தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்

தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்தமிழ் மொழியில் தோன்றிய முழுமுதற் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இதில் உயிரினங்களின் குணங்கள் பற்றி குறிப்பிடுவதோடு தொன்றுத்தொட்டு காலம் காலமாக வழங்கி வரும் இம்மரபானது தமிழ் மொழியிலும் சொற்பொருள் நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் பல உயரினங்களுக்கு சில அடிப்படைக் குணங்கள் காணப்படுகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உயிரினங்களின் தோற்றம் அதன் இயல்பு, செயல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மரபியல் கோட்பாடு என்பது உயிரினங்களின் மரபுப்பெயர்களான இளமைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள் என இவற்றை வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை இக்கட்டுரையின் வழி விளக்குவதே நோக்கமாக அமைகிறது.

மரபியல்
“சான்றோர்களும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபாகும். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஒன்றிற்கு சொற்பொருள் உணர்த்தியதால் மரபியல் என்னும் பெயர் பெற்றது. ஒரு மரத்தின் வித்து கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மரமாகி தன்னுடைய சந்ததியை வளர்ப்பது போல என்றும் மாறாமல் இருப்பது மரபு” என்று தமிழண்ணல் மரபியலுக்கு விளக்கம் தருகிறார்.

“மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் செய்யுளின் கண் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனுமின்றி இருதிணை பொருட் குணனாகிய இளமையும், ஆண்மையும், பெண்மையும் பற்றிய வரலாற்று முறையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவை மரபெனப்படுமென்பது” என்று பேராசிரியர் மரபியலுக்குத் தரும் விளக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

இதேபோல் மரபியலுக்கு இளம்பூரணர் உரை வகுக்கையில் “இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட பொருட்டு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து” என்று எடுத்துரைக்கின்றார். ஒரு பொருளுக்கு மரபாவது எதுவெனில் அப்பொருளின் குணமாகிய இளமை, ஆண்மை, பெண்மை ஆகிய பொருள் பெற்று மரபுக் குறித்துத் தொன்றுத்தொட்டு வழங்கிவருவது மரபுப்பெயர்கள் ஆகும்.

Continue Reading →

“கி.ரா. சிறுகதைகள் காட்டும் கரிசல் மக்களின் வாழ்வியல்”

கி.ரா.கி.ரா எனும் இரண்டெழுத்து மந்திரம் :
கி.ரா. ஒரு எளிமையான கதைச்சொல்லி. இவருடைய எழுத்துகளில்,வருணணைகளில் மாடமாளிகைகள் இருக்காது. இளவரசிகளின் பாதாதி கேச வருணணைகள் இருக்காது.ஏழை எளிய மக்களின், நடுத்தர வர்கத்தினரின் உழைப்பும், குடிசைகளின் வாழ்வும், கூழ்குடித்து ஏர்பூட்டி உழும் மக்களின் வாழ்வியல் எனும் நிழல் ஓவியங்கள் நம் மனக்கண்ணில் படரவிடுவதில் அசாத்திய திறமைமிக்க எழுத்தாளர். பல்கலைக்கழகத்தில் படிக்காவிடினும், புதுவை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியவர். எதார்த்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் பால்ய காலம் முதலான நண்பர்.கரிசல் கதைகளின் தந்தையான கி.ரா. நாட்டுப்புறவியலில் சிறந்து விளங்குபவர்.கம்யூனிஸ சிந்தாந்தி. இரு முறை போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைச் சென்றவர். இவரது ‘கிடை’ குறுநாவல் ‘ஒருத்தி’ எனும் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நாட்டுபுறக் கதைக் களஞ்சியம் உருவாக்கியவர். சிறுகதை, நாவல், நாட்டுபுறவியல் என தமிழின் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தவர். தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, சிறந்த எழுத்தாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகாதெமி விருதுப்பெற்றவர்.அவரது கதைகளில் மிளிரும் கரிசல் மக்களின் வாழ்வியலை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

