வ.ந.கிரிதரனின் புகலிட அனுபவச்சிறுகதைகள் – பகுதி 1 (1 -10)

வ.ந.கிரிதரனின் புகலிட அனுபவச்சிறுகதைகள் - பகுதி 1 (1 -10)

நான் – வ.ந.கிரிதரன் – எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. ‘சொந்தக்காரன்’ கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. ‘வீட்டைக் கட்டிப்பார்’ ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. ‘யன்னல்’ உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் – கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் – நோர்வே), ‘பூர்வீக இந்தியன்’ (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. ‘சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை’ ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். ‘அமெரிக்கா’ ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், ‘குடிவரவாளன் ‘ ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:

Continue Reading →

சிறுகதை: முழுக்கைகள்

சுப்ரபாரதிமணியன்காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள்  விடுமுறை என்று பெனாசிர்  சொல்லியிருந்தாள்.  புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய  இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.

பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன  சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.   

“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”

“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”

“அப்பிடி ஒன்றும் தெரியலெ”

“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”

ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக  வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.

Continue Reading →

சிறுகதை: சில நிறுத்தங்கள்:

சுப்ரபாரதிமணியன்பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .

முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச்  சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.

எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.

” பார்க்கற பார்வை…சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக…”

” நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா…”

” இங்க இருக்கறவங்களெ விட அழகுதா…”

” செரி… செரி… பேரழகியா நெனச்சக்காதே”

Continue Reading →

குட்டிக்கதை: முட்டாள்?

முல்லை அமுதன்அவன் இறங்கி நடந்தான்.

இரண்டுவாரங்களுக்கு முன்பே  அனுமதி கேட்டிருந்தான்.

பதினெட்டாம் திகதி நிகழ்வொன்றிருக்கிறது.. போகவேணும்..

முகத்தைப் பார்க்காமலேயே முதலாளியின் மனதைப் படம் பிடித்தான்.

லீவு?

பதில் இல்லை..

தராவிட்டால் வேலை அம்போதான்.. பரவாயில்லை.. நினைத்தான்.

நேற்றிரவு வேலை முடிய சொல்லிவந்தான்.

‘நாளை வரமாட்டன்…முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு போறன்’

அதே மௌனம்.

அவரும் அகதியாய் வந்தவர்தான்.

Continue Reading →

சிறுகதை: ஒரு விபத்து!

சிறுகதை வாசிப்புமுன்பெல்லாம்  நகரக்காவலர், அவர்களின் உபபிரிவான பார்க்கிங் ஒபிசர் … மட்டுமில்லை, நகரசபையும்  கூட தன்பங்கிற்கு டிக்கற் வழங்குவதற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருதிருந்தது. ‘பொது மக்களின் வாகன நிறுத்ததிலும் நிறுத்தக் கூடாது .     பட்ட காலே படும் போல , அதற்கும் டிக்கெட் கிடைத்துக் கொண்டிருக்கும்.  

சில‌ “டாக்ஸி” கம்பனிகள் ஏற்கனவே, சிறிது பாரம் கூடிய கணனியைப் பொறுத்தி, அவசர ,அவசிய விபரங்களை வழங்குவதற்கு மட்டும் ரேடியோவை பயன்படுத்திக் கொண்டிருந்தன. ‘ஜி.பி.எஸ் கருவி’ விற்பனைக்கு வந்த பிறகு,வீதிகள் விபரங்கள் அடங்கிய பெரிய வரை  புத்தகத்தைக் வைத்திருக்கிறதும் ஓட்டிகளிடம் குறைந்து விட்டன. சாந்தன், இன்னமும் …புத்தகமும் வைத்திருக்கிறவர்களில் ஒருத்தன்.

நகரசபை, வர்த்தக மையங்களில் இரண்டு அல்லது மூன்று  “டாக்ஸி”கள் நிறுத்தும் தரிப்புகளையே பெரும்பாலும் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.அவற்றில் கொண்டு போய் நிறுத்த எல்லா “டாக்ஸி”களும் போட்டி போட்டால்.. எப்படி.?அதற்கு மேலே ..நிறுத்தினால்,வீதிச்சட்டத்தை மீறிய குற்றம். “டாக்ஸி”க் கம்பனிகள், சட்டை செய்யாமல் .  சேவையை செய்வதற்கு  தமக்கென பிறிம்பான சட்டங்களை, விதிமுறைகளை தயாரித்து வைத்திருந்தன.அவை நகரம் ஏற்படுத்திய சட்ட முறைகளோடு அவ்வளவாக ஒத்து போகவில்லை.வீதிச்சட்டத்தை மீறினால் பொலிஸ் டிக்கற்றை தருவான்.அவர்களுடைய தயாரிப்புபே மீறல்கள்.  நீயாச்சு, நகரகாவ‌லராயிற்று..”என விட்டேந்தியாகவே விட்டிருந்தார்கள்.

பார்கிங் டிக்கற்றுக்கள் வைப்பதில் கண்கொத்திப் பாம்பாக நடக்கிற பொலிஸ்,பார்சல்(பொதிகள்) பெறுவதற்கு நிறுத்தினால் கூட டிக்கற் வைக்கிறவர்களாக இழிந்து போய் இருந்தார்கள். ஓட்டிகள் வழக்கை சட்டமன்றத்திற்கு கொண்டு போகலாம். போவார்கள்.ஆனால்,அடிப்படையில் பொலிஸும், நீதிமன்றமும் ஒரே  கூட்டம் தான்.நகரத்தை காப்பாற்றுவதாகக் கூறி பொலிஸ் ,பொதுமக்களைச் சுடுகிறது.அதற்கு ஏதோதோ காரணங்களை எல்லாம் அடுக்கிறார்கள்.. எந்த பொலிஸ்காரர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?. அதே கதை தான். (சட்டமன்றுக்கு) போவதால் க‌ட்டவேண்டிய தொகை சிறிதளவு குறையும்.அவ்வளவு தான்

Continue Reading →

சிறுகதை: வேரும் விழுதுகளும்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?

போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.

‘அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!”

வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.

‘ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?”

அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.

‘என்ன சரசு?… நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?”

அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.

Continue Reading →

சிறுகதை: சுற்றுலா போய் வருகின்றோம் நண்பர்களே!

-கே.எஸ்.சுதாகர்	ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். ஒரு குடும்பத்தைத் தவிர, அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். இவர்களுக்கு எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் அவருக்கு திருப்தி இருக்கவில்லை. அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார்கள். மனைவி விவாகரத்துப் பெற்றவள். மூன்று பெண்பிள்ளைகள். குப்பைக்குடும்பம். கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.

வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை—ஏழோ எட்டோ படிக்கக்கூடும்— தனது நண்பி ஒருத்தியுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள். மகனை தங்களுடன் விளையாட அனுப்பும்படி கேட்டாள். மகன் படிக்கப் போய்விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் பவித்திரா.

அந்த வீட்டில் இரவு முழுவதும் திருவிழா போல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். எந்நேரமும் கார்கள்—கார் என்று சொல்லமுடியாது வாகனங்கள்—வருவதும் போவதுமாக நிறைந்திருக்கும். அதே போல எல்லாவிதமான மனிதர்களும் வந்து போவார்கள். அந்த வீட்டிற்கு புல்லு வெட்டுபவனின் கார் பெட்டியுடன் சிலவேளைகளில் இரவும் தரித்து நிற்கும். வந்து போகும் பெண்களில் அனேகமானவர்கள் இளமையாக இருக்கின்றார்கள்..

Continue Reading →

சிறுகதை: மறு அவ‘தாரம்’

 நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். ‘நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற  சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.  

என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும்  என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.

ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.

இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.

Continue Reading →

சிறுகதை: உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஊரிலென்றால் கிழக்குமுகம் பார்த்த வீடு. காலையில் முன் விறாந்தையில் நின்று பார்த்தால்.. காற்றிலசையும் தென்னோலைகளுக்கு ஊடாக பளிச் பளிச் என சூரியன் தோன்றிக்கொண்டு வருவான். அப்போதெல்லாம் அப்பா தலைக்கு மேலாக கையை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யும்போது பார்க்க அவனுக்கு வேடிக்கையாயிருக்கும். இப்போது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் தனிமையில் அவனுக்கும் கடவுள் வணக்கமும் பிரார்த்தனையும் தேவைப்படுகிறது.

கப்பலுக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சிறீலங்காவில் யுத்த காலத்தில் வேலைகளேதுமின்றி கஷ்டமும் கடனும் பட்டு வாழ்ந்த வாழ்க்கை வேணாமென்று போயிருந்தது. அதையெல்லாம் நிவர்த்திக்கமுடியாதா என்ற நைப்பாசையிற்தான் கப்பலில் வேலைக்கு வந்து சேர்ந்தான். ஒரு வருடம் வேலை செய்துவிட்டு ஊரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் ஓர் உத்தேசம் இருந்தது. வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன… அவனது கடன் பிரச்சினைகள் தீர்ந்தபாடுமில்லை… வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபாடுமில்லை.

கப்பற்தளத்தின் பின் பக்கமாக வந்து நின்று வானத்தைப் பார்த்தான். கப்பலில் பயணிக்கும்போது திசைகள் மாறிவிடுகிறது. முதல் நாள் பயணித்த திசை, காலையில் விழிக்கும்போது மாறியிருக்கும்.. கப்பல் வேறு ஒரு திசையில் போய்க்கொண்டிருக்கும். ஒரே திசையில் பயணித்தாலும் பாகைக் கணக்கிலேனும் பக்கங்கள் மாறிவிடும். கடலலைகளில் கப்பல் அசையும்போது சூரியனும் வானத்தில் ஏய்த்து விளையாடுவதுபோலிருக்கும்.  கருமேகங்களுக்குள்ளிருந்து சூரியன் வெளிப்படும்போது தோன்றும் ஒளிர்வு மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். கைகளை உயர்த்தி வணங்கும்போது அவனுக்குக் கண்கள் கலங்கியது. அது, அந்த சூரிய ஜோதியின் தாக்கத்தினாலும் மனைவி பிள்ளைகளை நினைத்த பிரிவாற்றாமையாலும் கிளர்ந்த ஓர் உணர்ச்சி வசமாயிருக்கலாம். அவன் மௌனமாகிப்போனான்.  அப்படியே கண்களை மூடி மனசு தியானித்தது. இது வழக்கமான சங்கதிதான். கப்பல் வாழ்வில் ஒவ்வொரு காலையும் கண் கலங்கலுடன்தான் புலர்கிறது.

Continue Reading →

சிறுகதை: கட்டன்ஹாவும் மனைவியும் (அங்கோலா நாட்டுச் சிறுகதை)

- ராஉல் டேவிட் அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா – டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

Continue Reading →