வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (5) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்’

வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (5) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

” என்ன தூக்கக் கலக்கமா ” என்றேன்.

” இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு” என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

“என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?” என்றேன்.

அதற்கவன் “இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்..” என்றான்.

“என்ன ஆனால்..?” என்றேன்.

“ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்” என்றான்.

“என்ன நீ கலிபோரினியாவிலிருந்தவனா?”

” ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?”

Continue Reading →

வ.ந.கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (4): மனித மூலம்

'அமெரிக்கா' தொகுப்பில் இச்சிறுகதைக்காக வரையப்பட்டிருக்கும் ஓவியம்.– தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. –


கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா?  வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். ‘நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, ‘நான் கடந்து வந்த பாதை’ என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (3) : சுண்டெலிகள்!

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (11) : சுண்டெலிகள்!– முதலில் தாயகம் சஞ்சிகையில் (கனடா) வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. தமிழகத்திலிருந்து ஸ்நேகா (தமிழகம்)- மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இது  பற்றி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் தொகுப்புக்கான அணிந்துரையில் ‘சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்.’ என்று கூறியிருக்கின்றார். –


“…இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்…”

கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் ‘சாக்’ தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு ‘அப்பார்ட்மென்ற்’ விட்டு ‘அப்பார்ட்மென்ற்’ மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணுக்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்!

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்!– இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. –


யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். ‘பேப்’ வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த ‘யமேய்க்க’ மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். ‘பேப்’ வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். ‘சிறு இந்தியா’ , ‘சிறு இத்தாலி’..இப்படி பல பகுதிகள்.

அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

‘யன்னல்’. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். ‘சப்பாத்து’ ‘அலுகோசு’ போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் ‘யன்னல்’. ‘யன்னல்’ யன்னலாக நிலைத்து நின்று விட்டது. ‘சாளர’த்தை விட எனக்கு ‘யன்னல்’ என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. ‘மின்ன’லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு ‘யன்னல’ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?

Continue Reading →

சிறுகதை : என்னுடையது இல்லை !

கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -“ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக்
கொண்டே இருக்கிறது.

வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”. கனம் கோர்ட்டார் அவர்களே, இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி,” அட ,கழுத்திலேயும் ஒரு நோ !

இலங்கை அரச அதிபர்கள்,சொந்த மூளை க‌ழற்றி ,இரவலைப் பொறுத்தி …நீண்ட நாள்களாகி விட்டன.அந்த மூளையோ துருப் பிடித்து,துருப் பிடித்து,இனப்படுகொலை வரைப் படத்தை பிரதி எடுத்து, கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கி ,புத்தரிசத்தைத்
தொலைத்தும் கனகாலமாகி விட்டன.

“எந்தக் காலத்திற்லும் பயங்கரவாதச் சட்டங்களையும் ,அவசரகாலச் சட்டங்களையும் …அகற்றி விடாதீர்கள். அவை தான் …அத்திவாரங்களே!” அசரீரிகள் அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன‌. காலடியில் கிடக்கும் அற்பர்களிற்கு
விளங்கிறதோ, இல்லையோ,” அந்தக் கொள்கைகளில் கால் வைத்தவர்களிற்கெல்லாம் அது மீற முடியாத‌ கட்டாய விதி !”. இலங்கை அதிபர்கள் ,”என்னால்,இவர்களை மீறி எதையுமே செய்ய முடியிறதில்லையே” என்று கதறுகிறார்கள்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (1): நீ எங்கிருந்து வருகிறாய்?’

வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (1): நீ எங்கிருந்து வருகிறாய்?' – புகலிட வாழ்பனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட எனது சிறுகதைகள் இவை.  புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ஒருவர் அடையும் பல்வகை அனுபவங்களை விபரிப்பவை இவை. இவை பதிவுகள் இணைய இதழில் ‘வ.நகிரிதரனின் புகலிடச் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகும் – வ.ந.கி –


கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, ‘சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:

“இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!”

இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது ‘ஹாக்கி’ அல்லது ‘பேஸ் பால்’ விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.