கதவு காட்டும் ஏழ்மை:
‘வித்தக கலைஞன் தொட்டுவிட்டால் விறகு கட்டைக்கூட வீணையாகலாம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப கதவு எனும் ஜடப்பொருள் இக்கதையில் கி.ராவின் படைப்பாளுமையால் புராதனச் சின்னமாகிறது.கதை முழுவதும் லட்சுமி, சீனிவாசன் எனும் இருசிறுவர்களின் வழி ஏழ்மை வாழ்வு சித்திரிக்கப்படுகிறது. கதவு அவர்கள் பயணம் செய்யும் பேருந்தாகிறது. அதன் சுழற்சி சுற்றளவில் திருநெல்வேலியும் சுற்று வட்டாரங்களின் தூரங்களும் அடங்கி விடுகின்றன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பணக்கார பழமையை விடாது காத்துக் கொண்டிருப்பது அது ஒன்றுதான். அதன் மீது சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள், அதை தன் தோழனாக பாவிக்கிறார்கள். அவர்களுடைய அப்பா மணிமுத்தாறில் கூலிவேலை செய்கிறாh.; அம்மா காட்டு வேலைக்கு சென்று விடுகிறாள்.

ஒரு தீப்பெட்டியில் இருந்த நாய் படத்தைக் கம்மஞ்சோறு கொண்டு ஒட்டுகிறாள்.அதைப் பார்த்து கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். ஊர் தலையாரி வருகிறார். உங்க ஐயா எங்கே? என கேட்கிறான். குழந்தைகள் ஊருக்குப் போய் இருப்பதை கூற, வந்தா தீர்வை (வரி) கட்டச் சொல்லிவிட்டு போகிறார். மறுநாளும் வந்து கேட்கும் போது அம்மா ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே நாங்க என்னாத்தை வச்சி உங்களுக்கு தீர்வை பாக்கியை கொடுப்பொம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்த கொளந்தைகளைப் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா? என்றாள். (ப.3 கி.ராஜநாராயணன் கதைகள்)

Continue Reading →

க. இரமணிதரனின் ‘மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில!

இரபீந்திரநாத் தாகூர்க.இரமணிதரன்– புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ‘ சித்தார்த்த சேகுவேரா’, ‘பெயரிலி’, ‘திண்ணைதூங்கி’யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது ‘அலைஞனின் அலைகள்: கூழ்’ என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. – பதிவுகள் –



Monday, April 11, 2005

தன்கா – I
தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை,
25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11

*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).

ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை – கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)

1.
the cold walk,
silence
between us
the creek running
under ice

கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்

2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor

புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்

Continue Reading →

ஆண்டுவட்டத்தைக் கடந்ததொரு இலக்கியப் பயணி: அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணம் பற்றியதொரு பதிவு

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்தமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.

தற்போது புகலிடத்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் எனது அயல் கிராமத்தவர். நான் ஆனைக்கோட்டையில் வாழ்ந்த எழுபதுகளில்; அவர் எழுத்துத் துறையில் அனைவரையும் பிரமிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதைத்தொகுதி ‘அக்கா” வெளிவந்த 1964இல் எனக்கு 10 வயது. நான் தென்னிலங்கையில் பிறந்து நீர்கொழும்பில் இளம்பிராயத்தைக் கடந்தவன். அங்கும் ஒரு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுத்தாளராக இருந்தார். நான் நூலியல்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிராத அக்காலத்தில் சில சமயங்களில் அறியாமையால் இருவரையும் பெயர் மாற்றிக் குழப்பிக்கொண்டதுண்டு.

நான் புலம்பெயர்ந்தபின்னர் ‘நூல்தேட்டம்” ஆவணத்தொகுப்பின் வேலைத்திட்டத்தில் ஓய்வுவேளைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் தொடர்பினை வலிந்து தேடிக்கொண்டேன். அப்பொழுது அவர் கனடாவில் இருந்தார். சிரமம் பாராது தனது நூல்களை எனக்கு தபால் பொதிகளில் அவ்வப்போது அனுப்பியும் வைத்திருந்தார். அவரால் அனுப்பப்படும் நூல்களை அவ்வப்போது நான் ஐ.பீ.சீ. வானொலியின் காலைக்கலசம் இலக்கியத் தகவல் திரட்டு  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வந்துள்ளேன்.

