரைகளும் ஊமாண்டி காட்டின. கம்பராமாயணம், திருக்குறள், கந்தப்புராணம் என்ற இலக்கிய நூல்களைப் பிஞ்சு உள்ளங்களில் இனிய ஒட்டு மாங்கனிபோல சுவை தெரிய அறிமுகம் செய்து வைத்தார் வித்துவான் வேந்தனார். அவருடைய உரையை நினைந்து கைதட்டியவர்களின் ஓசை, இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வித்துவான் வேந்தனார், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேலணை, பிறநாட்டுக் கலாசாரம், பிறமொழிக் கலப்பு, பண்பாடு என்பவற்றால் பழுதடையாத மண். எனவே அவருடைய அத்திவாரம் சிறந்த நாற்றுமேடை எனலாம். வித்துவான் அவர்கள் பரமேஸ்வராக்கல்லூரி இயற்றமிழ் பேராசிரியராக நீண்டகாலம் பணிபுரிந்தவர.; நாவலர் பாடசாலையில் பண்டித வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தவர். இவனும் அவரிடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் பாடம் கேட்க வாய்ப்புப் பெற்றவர்களில் ஒருவன்.

ஒருநாள் “ஐயா! நீங்கள் யாரிடத்திலே இலக்கணம் கற்றுக் கொண்டீர்கள்?” என்று கேட்டுவிட்டேன். உடனே அவர் சிரித்தவாறு, “சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போரிடத்திலேதான் என்றார.;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இலக்கணத்துக்கு உரை எழுதிய பெரியார்களே! வித்துவான் வேந்தனாருடைய ஞாபக சக்தி அபாரமானது. ஒருமுறை வாசித்துவிட்டு அப்பகுதியைப் பாராமல் சொல்லக்கூடிய ஆற்றலைக் கண்ட மாணவர்கள் வியப்புற்றோம்.

Continue Reading →

மராத்தி இலக்கியம்!

 - சே.முனியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, ஆய்க்குடி, தென்காசி – 627852 -மராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது.

இந்திய மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளுள் மராத்தி நான்காவது இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மொழி பாலி என்ற மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்டி அல்லது மகாராஷ்டிரா அல்லது அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டு வந்தது. பின்பு அதன் பேச்சு மொழியில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களே இன்றைய மராத்தி மொழி உருவாக வழிவகுத்தது.

தோற்றம்
மராத்தி மொழியின் தோற்றம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனச் சுட்டப்படுகின்றது. நவீனகால மராத்தி பிராகிருத மகராஷ்ட்ரி மொழியிலிருந்து வந்தது. கி.பி.875ஆம் ஆண்டு வரை சாதவாகனப் பேரரசின் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மற்ற பிராகிருத மொழிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மொழியாக மேற்கு, தென்னிந்தியாவில் பேசப்பட்டு வந்தது. மேலும் இது மகாராஷ்ட்ரி அபபிராம்சா என அழைக்கப்பட்டது. மகாராஷ்ட்ராவில் வாழ்கின்ற ஐம்பது மில்லியனுக்கு மேலான மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகவும் திகழ்கிறது.

மகாராஷ்ட்ரிரா எனும் பெயர் மகாபாரதத்திலோ, இராமயணத்திலோ இடம் பெறவில்லை. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவாங் சுவாங் இந்தப் பகுதியை மா-ஹா-லா-சொ (ma-ha-la-cho) என்று குறிப்பிடுகின்றார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அல்பர்னி மகாராஷ்டிராவை மார்காட்டா (Marhatta) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. அதாவது, மராத்தி மொழி சமசுகிருதத்திலிருந்து வளர்ச்சியடைந்தது என சி.வை.வைத்யாவும் (C.V.Vaidya), அபபிரம்சாவிலிருந்து வளர்ச்சியடைந்தது என ஸ்டென் க்னோவும் (Sten Knonow) கூறுகின்றனர். பலர் பஞ்ச திராவிட மொழிகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகின்றனர்.

கைரேயின் (Khaire) கருத்துப்படி (முந்தையப் பேச்சு) மராத்தி மொழியின் பேச்சுமொழிச் சொற்கள் பல தமிழிலிருந்தும் கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளிருந்தும் கடன் வாங்கப்பட்டு யாதவர்களால் பேசப்பட்டதெனக் கூறுகின்றார்.

