சிறுகதை ; கடல் யோசித்தது

--  செ.டானியல் ஜீவா -“எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கேன வாழாத் தலைவன்!” என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம்  அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான்.

குமாருக்கு  நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்துவிட்டபடியே எப்போதும் வலம் வருவான். எதிரில் வரும்  பெண்களெல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. நினைப்பதோடு நின்று விடமால்  நண்பர்களுக்கெல்லாம் அதையே சொல்லித் திரிவான். சிலவேளைகளில் நெஞ்சை நிமித்தியபடி எவருக்கும் அஞ்சாதவன்போல் மிதப்போடு அலைவான். ஆனால் எதுவுமே உருப்படியாக அவன் செய்ததே இல்லை.

Continue Reading →

சிறுகதை: அரச மரம்

- கனகலதா (சிங்கப்பூர்) -அண்மையில் நீர்கொழும்பில் வெளியிடப்பட்ட நெய்தல் இலக்கியத்தொகுப்பில் வெளியான சிறுகதை அரசமரம். இதனை எழுதிய செல்வி கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவி. தற்பொழுது சிங்கப்பூரில் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றார். இவரது கவிதை, சிறுகதைத்தொகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – முருகபூபதி –.. ]

முதலில்   சில  கணங்கள்  என்ன  பேசுவது  என்று  மலருக்குத் தெரியவில்லை.    முதல்நாள்  பேராசிரியரின்  உரையைக் கேட்டதிலிருந்து   அவர் மீது  மலருக்கு  அளவுகடந்த  மரியாதை உண்டாகி இருந்தது.   அவரிடம்  மேலும்  பேசும்  ஆர்வத்தில்  அவரது பரபரப்பான   அட்டவணையில்    எங்களுக்குச்  சிறிது  நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம்.     காலையில்  என்ன    சாப்பிட்டீர்கள்…? இன்றைய  உங்களது  திட்டம்  என்ன…? அண்மையில்   என்ன வாசித்தீர்கள் …? என்று   மெல்ல  உரையாடலைத்  தொடங்கி இயல்பான   நிலையில்   பல  விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர்  திடீரென்று   கேட்டார்

 “இந்த  அரச  மரம்  உங்களைச் சங்கடப்படுத்தவில்லையா…?”

ஒரு  கட்டில் –  அதைச் சுற்றி  மூன்றடி  இடைவெளி நாற்காலியுடன் கூடிய   குட்டி  மேசை  மிகச்  சிறிய  குளியல் -கழிவறை –  பொருட்கள்   வைக்க  ஒரு  சிறு  அலுமாரியுடன்  இருந்த  அந்த அறையை   மூன்று  ஸ்டார்  ஹோட்டல் தகுதியுடையதாக்கிக்கொண்டிருந்தது    வாசலைப் பார்த்திருந்த  சற்றுப் பெரிய    ஒற்றைச் சன்னல்.

சன்னலை  முழுவதுமாக  ஆக்கிரமித்திருந்தது  அரச மரம்.   அறைக்குள்   நுழைபவர்  பார்வை   நேர்  கோட்டில்  சென்றால்    அந்த மரத்தில்தான்  நிலைகுத்தும்.

Continue Reading →

சிறுகதை: மேலதிகாரி – ஒரு கணித விற்பன்னர்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்அமலனை மேலும் கீழும் பார்த்த மனேஜர், அவன் அந்த வேலைக்குப் பொருத்தமற்றவன் என்பதை உறுதி செய்துகொண்டார். நேர்முகப் பரீட்சைக்காக அந்தத் தொழிற்சாலைக்குப் புறப்படும்போதே அமலனுக்கும் அது தெரிந்திருந்தது. அமலன் ஒரு கணித விரிவுரையாளன். இலங்கையில் இருக்கும்போது பாடவிதானக்குழுவிலும் அங்கம் வகித்திருந்தான்.