2004இல் ஒருதடவை இலங்கை சென்றவேளையில் அமரர் பூபாலசிங்கம் அவர்களின் மகன் ராஜனை 14 ஆண்டுகளின் பின்னர் அவரது வெள்ளவத்தை புத்தகக் கடையில் சந்திக்கநேர்ந்தது. அவ்வேளையில் ராஜன் எனக்குத் தந்த நினைவுப்பரிசு ‘அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெருந்தொகுப்பாகும். அந்நாட்களில் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பெருந்தொகுப்புகள் பரவலாக வெளிவந்திருக்கவில்லை. அதனால் 2003 டிசம்பரில் தமிழினி வெளியிட்டிருந்த அப்பெருந்தொகுப்பு என்னைத் திகைக்க வைத்திருந்தது. எழுத்தாளர் அ.மு.வின் 2003 வரை வெளியான தேர்ந்த 75 சிறுகதைகளை 774 பக்கங்களில் உள்ளடக்கியதாக அந்நூல் இருந்தது.

பத்தாண்டுகளின் பின்னர் 2014இல் நூல் தேடலுக்காகத் தமிழகம் சென்றிருந்த வேளையில் ஈழநாடு பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவாவின் அழைப்பையேற்று திருச்சிக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் அன்று திருச்சிராப்பள்ளி ஆண்டவர் அறிவியல் கல்லூரியில், ஈழத்து இலக்கியத்தை தமது பட்டப்படிப்பிற்காகப் பயிலும் மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். ‘புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு” என்ற பொருள்பற்றிப் பேசுமாறு என்னை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது அறிமுக உரையை நிகழ்த்தினேன்.

Continue Reading →

வெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல்

- முனைவர் பா.சத்யாதேவி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை. -உலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலக மொழிகளில் தனிச் சிறப்பினைப்பெற்ற தமிழ் மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் காரணமாகின்றன. இச்சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டே பாடல்கள் அமைத்து பாடப்பட்டுள்ளன. இயற்கையைப் போற்றிப் பேணிப்பாதுகாத்ததோடு நில்லாமல் அதனுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தச் சங்க கால மக்களின் வாழ்வுச் சூழல் ஆராயப்பட வேண்டியதாகும். ஆய்வின் சுருக்கம் கருதி வெள்ளிவீதியாரின் பாடல்கள் மட்டும் ஆய்வு களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் பல பெண் கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் எனினும் வெள்ளிவிதியாரின் குரல் அழுத்தமான தெளிவான ஒரு பெண்ணின் குரலாகப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. பெண்ணின் உணர்வு நிலையை வெளிப்படுத்த எண்ணிய வெள்ளவீதி அதற்கு ஏற்றச்சூழலாக அல்லது பின்புலமாகத் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வுச்சூழலையும் இயற்கைச் சூழலையும் தக்கத்துணையாக எடுத்தாண்டுள்ளார்.

சான்றாக நற்றிணையில் (70) இடம்பெறும் சிறுவெள்ளாங்குருகே! பாடலை குறிப்பிடலாம். தலைவனைப் பிரிந்த தலைவி நாரையைத் தூது அனுப்புவதாகப் பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘சிறு வெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறைபோகு அறுவைத் தும்பி அன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

—————————————

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?’’ (நற். : 70)

என்பதில் சிறிய வெளிய நாரையே! நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா? அல்லது மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை எனத் தலைவி கூறுகிறாள்.

Continue Reading →

ஒப்பீட்டு நோக்கில் கடைநிலைத்துறை (தொல்காப்பியம், புறநானூறு)

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இலக்கியங்களைப் பொதுவாக அகம், புறம் என்று பிரிப்பர். குடும்பம்; சார்ந்தவை அகம் என்றும் சமூகம் சார்ந்தவை புறம் என்றும் கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணையியலும் சங்க இலக்கியத்தின் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறம் சார்ந்தவை. அத்தகைய இலக்கிய இலக்கணங்களுள் தொல்காப்பியத்தின் பாடாண் திணை சார்ந்த கடைநிலைத் துறையை புறநானூற்று கடைநிலைத் துறைப் பாடல்களோடு பொருத்தி  ஆய்வதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு அமைகின்றது.