பெரும்பாலான மக்கள் மராத்தி மொழியானது பிராகிருதத்திலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர். ‘விஜயாஅதித்ய’ செப்புத்தகடு மற்றும் சரவணபலகோலா (கர்நாடகம்) கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி என்று சுட்டுகின்றது. மேலும் அது ‘உத்தியோட்டன்’ என்ற சைன மதத்துறவியின் கூற்றுப்படிக் கொங்கனி எனவும் சொல்லப்பட்டது.

கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன் (யாதவா காலத்திற்குமுன்) மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் இல்லை. அதன்பின் வந்த ஆட்சியிலேஎ மராத்தி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

Continue Reading →

எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்: சமத்துவத்தின் வலிமையைத் தனது படைப்புக்களில் உணர்த்தியவர்!

ழுத்தாளர் அகஸ்தியர் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அதனையொட்டிப் பிரசுரமாகும் கட்டுரை!

எழுத்தாளர் அகஸ்தியர்இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.

இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் படைப்பாளியின் அடையாளத்தை அவர் யார் என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அரசியல் சாராத, ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வுகளின் பிரபலிப்பான படைப்பாக ஒரு இலக்கியம் கணிக்கப் பட்டாலும் அவனின் வரிகளில் ஒன்றிரண்டு அந்த இலக்கியததைப் படைத்தவனின் சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்.

இலங்கை எழுத்தாளர்கள் பலர் 40-60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள். அவர்களின் சமுதாய வெளியுலகத் தொடர்பால் கண்ட கொடுமைகளையுணர்ந்த உள்ளுணர்வின் கோபப்பொறிகள்,ஆதங்கங்கள், அதிர்வுகள்,என்பன அவர்களின் படைப்புக்களில் பிரதி பலித்தன.

ஒட்டுமொத்தமான மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு வழிதேடியவர்களில் சமயவாதிகள்,அரசியல்வாதிகள் என்று பலர். அவர்களில் தங்கள் வாழ்க்கையையே ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை மாற்றும் வித்தில் தங்கள் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர்களும்; அடங்குவர்.

தமிழ் இலக்கியம் வளர்ந்த தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இலக்கியத்தற் கேட்காமலிருந்த கால கட்டத்தில் அவர்களின் துயரைத் தங்கள் படைப்புக்களில் காட்டியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.

அந்த வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பாளிகளில் அகஸ்தியரும் ஒருத்தர். இவர், 28.8.1926ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் திருவாளர் சவரிமுத்து-அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் எழுத்தாற்றலை மதித்து இவருடன் எனக்கு ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதற்கு என் தாயார் மாரிமுத்து பிறந்த அதே 1926ம் ஆண்டு இவரும் பிறந்தது ஒரு காரணமோ எனக்குத் தெரியாது.

பாரிசில் இவர் வாழ்ந்தபோது ஓரிரு நாட்கள் அவருடன் பழகியது எனது அதிர்ஷ்டம் என்று கருதினேன்.தன்னலமற்ற ஒரு சாதாரண தமிழன், தனது சமூகத்தில் படிந்து கிடக்கும் பன்முகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கம் எப்படி ஏழை மக்களை வதைக்கிறது. வாட்டுகிறது,மனிதராக மதிக்காமல் இழிவுபடுத்துகிறது என்பதைத் தனது படைப்புக்கள் மூலம் உலகுக்குச் சொன்ன முற்போக்கு எழுத்தாளர்களில் திரு அகஸ்தியரும் முன்னிலைப் படுத்தப் படவேண்டியவர்.

Continue Reading →

கவிஞர் பா.சத்தியசீலன்: நாம் மறந்துவிடக்கூடாத ஒரு குழந்தைக் கவிஞன்

 - என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -காலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட  ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.