பூர்வாங்க உரையாடல்கள் முடிவடைந்ததும் மனேஜர் அமலனை ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். அந்த அறைக்குள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒரு இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக இரண்டு முதியவர்கள் நின்றிருந்தார்கள். அங்கு நுழையும்போதே அமலனின் கண்கள் அடுத்த அறையில் உள்ளவர்களைத்தான் நோட்டமிட்டன. அந்த அறைக்குள் இளம்பெண்கள் நிறைந்திருந்தார்கள். ‘கொன்வேயர்’ ஒன்றில் வரிசையாக போத்தல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அவை மந்திரத்தால் கண்டுண்டவை போல நின்றன. அந்தப் போத்தல்களுக்குள் இரசாயனக்கலவை நிரம்பின. நிரம்பியவுடன் அந்தப்பெண்கள், அந்தப் போத்தல்களை எடுத்து பெட்டியொன்றில் அடிக்கி வைத்தார்கள். அவனது கண்கள் அங்கே சென்றதை மனேஜர் கண்டுகொண்டார். உடனே அவன் தன் கவனமெல்லாவற்றையும் அவர்மீது திருப்பினான்.

Continue Reading →

தென்னாபிரிக்கச் சிறுகதை: போய்-போய் எனப்படுபவன்

எழுத்தாளர் காஸே மொட்ஸிசி:
எழுத்தாளர் காஸே மொட்ஸிசி:கரோபோ மோசெஸ் மொட்ஸிசி (Karobo Moses Motsisi ) என்ற இயற்பெயரைக் கொண்ட காஸே மொட்ஸிசி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். 1932 ஆம் ஆண்டு, ஜோஹன்னர்ஸ்பர்கில் பிறந்த இவர், அங்கேயே கல்வி கற்று பின்னர் சிறிது காலம் தென்னாபிரிக்காவின் கௌதெங்க் மாகாணத்திலுள்ள ப்ரிடோரியா எனும் நகரத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு ‘ட்ரம் (Drum) இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றியதோடு ட்ரம் (Drum), த கிளாசிக் (The Classic), த வேர்ல்ட் (The World) ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.  1977 ஆம் ஆண்டு, தனது 45 ஆவது வயதில் காலமான இவரது படைப்புக்களையெல்லாம்  ஒன்று சேர்த்து ‘ராவன்’ பதிப்பகமானது, 1978 ஆம் ஆண்டு ‘காஸே & கோ (Casey & Co)’ எனும் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு குறையுடனே பிறந்திருந்தான். ஆயினும் கூட, பத்து வயதாகும்போதே தனது வாழ்க்கையைக் கொண்டு செல்ல போய்-போய் பணம் உழைக்க ஆரம்பித்திருந்தான். அவன், நகரத்தில் பத்திரிகை விற்பதில் ஈடுபட்டிருந்தான். தேனீயைப் போல பணத்தை சேமித்து ஒளித்து வைத்திருந்த அவனுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு நீளக் காற்சட்டையும், காற்றுப் புகாத பல வர்ண ஆடைகளையும் வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட காற்சட்டையும், பல வர்ணங்களிலான மேற்சட்டையும் உடுத்து, ஊன்றுகோலின் துணையுடன் நடமாடும் அவனுக்கு, தான் ஒரு வளர்ந்த மனிதனாகியிருப்பது போன்ற உணர்வு தோன்றியது.

Continue Reading →

சிறுகதை: முயல்குட்டி

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -காலையில் வழக்கம்போலக் கத்திரிச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சத் தொடங்கினேன். பாம்பு தலையை அசைத்தசைத்து வருவதுபோல தண்ணீர் வாய்க்காலில் வந்துகொண்டிருந்தது. கால்களை எடுத்து வைக்கும்பொழுது  “க்ளக்“ எனக் கவ்விப் பிடித்தது. தண்ணீரை இன்னொரு பாத்திக்கு மாற்றியதும் ஏதோ ஓடியது போன்ற அரவம் கேட்டது. சற்று விலகிக் குனிந்து கண்களைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு அடிமரத்துடன் பதுங்கிக் கொண்டு… முயல்குட்டி!

