– பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் இக்கவிதை அவருக்குச் சமர்ப்பணம் –
வறுமையிலே உழன்றாலும்
பெறுமதியாய் கவிபடைத்தாய்
அறிவுறுத்தும் ஆவேசம்
அதுவேயுன் கவியாச்சே
துணிவுடனே கருத்துரைத்தாய்
துவிண்டுவிடா உளங்கொண்டாய்
புவிமீது வந்ததனால்
பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !
பலமொழிகள் நீகற்றாய்
பற்றுதலோ தமிழின்பால்
தேமதுரத் தமிழென்று
தீர்க்கமாய் நீமொழிந்தாய்
காதலுடன் தமிழணைத்தாய்
கற்கண்டாய் கவிதைதந்தாய்
ஆதலால் பாரதியே
அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் !