என்னுள் முகிழ்ந்த கவிஞர் ‘பாவலவன்” பா.சத்தியசீலனின் நினைவும் அவ்வாறானதே. அண்மையில் லண்டனில் ‘புத்தகப்பிரியர்” ஒருவரின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தேன். அதில் இருந்த தடித்த தமிழ் நூலொன்றை எடுத்து விரித்தபோது அதனுள் சிக்கியிருந்த மிகப்பழைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதமொன்று பொத்தென நிலத்தில் வீழ்ந்தது. வாழ்த்து மட்டையின் தடிப்பு அதனை விரிக்கத் தூண்டியது. அது ஒரு கையடக்கக் கவிதை நூல். அதன் தலைப்பு ‘நத்தார் வாழ்த்து”. அந்தச் சிறிய பிரசுரம் பா.சத்தியசீலனின் சிறிய கவிதைநூல். முன்னாளில் ‘மில்க்வைற்” கனகராசா அவர்கள் ஏராளமான இலவசப் பிரசுரங்களை அமரர் க.சி.குலரத்தினம் அவர்களின் துணையோடு மில்க்வைற் விளம்பரங்களாக வெளியிட்டு விநியோகித்ததை எம்மால் மறக்கமுடியாது. பாவலவன் சத்தியசீலனின் ‘நத்தார் வாழ்த்து”க் கவிதையும் அப்படியாதொரு சிறு கவிதைநூல் தான். நத்தார் வாழ்த்துக் கவிதையை வாழ்த்து அட்டைபோன்று வடிவமைத்து சிறு பிரசுரமாக அந்நாட்களில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறு பிரசுரமே இலக்கிய நண்பர் பா.சத்தியசீலன் பற்றிய மனப்பதிவுகளை இன்று இரைமீட்க வைத்துள்ளது.

பா.சத்தியசீலன் தனது நத்தார் வாழ்த்து கவிதைப் பிரசுரத்துடன் 1970களின் இறுதிக்கட்டத்தில் ஒருநாள் என்னை வந்து புங்குடுதீவு சர்வோதய நூலகத்தில் சந்தித்தார். வெறும் அட்டைவழி வாழ்த்து மரபை உடைத்து இப்படியான  தூய தமிழ் வாழ்த்து நூல்களை வாங்கி எமது சமூகம் பரிமாறிக்கொண்டால் என்ன என்ற பெரிய புரட்சிகரமான சிந்தனையுடன் தான் அவர் அன்று என்னை அணுகியிருந்தார். அவரது கைகளில் அவர் எழுதிய மேலும் பல நூல்கள். அனைத்தும் சிறு பக்க எணணிக்கையுடன் கூடியவை. அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் இவ்வாறு வெளியிட அவர் முனைந்ததாக எனக்குள் ஒரு நினைவு.

பா.சத்தியசீலனின் பூர்வீகம் அல்லைப்பிட்டி. யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தின் நுழைவாயில் கிராமம் அது. அவர் மணம்புரிந்தது நவாலியில். ‘கலைவண்ணம்” என்பது அவரது நவாலி இல்லத்தின் பெயர். மானிப்பாய், நவாலி தெற்கில் சின்னப்பா வீதியில் அவரது புகுந்த வீடு அமைந்திருந்ததாக நினைவு. நான் ஆனைக்கோட்டை- அயல் கிராமத்தைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டதாலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அடிக்கடி நவாலியூடாகப்  பயணிப்பதாலும் 70களின் இறுதிப்பகுதியில் சத்தியசீலன் எனக்குப் பரிச்சயமான ஒரு இலக்கியவாதியாக மாறிவிட்டார்.

Continue Reading →

சாதாரண மக்களின் விடிவுக்காக பேனா பிடித்த படைப்பாளி நாவேந்தன்..!

‘கரும்பூறும் நறும்பாகும் கற்கண்டும்
கனிரசமும் கலந் தொன்றாய்
அரும்போதின் தேனமுதோ அலைகடலின்
திருவமுதோ அன்றி வீணை
நரம்போதும் இன்னிசையோ எனவியந்து
நயந்து கடல்மடை திறந்தாலென்ன
வரும்போது அவன்பேச்சில் இறும்பூது
எய்தாதார் யாருமில்லை..!”

