மாமுனிவன் அகத்தியனின் மகிமையாலே
மரமாக முழைக்கவென வந்த வித்தே..!
தேமதுர ஓசையில்நீ செழிக்க வேண்டித்
தென்மதுரை மண்ணிலுன்னை முளைவைத்தோமே..!
பாமணமாய் பக்குவமாய் பாற்கடலமுதாய்,
பட்டொளியை வீசியெங்கும் பறக்கும் கொடியாய்,
பூமணத்தைத் தந்துவக்கும் தமிழே நித்தம்,
புன்னகைத்தே என்னமுதே தருவாய் முத்தம்…!
மண்டலங்கள் போற்றுகின்ற எழிலைச் சிந்தா
மணியாள்மே கலையாளுன் இடையாள் நீந்த,
குண்டலங்கள் காதில்வளை யாபதி கரத்தில்,
குறுநடைக்கு மொலியிலலங் காரஞ் செய்யும்
கண்டவர்கள் நெஞ்சையள்ளுங் காலின் சிலம்பும்,
காட்டிவருங் கன்னியுனைக் கட்டி முகர்ந்து,
உண்டிடவோ உறிஞ்சிடவோ உன்னிதழ் தேனே…!
உறவிடவா என் தமிழே உன்பெய ரமுதே…!
Continue Reading →