சிறுகதை: வேல்அன்பன்

சிறுகதை: வேல்அன்பன் - எஸ். கிருஸ்ணமூர்த்தி , அவுஸ்திரேலியா -விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தன. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது.  ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.

Continue Reading →

சிறுகதை: ஒரு துவக்கின் கதை

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய முறையில் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் துவக்கு வைத்திருக்கலாம். அவ்வாறு அந்த வட்டாரத்திலேயே அப்பாவிடம் மட்டும்தான் துவக்கு இருந்தது. வீட்டினுள் அவனது கைக்கு எட்டாத உயரமாக சுவரில் துவக்கு மாட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது அப்பாவுக்கு எட்டும் உயரம். அதற்காகவென்றே சுவரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பெரிய ஆணிகளில்… ஒன்றில் அதன் விசைப்பகுதியைக் கொழுவி, சற்று உயரமாக உள்ள மற்ற ஆணியில் சுடு குழாயைப் பொறுக்க வைத்துவிட்டால்.. துவக்கு எடுப்பாகத் தோற்றமளித்துக்கொண்டிருக்கும். அறையின் ஜன்னல் திறந்திருந்தால் வெளிவிறாந்தையில் நின்றே துவக்கைக் காணலாம்.

விளையாட வரும் நண்பர்களைக் கூட்டிவந்து, அவன் ஜன்னலூடாகத் துவக்கைக் காட்டுவான். வகுப்பிலுள்ள சக மாணவர்களையும் இதற்காகவென்றே விளையாட வருமாறு வீட்டுக்கு அழைத்து வருவான். அவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய… ‘அட அது உண்மைதான்!’ எனப் பார்த்திருப்பார்கள். வீட்டிலிருக்கும் துவக்கைப் பற்றி அவன் நண்பர்களிடம் பல கதைகளை  அளந்திருக்கிறான். இலக்குத் தவறாமல் சரியாகச் சுடும் லாவகம் பற்றி விளக்கமளித்திருக்கிறான். ‘இந்தப் பெரிய துவக்கை எப்படி நீ தூக்குவாய்?’ எனப் பிரமிப்புடன் அவர்கள் கேட்பார்கள். ‘அது அப்படித்தான்..!’ எனச் சமாளித்துவிடுவான். எப்படிச் சுடுவது என அப்பா தனது நண்பர்களுக்கு விளக்கும்போது கவனித்திருக்கிறான். ‘விசையைத் தட்டி வெடி தீரும்போது ஒரு எதிர்த் தாக்கம் இருக்கும். அப்போது கை தழும்பி இலக்குத் தவற வாய்ப்புண்டு. அதனால் துவக்கின் பிடிப் பகுதியை வாகாக தோள்மூட்டில் பதிய  வைத்துக் கொள்ளவேண்டும்’ என அப்பா தன் நண்பர்களுக்குக் கொடுத்த பயிற்சியை எல்லாம் அவன் தனது நண்பர்களுக்கு எடுத்துவிடுவான்.

Continue Reading →

சிறுகதை: பிராயச்சித்தம்

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். ‘அச்சு அச்சு’ எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

Continue Reading →

சிறுகதை: விளக்கின் இருள்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன.  “I buy houses, gas or no gas, call Tim.” – கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன். இந்த விஷயத்தை அப்பா ஒருமாதத்திற்கு முன்பாகவே அறிந்து கொண்டார் என்றுதான் நினைக்கின்றேன். அன்று…

Continue Reading →

அமரர் எஸ். அகஸ்தியர் நினைவுச்சிறுகதை: எவளுக்கும் தாயாக…..

அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி –  08.12.2014 – அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. – பதிவுகள்-] 

நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன.  கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி.  பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே ‘பென்சன்’ போதாது. ஆக, அவள் மாடு, ஆடு, கோழி, கன்று, காலி, சீட்டு, சித்தாயம் என்றெல்லாம் மாய்ந்தாள்.   எதுக்கும் ஈடு கொடுக்கிற வலிச்சல் தேகம்.

‘தம்பியை எப்பிடியும் நல்லாப் படிப்பிச்சு ஒரு கரை காணவேணும்’ என்ற ஆசை, நாளாக அவளை எலும்பாக்கியது. ‘எலும்புருக்கியாக்கும்’ என்று நடைமருந்து பாவிக்கிறாள். ‘உவ்வளவு கஷ்டத்துக்க பெட்டையளைப் படிப்பிக்க வேணுமேர் பொடியனைப் படிப்பிச்சு ஆளாக்கினால் அவன் உன்னையும் தங்கச்சிமாரையும் பாக்கமாட்டானோ?’ என்று அயலட்டை சிலேடையாகச் சொல்லும். அசட்டை பண்ணி விடுவாள்.