Continue Reading →

சிறுகதை : வானத்தை தேடும் வானம்பாடிகள்

ஶ்ரீராம் விக்னேஷ்தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி அதிலே தொங்கிக்கொண்டிருந்த உடலைக் கீழே தள்ளிய கதைபோல, ராதாவுடன் மூன்று தடவைகள் பேசியும் மனதுக்கு ஒவ்வாமல், நான்காவது தடவையாக மீண்டும் என் மொபைல்போனை எடுத்தேன்.

எனது நம்பரைப் பார்த்ததும், மிகவும் கடுப்பானாள் அவள்.

“சரியாப் போச்சு…. உருப்பட்ட மாதிரித்தான்…. யேப்பா…. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்…. ஏதோ சின்ன வயசிலயிருந்து நாம ரண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம், வளந்தோமேங்கிறதுக்காக, என் கேசைக் கொண்டுவந்து ஒங்கிட்ட குடுத்தேன்…. உன்னயவிட பெரிய லாயர்மார் இருந்துங்கூட, ஒன்னோட ஆர்கியூமெண்டில நம்பிக்கை வெச்சுத்தான் இந்தக் கேசைத் தந்தேன்…. ஆனா, நீ அப்பப்ப புத்திமாறிப் போயி, செட்டில்மெண்டாய் ஆகிடுன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு வர்ரே…. நீ வக்கீல் வேலைக்கு வர்ரதை விட்டு, பேசாம கல்யாண தரகர் வேலைக்கு போயிருக்கலாமில்ல…. சீ….”

வெறுத்துப்போய் பேசினாள் ராதா.

நான் கோபப்படவில்லை. எனக்கு அவள்மீது அனுதாபமே நிறைந்து நின்றது.

காரணம் : எனது பால்யகால பள்ளித் தோழி அவள். பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் நான் அவளுக்கு வழித்துணையாய் சென்று வருவேன். அன்று அரும்பிய பாசம்….. இன்றும் தொடர்கிறது

நான் விடவில்லை. தொடர்ந்தேன்.

“ராதா…. இனிமேலைக்கு நான் இதைப்பத்தி பேசப்போறதில்லை.. ஏன்னா, உனக்கே தெரியும்…. இன்னிக்கு உன் கேஸ் பைனல் ஆகப் போறது…. உனக்கும் பொன்னரசுவுக்கும் டைவர்ஸ் கிளியராகப் போவுது…. நான் ஒரு வக்கீலா இருந்து, இந்தக் கேசை உனக்காக ஆஜராகி நடத்தினது வாஸ்தவம்தான்…. ஆனா, உள்ளூர என் மனசாட்சியோ ஒரு குடும்பத்தைப் பிரிக்க உதவுறமாதிரி உறுத்திக்கிட்டிருக்கு…. இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல்லை…. உன்கூட சேந்து வாழுறதாயும், இனி எந்தத் தப்புமே பண்ணமாட்டேன்னும் பொன்னரசு கோர்ட்டில அழுதது எனக்கே சங்கடமாயிருந்திச்சு…. அதனாலதான் சொல்றேன்…. நீ செட்டில்மெண்ட் ஆகிப் போறதாயிருந்தா இதை ஒரு கடைசி சந்தர்ப்பமா எடுத்துக்க…. இதை நான் உன்னோட லாயராக சொல்ல வரல்லை…. உன்னோட பால்ய சிநேகிதனா சொல்றேன்…. மூணு வயசில உனக்கும் ஒரு குழந்தை இருக்கு…. ஆம்பிளை துணை இல்லாம அதை வளக்கவோ, இல்ல ஒரு பாதுகாப்பா வாழவோ முடியும்னு எப்பிடி நெனைக்கிறே….”

Continue Reading →

சிறுகதை: சேணமற்ற அவசரம்

- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -உதிர்தலும் ஓர் அழகுதான்.

அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு’ என்ற பாடல்வரிகளை அவளுக்கு நினைவுபடுத்தியது. இலைகளை உதிர்க்கத் தயாராகியிருந்த அந்த மரங்களின் கிளைகளின் இடுக்குகளுக்கிடையே ஊடறுத்துச் சென்ற சூரியஒளிக் கீற்றுக்கள், ஓவியன் ஒருவன் கவனமாகப் பார்த்துப்பார்த்து வர்ணமிட்டதுபோலத் தோற்றமளித்த அந்த இலைகளுக்கு மேலும் அழகுசேர்த்தன. காற்றில் சலசலத்த இலைகளில் சில காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்ணாந்து பார்த்த அவளின் முகத்தை மெல்லத் தொட்டுப் போயின. ஒரு கணம், அவளின் மனம் ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டது.