தொல்காப்பிய கடைநிலைத்துறை
உள்ளத்துணர்வால் உணரும் இன்பம் தவிர்ந்த அனைத்து உலக வாழ்வும் புற வாழ்வாகும். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணையியல் மட்டுமே புறம் சார்ந்தது. புறத்திணையியலில் தொல்காப்பியர் ஏழு திணைகள் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார்.  அவ்வெழுவகைத் திணைகளுள் ஒன்று பாடாண் திணை. பாடாண் திணை இருபது துறைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் கடைநிலைத் துறையும் ஒன்று.  இதனை

“கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும்
……   ……  …….   ……..  ……..
வழிநடை வருத்தம் வீட வாயில்
காவலர்க்குரைத்த கடைநிலையானும்
…….        …….       ……. “        (தொல்-1036)

என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். கடைநிலைத் துறை குறித்து தமிழண்ணல் அவர்கள்

“மிக நீண்ட தூரத்திலிருந்து வந்த வருத்தம் தீருமாறு வாயில் காவலரிடம் தன் வருகையை அரசனிம் கூறுமாறு சொல்லும் கடைநிலை”
என்று விளக்கம் அளித்துள்ளார்.

புறநானூற்றில் கடைநிலைத் துறை
புறநானூற்றில் பதினொரு பாடல்கள் கடைநிலைத் துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. இவை மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறும் நோக்கத்துடனும் பரிசில் அளித்தமைக்காக வாழ்த்தும் நோக்கத்துடனும் பாடப்பட்டவையாக அமைந்துள்ளன. மன்னனது கொடைச் சிறப்பைப் பாடும் பாடல்களில் புலவர்கள் வற்கடம் நேர்ந்த காலத்தில் கூட புரப்போரின் வள்ளண்மையால் தான் பாதுகாக்கப்படும் உறுதியுடன்  பாடியுள்ளனர். மேலும் தனது உள்ளக் கிடக்கையினை நன்றி உணர்வினை கிணைப் பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனர்.

Continue Reading →

ஆற்றுப்படை நூல்கள் காட்டும் அல்திணை உயிர்கள்!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியம் இயற்கையின் உயிர் அகவமைப்பை ஒளித்திரையெனக் காட்டும் தொகை இலக்கியம். சங்கத்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நெறியை அது தெற்றென எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் உயிர் வகைக்கோட்பாட்டைக் கூறுகையில் (தொல்.மரபு.நூற்.1526 )உயர்திணை உயிர்கள், அல்திணை உயிர்கள் என்கிறார். இவற்றுள் அல்திணை உயிர்கள் பற்றிய (விலங்குகள் மட்டும்) பதிவினை ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்றிருப்பனவற்றைக் குறித்து இக்கட்டுரை இயங்குகிறது. கீழ்க்காணுமாற்று விலங்குகள் ஆற்றுப்படை நூல்களுள் பதிவு செய்யப்பெற்றிருப்பனவாகக் காணப்படுகின்றன.

01.ஆடு , 02.ஆமான், 03.ஆளி, 04.எருது, 05.ஒட்டகம், 06.கரடி, 07.குரங்கு, 08.சிங்கம், 09.நாய், 10.பன்றி, 12.புரவி, 13.புலி, 14.மரையான், 15.மான், 16.முயல் என்னும் விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அவைகளை குறித்து விளக்கமாகக் காணலாம்.

01.ஆடு:
சங்க இலக்கியத்தில் ஆட்டை வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறது. முருகன் மயிலையும் குற்றமில்லாத கோழிக்கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,

“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்”        திருமுருகு.210

என்கிறார் நக்கீரர். பெரிய காலை உடையதாகவும் மிக்க வலிமை உடையதும் உள்ள ஆட்டுக்கிடாயினது உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறு பலியாக முருகப்பெருமானுக்கு இட்டு வழிப்பட்ட செய்தியை,

“மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை
குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி”        திருமுருகு.232-233

என்கிறது சங்க இலக்கியம். சிறிய திணை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்தும் மறியை அறுத்தும் அவ்விடத்தில் இறைப்பொருள் நிலைத்து நிற்க வேடர்கள் விழா செய்தனர் என்பதனை,

“சிறுதிணை மலரொடு மறியறுத்து”        திருமுருகு.218

என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அருகம்புல்லின் பழுதையை தின்று நன்றாகக்கொழுத்த செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடையின் பதமான இறைச்சியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுடப்பட்டதைக் கரிகால் வளவன் பொருநனுக்கு அளித்த நிகழ்வை,

Continue Reading →

சவ்வாது மலை மலையாளிப் பழங்குடியினர் பற்றிய வரலாறு

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.