நாவேந்தன்கவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் – பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது  நினைவு    தினம் 10 – 07 – 2018 அன்று ஆகும்..! யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்..! சாதாரண மக்களின் விடிவுக்காகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதாரண மக்களின் பிரச்சினைகளை – அவர்களது ஆசாபாசங்களை வாழ்வியல் முரண்பாடுகளைத் தமது சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவரது சிறுகதைகள் வெறும் கற்பனைகளல்ல. அவை யதார்த்த பூர்வமானவை. சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தவும் சமூக அவலங்களையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்தவும் அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவின. மானுடம் பயனுற விரும்பும் இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தம்மை அர்ப்பணித்து தொண்டாற்றியவர். அவர்    பன்முகத் திறன்கொண்ட படைப்பாளி. ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், பேச்சாளர், தொழிற்சங்கவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் மக்கள் மனதில் அவரது பணிகள் நிலைத்து நிற்பதை நிதர்சனமாகக் காண முடிகிறது.

அமரர் நாவேந்தன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். த. திருநாவுக்கரசு என்பது இவரது இயற்பெயராகும். இவரது பேச்சாற்றலைக் கண்டு அன்று தமிழரசுக்கட்சித் தலைவர் ”கோப்பாய்க் கோமான்” கு. வன்னியசிங்கம் ‘நாவேந்தன்” என்று பாராட்டினார். அன்றுதொட்டு நாவேந்தன் என்னும் புனைபெயராலேயே ஈழத்திலும் தமிழகத்திலும் நன்கறியப்பட்டவராகத் திகழ்ந்தார். தமது பதினைந்தாவது வயதில் ‘இந்து சாதனம்” மூலம் எழுத்துத்துறையில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை, விமர்சனம் எனப் பல்வேறு துறைகளில் தமது எழுத்தாற்றலைப் புலப்படுத்தியுள்ளார். ”சுதந்திரன்” பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்களுள் நாவேந்தனுக்குச் சிறப்பிடமுண்டு. சுதந்திரன் பத்திரிகையிலேயே அவரது பெரும்பாலான படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. நாவேந்தனின் தமிழ் நடை தனித்துவமானது. கொஞ்சும் தமிழிலும் குமுறும் எரிமலை நடையிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். அவர் நடத்திய ‘சங்கப்பலகை” இதழில் எழுதிய விமர்சனங்கள் இதற்குத்தக்க சான்றாகும்.

Continue Reading →

அலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து

அலெக்ஸி டால்ஸ்டாய்– கீற்று.காம் இணையை இதழில் வெளியான இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். –

பண்டைக் காலத்திலிருந்தே மனித குலம் தனது அறிவாற்றலையும் மனோபாவனையையும் புலப் படுத்தும் வகையில் பல இலக்கியங்களைப் படைத் திருக்கிறது. ஆயினும் தனக்கே உரிய விதிகளுடன் திகழும் நாவல் என்ற இலக்கியத்துறை தொழிற்புரட்சிச் சகாப்தத்தின் நன்கொடையேயாகும். அதை அச்சு யந்திரத்தின் சிருஷ்டி என்றும் ஒரு வகையில் குறிப் பிடலாம்.

ஒன்றோடொன்று உயிர்த்தொடர்பு கொண்டிராத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கதைக்கோவைகளைப் போலவல்லாமல், நாவல் உறுப்பழகும் ஒருமை நயமுமாய்ப் பெற்றுப் பொலியும் நெடுங்கதையாக உள்ளது. வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தைத் தன் கற்பனை வளத்தால் புதிதாகச் செப்பம் செய்து தரும் சிறுகதை ஆசிரியனைப்போலவல்லாமல், அகலக்கால் விரித்து, வாழ்வின் பல்வகை அம்சங்கள் வெவ்வேறு கோணங் களிலிருந்து மனோபாவனைச் சிறப்புடன் நோக்கும் உரிமை நாவலாசிரியனுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவன் எத்துணைதான் சஞ்சாரம் செய்த போதிலும், நாவலின் கட்டுக்கோப்பில் ஓர் உள் தொடர்பு இருப்பது அவசியம்; நாவலின் கதை நிகழ்ச்சியில் ஒருமை நயம் மிளிர்வது இன்றியமையாதது. இந்த வகையில் நாவலைக் காப்பியத்துடன் ஒப்பிடலாம். காப்பியத்தில் கிளைக் கதைகள் இருப்பினும் அவை காவியக் கதைக்கு இன்றியமையாதனவாகிக் கதை யோட்டத்தில் ஒன்றிவிடுகின்றன வல்லவா?

நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான். மேலும் கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம், சங்கீதம் ஆகியவற்றால், நாவலால் இயலாத அளவுக்கு நுட்ப மாகவும் திட்பமாகவும் வாழ்வின் ஒரோர் அம்சங்களை உணர்த்த முடியுமென்பதும் உண்மையே. ஆனால் ஆங்கில இலக்கிய ஆய்வுரையாளரான ரால்ப் பாக்ஸ் கூறுவதைப்போல், தனி மனிதனின் முழு வாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்ச முடியாது. ஒளிவு மறைவாயுள்ள அக உலக ஓட்டங்களைத் துல்லியமாகப் புலப்படுத்தும் தனித் திறன் நாவலுக்கே உரியது என்று புகழ்பெற்ற ஆங்கிலேய நாவலாசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர் கூறுவது முற்றிலும் உண்மையே.

நாவல்களில் பல ரகங்கள் உண்டு. படிக்கும்போது தோன்றி மறையும் உணர்ச்சியைத் தவிர வேறு எத்தகைய அனுபவத்தையும்  அளிப்பதற்கு இயலாத ‘கிளுகிளுப்பு’ நாவல்களை நாம் இரண்டாம்முறை படிக்கமாட்டோம். மறு புறத்தில், ஜனங்களின் ஆசாபாசங்களிலும் ஆர்வ அபிலாஷைகளிலும் நலன்களிலும் வாழ்விலும் போராட்டத்திலும் ஒன்றி நிற்கும் எழுத்தாளன் தன் படைப்பில் யதார்த்த உண்மையை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளியிடும் வல்லவன் ஆகிறான். அத்தகைய எழுத்தாளர்களில் சிறந்தவர்களது இலக்கி யங்கள், சாகாவரம் பெறுகின்றன. ஐம்புலன்களும் அறிதிறனும் ஆத்மாவும் புதிய அனுபவம் பெறுவதற்கு அவை உதவுகின்றன. அவற்றால் ஏற்படும் அனுபவத்தை மறத்தற்கியலாது. அறிவைப் பெருக்கி, மனோ பாவனையை வளம்பெறச்செய்து, இதயத்தைத் தூய்மை அடையச்செய்யும் அத்தகைய நாவல்கள் காப்பிய இயல்பினைப் பெறுகின்றன என்னலாம்.

Continue Reading →

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
திருமணம் என்பது பழங்காலந் தொட்டே இருந்து வருகின்ற ஒன்று. இத்திருமணம் பற்றித் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைகளையும் ஒப்பில்லா குணங்களையும் தொல்காப்பியர்கூறியுள்ளார். அவற்றில் தலைமக்களுக்குரிய ஆகாத குணங்களை அகநானூற்றோடு ஒப்பிட்டு ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்’ எனும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்
இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பன்னிரெண்டு தன்மைகளையும் தொல்காப்பியம் கூறியுள்ளது. தற்பெருமை, கொடுமை, தன்னை வியத்தல், புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக் கூடாது, மறதி, ஒருவரையொருவர்ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பன்னிரெண்டு தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றார். இதனை, 

“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறைப்போ டொப்புமை
என்றிவை யின்மை என்மனார்புலவர்.” (நூ.26)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேலும் இதனைக் குறித்து தமிழண்ணல் அவர்கள், “தொல்காப்பியர் பன்னிரண்டு ஆகாப் பண்புகளைக் கூறி, அவற்றைப் போக்க வேண்டும் என்று கூறுகிறார். திருமணத்திற்கு முன் இத்தகைய தீய குணங்கள் இல்லாதவர்களாகப் பார்த்து மணம் பேச வேண்டும். திருமணமாகிவிட்டாலோ, இத்தீய குணங்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டும். இன்றேல் இல்லறம் இனிதாக அமையாது.” (தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், ப.37) எனக் கூறியுள்ளார். அதாவது மேற்கண்ட குணங்கள் இல்லாதவர்களைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் திருமணம் என்பது இனிமை பயப்பதற்கு பதிலாக துன்பத்தை – துயரத்தைப் பயப்பதாகவே அமையும் என்பது அவர்தம் கருத்தாக உள்ளது.