மரங்களின் கீழே குவிந்திருந்த இலைகளின்மேல் மெதுவாகக் காலடிவைத்து, அவை சரசரக்க அவள் நடந்தாள். விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிக்குவிப்பதும் பின் அவற்றின் மேலேறிக் குதிப்பதும், விதம் விதமான வடிவங்களில் உள்ள இலைகளைச் சேகரிப்பதுமாக அம்மாவுடன் அந்தக் காலத்தில் அவள் விளையாடிய விளையாட்டுக்கள் அவளின் நினைவுக்கு வந்தன. அப்படியே சின்னப் பிள்ளையாக, அம்மாவின் ஒரு குட்டித் தேவதையாக, உறவுகளில் எந்தச் சிக்கலுமில்லாத ஒரு சிறுமியாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும், நினைப்பில் அவள் கண்கள் கசிந்தன.

இயற்கை எப்போதுமே அழகானதுதான். பருவகாலத்து மாற்றங்களை ஆவலுடன் வரவேற்பதும், அவற்றுக்குள் அமிழ்ந்து குதூகலிப்பதும், பருவத்துக்கேற்ற வகையில் விளையாடுவதும்கூட எவ்வளவு இனிமையானவையாக இருக்கின்றன. ஆனால், அதே உதிர்தல்கள், விலகல்கள், விரிசல்கள் வாழ்க்கையில் ஏற்படும்போதுமட்டும் அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனசு மிகவும் வலிக்கிறது. ஒவ்வொரு புதுத்தளிரையும், ஒவ்வொரு புதுஅரும்பையும் பார்க்கும்போது உருவாகும் பரவசமும் சிலிர்ப்பும், உறவுகள் உருவாகும்போது இன்னும் அதிகமாகவே வந்து மனதை நிறைத்துவிடுகிறது, ஆனால், அதே உறவுகள் விலகும்போது மட்டும் அதே லயிப்புடன் பார்க்கமுடிவதில்லை என்ற ஒப்பீடு அவளின் கண்களை மீளவும் நனைத்தது.

மகிழ்ச்சிதரும் ஆரவாரிப்பும், இழப்புத்தரும் வேதனையுமின்றி, Giver என்ற நாவலில் வரும் மனிதர்களைப்போல உணர்ச்சி என்றே ஒன்றில்லாமல் வெறுமன கடமையை மட்டும் செய்துகொண்டு வாழமுடிந்தால், இந்த உலகத்தில் பல பிரச்சினைகள் குறைந்துவிடும் … பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது.

“அன்பு செய்யுங்கள், அன்பே தெய்வம், அன்பு செய்வது பலவீனமல்ல, அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள் … எல்லாமே கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா எதிர்பாப்பில்லாமல் அன்புவைக்கிறது எண்டது … ம், ஐயோ என்னாலை முடியாதப்பா. உதவிசெய்யிறது வேறை, அன்பு வைக்கிறதெண்டது வேறை … சரி, அன்பு எண்டது சுயநலமும் கலந்ததுதான், இருக்கட்டுமே, எனக்கெண்டு நேரமொதுக்கேலாத, என்ரை உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத அன்பு ஒண்டும் எனக்கு வேண்டாம்,” வாய் விட்டே அவள் சொல்லிக்கொண்டாள்.

“குளிர்வர முதல் மரங்களெல்லாம் தங்கடை இலையளை உதிர்க்கிறதும் சுயநலத்திலைதானே. இலையளை வைச்சிருந்தா தாங்க பிழைக்கேலாது எண்டுதானே அதுகளை உதிர்க்குதுகள். பின்னையென்ன, சீ பாவம் அந்த இலையள் குளிரிலை கருகிப் போடுமெண்டு நினைச்சே அதுகளை உதிர்க்குதுகள் … உறவுகளும் ஒரு வகையான addictionதான் எண்டு பிரேம் அண்டைக்குச் சொல்லேக்கே அவனும் இப்பிடித்தான் நினைச்சிருப்பான். என்னோடை தொடர்புகளை அவன் குறைச்சது அவனையும் அவன் முக்கியமெண்டு நினைக்கிற உறவையும் காப்பாத்துற ஒரு முயற்சியாத்தானிருக்கும்…” அவளின் உள்மனம் அவளுடன் பேசியது.