ஆய்வு பொருள்
திருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.

ஆய்வு நோக்கம்
திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது. சந்தனம், சவ்வாது போன்ற வாசனை பொருட்கள் அங்கு விளைந்த காரணத்தால் சவ்வாது மலை என்று பெயர் பெற்றது. இந்த சவ்வாது மலையில் மலையாளி எனும் சமூகத்தினர் தங்களது வாழ்வியல் சடங்கு முறைகளை மரபு வழுவாமல் தங்கள் முன்னோர்களின் வழியே பின்பற்றி செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித ஆய்வும் செய்யவில்லை. இவ்வாய்வே முதன் முறையாகும். அம்மக்களின் வாழ்வில் கடைபிடிக்கும் சடங்கு முறைகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிற மலைவாழ் மக்களிடமிருந்து இவ்வினத்தினர் வேறுபடும் தன்மையைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வு மூலங்கள்
இக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.

ஆய்வுகளம்
தென் தமிழகத்தில் பரவலாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மையமாகக் கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள இந்து மலையாளி, மலையாளி இன மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சேகரிக்க இக்களஆய்வு துணைபுரிந்தன.

ஆய்வு எல்லை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.

Continue Reading →

நிழல் முற்றம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியல்

 நா.கிருஷ்ணராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் – 641 048  -முன்னுரை
சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவன நவீன இலக்கியங்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப, இலக்கண வரைமுறைகளைக் கட்டுடைத்துப் படைக்கப்பட்டவையே நவீன இலக்கியங்கள். சமூகத்தின் மூலை முடக்குகளில் காணலாகின்ற வாழ்வியல் சிக்கல்களை அடையாளப்படுத்துவதில் புனைகதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறுகதை, புதினம் எனும் பிரிவுகளைக் கொண்ட புனைகதைகளுள், சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உள்ளவறே எடுத்தியம்புவன புதினங்கள். வாழ்வியல் என்று பொதுமையோடு நோக்கும் படைப்புகள் எண்ணில. எதிர் காலத் தலைமுறைகள் என்றும் நாளைய சமூகமென்றும் கருதப்படுபவர்கள் சிறுவர்கள். அத்தகைய சிறுவர்களின் இளம் வயதுக் காலம் செம்மையாக அமைந்தால்தான், முழுமையான வாழ்க்கையினை அடைவார்கள். சிறுவர்களின் வாழ்க்கையினைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ புதினம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியலைப் பற்றி இக்கட்டுரை வழி அறிவோம்.

கதைக்களமும் கருவும் :
“வட்டார இலக்கியமானது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறைகளோடும் அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் எதார்த்தமாக வெளிப்படுவது”(தமிழில் வட்டார நாவல்கள், ப.2.) என்ற கூற்றுக் கேற்ப நிழல் முற்றம் புதினத்தின் கதைக்களமாக கொங்கு வட்டாரத்திற்குட்பட்ட திருச்செங்கோடு பகுதி இடம் பெற்றுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பகுதியில் உள்ள விஜயா திரையரங்கத்தில்தான் கதை நிகழ்கிறது. நவீன இலக்கியங்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைந்த இலக்கியங்களே,சிறுவர்களின் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையன்று. ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கேற்ப, இளம் வயதில் வாழ்வில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளும் அமையக்கூடிய வாழ்வியல் சூழல்களும்தான், ஒரு மனிதனின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும். வாழ்வின் முற்பகுதியான இளம்வயது வாழ்க்கைதான் ஒருவரது ஆயுள் முழுமைக்குமான வாழ்கையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கும். சிறுவர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நிழல் முற்றம் புதினத்தில், இம்மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார் பெருமாள் முருகன். கணேசன், சக்திவேலு, மணி,பூதன் போன்ற சிறுவர்கள் திரையரங்கிலுள்ள சோடாக் கடைகளில் பணிபுரிகின்றனர். இம்மந்தார்களையும் இத்திரையரங்கையும் மையமாகக் கொண்டே கதை சித்தரிக்கபட்டுள்ளது.