நிம்பிரி
நிம்பிரியாவது பொறாமை, பிறர்நல்வாழ்வு கண்டு பொறுக்க முடியாத சிறுமை. இதன் தோற்றத்தினை, “இளையோர்பருவத்தில் G+ப்பின் மாற்றங்கள் ஏற்பட்டு விட்ட பின்னர் எதிர்பாலினர் பற்றிய அக்கரை வளரும் போது பொறாமைக் குணங்களும் தோன்றுகின்றன.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.88) மேலும், “பொறாமை என்பது சினம், அச்சம், அன்பு, இழப்பு ஆகியவைகள் இணைந்த மனவெழுச்சியாகும்.” (மேலது, ப.87) என அ. அப்துல்கரீம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.

Continue Reading →

அகப்பாடல்களில் பறவை – மனித உறவுகள் (நற்றிணையை முன்வைத்து)

- முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -சங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புறா, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.

1. குருகு
நற்றிணையில் குருகைப் பற்றியப் பாடல்கள் 28 ஆகும். இதுவே அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவையினமாகும். தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் நற்றிணையில் அமைந்துள்ளன.   

தலைவி ‘நாரையே நீயேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக’ என்று தூதனுப்புகிறாள். ‘கரிய கால்களை உடைய வெண்ணிறக் குருகே நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டுத் தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெரு வருத்தத்தைத் தருகிறது. அதனை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக. கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த கடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் கொடுக்கும், தாழை மரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக’ என்று நாரையிடம் கூறுகிறாள். இதனை,

“கருங்கால் வெண்குருகு! எனவ கேண்மதி@
பெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை@
அது நீ அறியின், அன்புமார் உடையை@
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்குறை
இற்றாங்கு உணர உரைமதி”  (நற்றிணை: 54)

Continue Reading →

பிடித்த சிறுகதை – 1 – நந்தினி சேவியர்.

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் ‘எனக்குப் பிடித்த சிறுகதை’  என்னும் தலைப்பில் சிறு குறிப்புகள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும்.  – பதிவுகள் –


 

பிடித்த சிறுகதை – 01

கருத்து வேறுபாடுகளை மறந்து. ஒரு வாசகன் என்ற வகையில் சில எழுத்தாளர்களின் (எனக்குப் பிடித்த) சிறுகதைகளை என் இளம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

” அணி “

ஒரு காலம் முற்போக்கு எழுத்தாளராக இருந்து பின்னர் எதிரணிக்கு தாவி நற்போக்கு எழுத்தாளராக மாறிய  எஸ்.பொ. வின் கதை இது. அவரது ‘வீ ‘ தொகுப்பில் இக்கதை அடங்கியுள்ளது.  ‘இரத்தம் சிவப்புத்தான் ‘ என்பது போன்ற ஒரு தலைப்பில் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை மலரில் ‘ இக்கதையை முன்புவாசித்திருந்தேன். புதியதொரு கதை சொல்லும் முறையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சலூன் தொழிலாளியின் வாய் மொழியாக எழுதப்பட்ட இக்கதை இறுதி முத்தாய்ப்பை தவிர்த்து வாசித்தால் மிகச் சிறப்பான கதை என உறுதிப்படுத்துவேன்.!


பிடித்த சிறுகதை – 02

மாகாணசபை வடக்குக் கிழக்கென பிரிபடாத கடைசி வருடம். தமிழ்த் தினவிழா எழுத்தாக்கப் போட்டி நடுவர்களில் நானும் ஒருவன்.  மாகாணப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. கோட்ட மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவையே மாகாண மட்டப்போட்டிக்கு தேர்வுக்காக வரும். இதில் வெற்றிபெறுவதே அகில இலங்கைப் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும். சிரேஸ்ட பிரிவுக்கானசிறுகதைப் போட்டி,.. எனது பார்வைக்கு வந்த எட்டு மாவட்ட சிறு கதைகளில் ஒன்று இப்படி ஆரம்பித்தது.

Continue Reading →