Continue Reading →

புது வாழ்க்கை

சிறுகதை: புது வாழ்க்கைவண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல… உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே… எங்கயும் நிக்காது… பைப்பாஸ் வழியா போறது…” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.

“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா… எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்… சார் டைம்பாஸ் புத்தகம் சார்…” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்…

“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே…” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு…”

“மாதுளை கிலோ எம்பது, எம்பது”

“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்…”

“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை…” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது…

“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்…”

“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா…”

சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது… குரு தியேட்டர் திரும்பி… வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது…

“டிக்கெட்… டிக்கெட்… எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க… “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு… பாட்ட கேட்க முடியல… ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க…”

Continue Reading →

சிறுகதை: சிந்தாமணியின் நினைவுகள்

- தேவகி கருணாகரன் (சிட்னி அவுஸ்திரேலியா) -என்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து எனது  எண்பதாவது பிறந்த நாளை அமோகமாக  சிட்னியில் கொண்டாடினார்கள். என் மூத்த பேத்தி மாதுமையும் மூத்த பேரன் கபிலனும் கேக் வெட்டியபபின் என்னைப் பற்றி சிறு சொற்பொழிவு ஆற்றி என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தார்கள். 

பேரன் கபிலன், “அப்பம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பூமியில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அப்பம்மா, இது மிக நீண்டகாலம் ஒரு சாதனை எனச் சொல்லலாம். 1938 இல் இந்த உலகைச் சுற்றி வர நாலு நாள் எடுத்தது.  அந்தக் கால கட்டத்திலே ஒருவரின் வருடாந்தச் சம்பளம் $1700 ஆக இருந்தது.  அவுஸ்திரேலியாவில் ஒரு கட்டிப் பாண் ஒன்பது சதம், நீங்கள் பிறந்த வருடத்திலே தான் சவுதி அரேபியாவில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது.  நம்புகிறீர்களோ இல்லையோ அது சர்வாதிகாரர்களின் காலம், சகாப்தம். ஸ்டாலின், முசலோனி, ஹிட்லர் ஆகியோர் அதிகாரத்தில் இருந்த காலம். இப்படிச் சரித்திர முக்கியத்துவமான காலத்தில் பிறந்திருக்கிறீர்கள். பேரப் பிள்ளைகளான எங்களுக்கு பெருமையாகவிருக்கிறது.  அதுமட்டுமா, ஹிட்டலர் யூத மக்களை கொடுமைப் படுத்தியகாலமும் அதுதான்.” எனக்கூறியதோடு தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பள்ளி விடுதலை நாட்களில் என்னோடு கழித்த இன்பமான நினைவுகளைப் பகிர்ந்து என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தான்.

இந்தச் சொற்பொழிவு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்தது. என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்த எண்பது வயது வரை கண்ட மாற்றங்களோ ஆயிரம் ஆயிரம். அந்த நினைவுகள் என் நெஞ்சினிலே திரும்பி எழ மனதிலே சொல்லமுடியாத ஏக்கமும் தாபமும் எழுந்தது.    

இரண்டாவது மகா யுத்தம் தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி எட்டில், தாய் தந்தையருக்கு எட்டாவது குழந்தையாக இந்தப் பூமியில், கொக்குவில் கிராமத்தில் இருந்த எனது பாட்டா பாட்டி வீட்டில் பிறந்தேன்.  எனக்கு சிந்தாமணி எனப் பெயரும் வைத்தார்கள்.  எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, ஏன் எனக்கு இந்த பழங் காலத்துப் பெயரை சூட்டினீர்கள் என பெற்றோரிடம் கேட்டதற்கு, ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி  சினிமாப் படமாக 1937 ஆம் ஆண்டில் வெளிவந்து மக்களிடையே புகழ் பெற்றிருந்தது, அம்மாவிற்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால், அந்தப் பெயரை எனக்கு வைத்தார்களாம்.

Continue Reading →