இவ்வளவு சிறிய குட்டியாக நான் இதற்கு முன் முயலைக் கண்டதில்லை. நண்பன் தில்லையின் வீட்டில் முயல் வளர்க்கிறார்கள். கொழு கொழு எனத் திரட்சியாகப் பெருத்து வளர்ந்த  முயல்கள் கம்பிவலையால் அடைக்கப்பட்ட கூட்டுக்குள் விடப்பட்டிருக்கும். கட்டித் தொங்கவிடப்பட்ட இலை குழைகளை எவ்வித லயிப்பும் இல்லாமல் அவை கடிக்கும். அண்மையிற்  போய் வலையினூடகப் பார்த்தால்கூடச் சற்றும் வெருட்சியடையாமல் குழையை நறுக்கித் தின்றுகொண்டிருக்கும்.

அந்த முயல்களைப்போல பால் வெள்ளையாகவோ கறுப்பாகவோ இல்லாமல் இந்த குட்டி மண்நிறமும் சாம்பல் கறுப்பும் சேர்ந்த ஒரு நரைத்த நிறமாக இருந்தது. அதனாலேயே  அவற்றைவிட வடிவாகவும் இயற்கையோடு ஒன்றிப்போன மாதிரியும் இருந்தது. காய்ந்த இலைச் சருகுகளுள்ளும் மண் பொந்துகளுள்ளும் ஒளிந்து பிற மிருகங்களிடமிருந்து தப்புவதற்காக காட்டு முயல்கள் அந்நிறத்தைக் கொண்டிருக்கின்றன போலும்.

Continue Reading →

சிறுகதை: ஈழத்தில் ஒரு தாய்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -மங்காமல் ஒளிவீசும் மணிகள்போன்று
எங்கள், தொல் தமிழீழ மானிப்பாயின்
தங்கரத்தினம் என்னும் குணத்தின் குன்று
தாய்க்குலத்தார் பலர்போற்றும் தலைமைமாது
அங்காங்கு பந்துக்கள் அகதிகளாய்
அலைக்கழிந்து வாய்க்கரிசி போடுதற்கும்
பங்காகப் பாடையினைச் சுமப்பதற்கும்
பக்கத்தில் இல்லாமல் தனித்துச் சென்றாள்.

ஊரில் எவருக்குமே அவள் தங்கமாமி. எனக்கும் தான். நான் அவளின் ஒரே மகளை மணம் முடித்தேன். எப்போதும் பகிடியுடன் சிரித்த முகம்.  ஒரு மாதிரியான வஞ்சகமில்லாத கேலிச்சிரிப்பு என்றும் சொல்லலாம். தங்கமும் குடும்பத்தில், நான்கு சகோதரர்களுடன் ஒரே மகள். அவருக்கும், என்னுடைய மனையாளுடன் நான்கு ஆண்பிள்ளைகள்.

மானிப்பாயில் மரியாதையாக வாழ்ந்துவந்த குடும்பம். மாமிக்கு, எட்டு வாரங்களின் முன் பிறந்த குழந்தையிலிருந்து எண்பது தொண்ணூறு வயதினர் வரையில் எல்லோரும் நண்பர்களே. இப்படியான ஒரு ஆத்மா, குடும்பத்தினர் ஒருவருமே கிட்டடியில் இல்லாமல், அநாதை போல, நோயினில் நினைவின்றிப் பிரிந்துசென்றது. ஏன்?  எப்படி?  வாழ்வெல்லாம் எல்லோரிடமும் அந்த அசாதாரணத் தாயார் நல்லெண்ணமும் நற்பெயரும் தேடியது இதற்காகத்தானா?

Continue Reading →

காதலர் தினச்சிறுகதை: காதல் ரேகை கையில் இல்லை!

குரு அரவிந்தன் எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி வருவதும், மலர்ந்து விட்டால் தேனை அருந்தி விட்டு விலகிச் செல்வதும் தேனிக்குக் கைவந்த கலையாக இருக்கலாம்.

இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கின்றேன் ஆனால் இப்படியொரு ஈர்ப்பு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சினிமாப் படங்களில் சில நடிகைகளைப் பார்க்கும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சஞ்சலப்படுவது உண்மைதான். நிழற் காட்சிபோல மறுகணம் அது மாயமாய் மறைந்துவிடும். ஆனால் இது என்ன மாயம், இன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கனவுலகில் இருந்து நான் மீண்ட போது அவள் மறைந்து போயிருந்தாள். அவளை இன்னுமொரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனசு ஏங்கியது. இந்தக் கூட்டத்தில் அவளை எங்கே தேடுவது? தென்றலாய் வந்தவள் சட்டென்று என் மனதில் சூறாவளியை ஏன் ஏற்படுத்தினாள்? என் தவிப்பு என்னவென்று அவளுக்குப் புரியப் போவதில்லை, ஆனாலும் மனசு எதற்கோ தவித்தது.

Continue Reading →

சிறுகதை: கலைமகள் கைப் பொருளே..!

சிறுகதை: வீடுதேடல் ஆண்டு விழாக் கூட்டத்தில்,எதிர்பாராமல் அவனோடு படித்த சந்திரனை பல வருசங்களுக்குப் பிறகுச் சந்தித்தான். மனம் உவகை கொள்கிறது.”எப்படியப்பா இருக்கிறாய்?”இந்த இடைவெளியில், இலக்கியவாதியாய் மாறியிருக்கிறான்.பத்திரிகைகளில் அவன் கட்டுரைகளை …வாசிக்கிறவன் தான்.வானொலிகளில் கூட சில்லையூர் செல்வராசன் போன்ற குரலுடன் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறான். கோபாலுடைய அம்மா அவனுடைய ரசிகை.இதைப் போல குலத்திட அம்மாவும் தன்னுடைய ‘ரசிகை”என்று சொன்னதாகச் சொன்னான். ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு பாலம் கட்டப்படுறதில் ஒரு பெருமிதம் தெரிந்தது. புலம்பெயர் நாடுகளில் எல்லாரையும் எல்லாரும் சந்தித்துக் கொண்டா… இருக்கிறார்கள். அதற்கும் என்று ஒரு நேரம் வர வேண்டியிருக்கிறது.

“உனக்குத் தெரியுமா?எங்கட வகுப்புத் தோழர்கள்  …வருசா வருசம் ஒரு நாள் சந்திக்கிறவர்கள்.இந்த முறை குணா தீடீரென கார்ட்டடாக் வந்து செத்துப் போனதால் தள்ளி வைத்திருக்கிறார்கள் “என்றான். ‘

Continue Reading →

சிறுகதை: பாம்பு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு. இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள்.

‘ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!”

எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர்களுக்கு இது விளையாட்டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒரு நாள் வீதி ஓரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கிவந்தான். ‘அப்பா நல்ல வடிவான குட்டிப் பாம்பு. பார்த்தீங்களா?” என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப் பதம் பார்க்கவும் இல்லை.)

Continue Reading →

சிறுகதை: வழுக்குப்பாறை(1925)

- யாஸுனாரி காவாபாட்டா -லதா ராமகிருஷ்ணன்தன்னுடைய மனைவியோடும், குழந்தையோடும் அவன் அந்த மலை வெப்ப நீரூற்றுக்கு வந்துசேர்ந் திருந்தான். அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப்பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப்பட்டது. அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூடநம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.

ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத்தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ளரித்துண்டத்தைப் போலிருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டிருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும்போது பெண் குலத்தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்கவேண்டும் நான்).

“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்கவேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்களைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடியலுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.”

Continue Reading →