Continue Reading →

சிறுகதை: உறவுகள் தொடர்கதை

குரு அரவிந்தன் அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

அப்போதிருந்த நாட்டுச் சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. தேவையில்லாத பிரச்சனைக்குள் ஒருமுறை மாட்டித் தப்பிவந்த எனக்கு அம்மாவைத் தேடி அங்கு செல்லவே பயமாயிருந்தது. எந்தவித நல்ல தகவலும் அம்மாவைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தான் இப்போதய எனது எதிர்பார்ப்பாகவும், துடிப்பாகவும் இருந்தது. அம்மா கடைசியாகப் போட்ட கடிதத்தில் கூட தன்னைப் பற்றிச் சொல்லாமல், ‘ராசா, பிரச்சனைகளுக்குள் அகப்படாமல், கவனமாய் இருராசா’ என்று என்னைப் பற்றித்தான் விசாரித்திருந்தாள். கடந்த காலத்தை நினைத்தபோது, எதுவும் நடக்கலாம் என்ற அம்மாவின் பயம் நியாயமானதாகவே இருந்தது.

Continue Reading →

சிறுகதை: சைக்கிள்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -சாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான்! இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு, ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்லமுடியாது… நோக்கம்… ஒரு விருப்பம், அல்லது…. ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ? அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் சைக்கிள் வேண்டுகிற எண்ணம் இருந்தது. அதே எண்ணம் கை கூடாமலே இழுபட்டுக்கொண்டிருந்தாலும்… அவனும் அந்த எண்ணத்தைக் கைவிடுவதாய் இல்லை. ஏனெனில் கட்டாயமாக அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது.

அவன் வேலைக்குப் பஸ்சிலேதான் போவான். எட்டு வருடங்களுக்கு  முன்னர் ஐம்பது சதமாக இருந்த பஸ் கட்டணம் இப்பொழுது இரண்டு ரூபா நாற்பது சதமாக உயர்ந்திருக்கிறது. அப்பொழுதே மாதத்திற்கு முப்பது ரூபா பஸ் கட்டணமாக அழவேண்டியிருந்ததால்… ‘ஒரு சைக்கிள் வேண்டிவிட்டால்.. ஏழு மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு சைக்கிளிலேயே போய்விடலாம்” என நினைப்பான். இப்பொழுது கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபா பஸ்சிற்குச் செலவாகிறது. ஆறுமாத பஸ் செலவை மிச்சம் பிடித்தாலே சுமாரான ஒரு சைக்கிள் வாங்கிவிடலாம். ஆனால் அதை எப்படி மிச்சம் பிடிப்பது என்பதுதான் பிரச்சினை.

Continue Reading →

சிறுகதை: பொறி!

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம். எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற  கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை. குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் தொல்லையோ தாங்க முடிவதில்லை. குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ’ஒரு’ எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது. நேற்று நள்ளிரவு ஒரு சத்தம். மெதுவாக நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது, ஹோலிற்குள் ஒரு ‘சிப்ஸ் பைக்கற்’ நகர்ந்து கொண்டிருந்தது. ஆளரவம் கேட்டு பாய்ந்து ஓடினார் எலிப்பிள்ளையார்.

Continue Reading →

சிறுகதை: வீடு

சிறுகதை: வீடு தமிழ்க்கிராமங்களில் பொதுவாக  வாடகைவீடு  பெறுவது  சிரமான  காரியம். அருமையாகப் படித்தவர்கள்,   கொழும்புக்கு வேலை கிடைத்துப் போற போது, சிலவேளை   தம்   குடும்பத்தையும் கூட்டிச் சென்றால், அவர்கள் இருந்த வீடு காலியாகும். நடுத்தர வருவாய்யைக் கொண்டவர்கள்  அப்படியெல்லாம் செய்ய  மாட்டார்கள். பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மத்திய அரசு, இன பேதத்தை பாராட்டுற போது  எம்மவர்களிற்கு அங்கே பாதுகாப்பு இருக்கவில்லை. கலவரங்களில் ‘கரியான ..அனுபவங்கள் தானே தொடர்கதையாய் தொடர்கின்றன.  தவிர, சொந்த வீடு ,நிலம் இல்லாதவர்கள் இங்கும்  இருக்கவே  செய்கிறார்கள்.  பலர், தங்கு வேலைக்குப் போய் வருவது போலவே கொழும்புக்கும் போய் வருகிறார்கள்.

     சித்ரா ரீச்சர் வவுனியாவில்  பத்து வருசமாக ஆசிரியையாய்  குப்பை கொட்டி அலுத்து விட அவருக்கு ஒரு மாற்றம் தேவையாக இருந்தது. சொந்தப் பகுதியில் ஏதாவது கிராமத்து  பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.  இந்த கிராமத்திலே .. வேலை கிடைத்திருக்கிறது.  நகரத்தில்,. வசிக்கிற பெரியண்ணை வீட்டிலிருந்தே  போய் வந்து  கொண்டிருக்கிறார். அவருக்கு கிராமமே பரிச்சம் இல்லாதது.  வீடு’ எல்லாம் பார்க்க அந்த இந்துக்கல்லூரியில் படிப்பிக்கிற ஆசிரியர்களையே… நாடினார்.

Continue Reading →

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..’

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..'1.

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.ஒரு உஷார். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக்காணவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதனமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்கமுடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது.  தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன்.என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர்பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது.இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்தஉறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? ‘யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும்எ மக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்துதுடிக்கும். இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும்.

Continue Reading →