சிறுவர்களின் வாழ்வியல்
‘திரையரங்கே உலகம்; தங்கள் முதலாளியும் உடன் பணி புரியும் சிறுவர்களுமே உறவுகள்’ என்று வாழ்ந்து வருபவர்கள்தான் இச்சிறுவர்கள். இக்குழந்தைத் தொழிலாளர்களின் பணி வரையறுக்கப் பட்டதன்று. பெரியவர்களாக இருந்தால் பணிப்பளு என்பது வரையறுக்கப்பட்டிருக்கும். ஊதியமும் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆனால் சிறுவர்களுக்கு இது முற்றிலும் முரணானது. அதுவும், கேட்பதற்கு யாருமில்லையென்றால், அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கும். திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் திரையரங்கில் சோடா விற்பதுதான் சிறுவர்களின் வேலை. சோடா விற்பதில் இவர்களுக்குள் போட்டியும் ஏற்படும். வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பது இயல்பே. இச்சிறுவர்களுக்கு வாழ்க்கையே சிக்கலாக இருப்பதை ஆசிரியர் புதினத்தில் சித்திரித்துள்ளார். ஒரு வேலை முடியும் முன்பே, இன்னொரு வேலை தயாராக இருக்கும் இந்தக் குழந்தைத் தொழிலார்களுக்கு. அது மட்டுமன்று. கடைப் பணிகள் முடிந்தால், முதலாளியின் வீட்டுப் பணிகளியும் செய்ய வேண்டும். “ஒரு வேலையுங் கெடையதுடா, சும்மா ராஜாவாட்டம் சுத்திக்கிட்டு இருக்கற வேலதான். நாலு ஆடு இருக்குது. வெளியுட்டா அதும்பாட்டுக்கு மேயும். நெவுலுக் கண்ட எடத்துல உக்கோந்து பாத்துக்கிட்டாப் போதும் என்னோ” (நிழல் முற்றம்,ப.33) என்பது, சோடக்கடையில் வேலை செய்யும் சிறுவனை வற்புறுத்தி, ஆடு மேய்க்கத்தான் ஊருக்கு அழைத்துச் செல்வதைப் புலப்படுத்துகிறது.

Continue Reading →

எழுத்தாளர் ‘கவிஞர் செழியன்’ அவர்களின் சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும்!

கவிஞர் செழியன் ஆஸ்பத்திரியில் அனுமதி!– அண்மையில் மறைந்த எழுத்தாளர் ‘கவிஞர் செழியன்’ அவர்களின் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும் அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள் –


பதிவுகள்.காம், ஜூலை 2005 இதழ் 67!
சிறுகதை: ஒரு சாண் மனிதன்!    – செழியன் –

சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.

கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த  சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.

புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச்  செல்லவேண்டும். மிகுதி பாதிப்பேரும்  பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.

இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக்  கொண்டிருப்பார்கள்.

இதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தது. இது ஒன்றும் பெளதீக விதிகளைப் போல குழப்பமான, விளங்க முடியாத விடயம் ஒன்றும் கிடையாது. இந்தப் பாடநேரத்தின் போது மட்டும் தான்  இருபது அழகான மாணவிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து வந்தது. இத்தனைக்கும் இரு பாலாரும் சேர்ந்து படிக்கின்ற இந்துக் கல்லூரியாம் என்று இந்தக் கல்லூரிக்கு ஒரு மட்டமான பெயர்.

கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் இருக்கின்ற குறுகலான ஒரு சந்து போல இரண்டு அடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளத்துடன் இந்தக் கல்லூரியிலும் ஒரு சந்து இருக்கின்றது. புதன் கிழமைகளில் இதைக் கடந்துதான் நாம் செல்லவேண்டும்.

Continue Reading →