விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !
தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !
பொட்டுவைத்த என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன் தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !
நானுண்ட மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !