குட்டிக் கதை: நடைமுறையும் , தத்துவமும்!

முல்லை அமுதன்‘அப்பா!’

கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?

மௌனமாக திரும்பினேன்.

விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.

சொன்னாள்.

‘ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்’

அதற்கு..?

அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே.

அவளின் குரல் வரட்டுமே.

எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.

Continue Reading →

சிறுகதை: மரத்துடன் மனங்கள்

-கே.எஸ்.சுதாகர்	இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.

”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”

“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”

இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.

கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.

ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.

“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.

Continue Reading →

தீபாவளிச் சிறப்பு சிறுதை. மாயாண்டியும் முனியாண்டியும்

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா

மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர்.

“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார்.

“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது  சந்தோசமா ஆட்டுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். சந்தோசமா ஆடி பாடி மகிழனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படையல் போட்டு அமர்க்களப்படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.

“பத்தில்ல காளி…. இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம…சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம்     பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவையும் தீபாவளி விருந்தையும் தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி…..!” தலைவர் மாயாண்டி  உற்சாகமாகப் பேசுகிறார்.

“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்சியா தீபாவளி விருந்தை  நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக முறுக்கிவிடுகிறார் தலைவர்.

“தலைவரே….உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில்ல தீபாவளி விருந்துல  சுவையான ஆட்டுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது. என் புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா…. உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி”

Continue Reading →

சிறுகதை : என்றென்றும் அவளோடு

சுரேஷ் அகணிசிக்காகோ  ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம்  ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.

“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன்  கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில்  அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும்  ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.

சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.

உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள்.

Continue Reading →

சிறுகதை: மௌனம் தொடர்கிறது

சிறுகதை: மௌனம் தொடர்கிறதுஅப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.

போகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்?” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.

“கனகா . . . . . கனகா .
. . . .”
“என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,

“மலர் . . . . . மலர் . . . . .”

“இந்தா வந்துட்டேம்பா…”             படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.

“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”

“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.

“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார்.

Continue Reading →

சிறுகதை: தெருச் சருகுகள்

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு. விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் ‘பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல’ என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Continue Reading →

சிறுகதை: வட்டி!

அமரர் எஸ். அகஸ்தியர்எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை ‘வட்டி’ அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’

பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது?

‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்…நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும்  கேட்கிறதாக் காங்கலியே?  ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்…’

பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள்.

‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’

‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’

பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது.

‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’

Continue Reading →

சிறுகதை: ஜெமோவும் சமந்தாவும் .

பரதன் நவரத்தினம்யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,

“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்” .

நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .

காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் “என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் ” என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .

“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “

“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் “

“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்”

“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் “

“உனக்கு எப்ப நியுஸ் வந்தது “

“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்”

“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல”

“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன ”

Continue Reading →

சிறுகதை: எழுத்தாளர் காபெக்தனை பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!– இந்த கதை போர்ஹேவின் அல்முட்டாசின் ஒர் அணுகுமுறை எனும் சிறுகதையின் வடிவத்தை தழுவி எழுதப்பட்டது. –


நாயின் தலை குதிரையின் உடலை உடைய விலங்குகளை பற்றி யோசித்திருக்கிறீர்களா ?

நேற்று ஒன்றை பார்த்தேன் அமேஸ் காடுகளில்.அதை பற்றி எழுதியே ஆகவேண்டும் என தோன்றியது . நல்ல கறுமையான முகம்.எச்சில் வடியும் நாக்கு.அந்த நாக்கை எப்போதும் சூழ்ந்திருக்கும்  காற்று. அதன் உடலை பார்த்தால் ஏற்கனவே நான் பார்த்த மனிதத்தலை குதிரை உடல் உடையவர்கள் நினைவுக்கு வந்தனர். ஏற்கனவே போர்ஹே நீலப்புலியை பற்றி சொல்லியிருந்தார். என்னுடைய நெருங்கிய நண்பரான காஃப்கா மனிதன் பூச்சியானதை சொன்னதும் நினைவுக்கு வந்தது . கனவு பதிப்பகத்தில் சமீபத்தில் தான் “புனைவாக்கத்தின் நனவு – காபெக்தன் ” எழுதிய புத்தகம் நினைவுக்கு வந்தது.

அதில் காபெக்தன் இவ்வாறு எழுதுகிறார்.அந்த கட்டுரையின் முக்கியமான பத்தி,

“புனைவில் இருந்து புனைவை உருவாக்கியவன் கற்றுக்கொள்கிறான். யூத இனவதை முகாம்களின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் யூதர்களை அழிக்க நினைத்தவரின் வார்த்தைகள் செங்கற்களுக்கு பதிலாக உள்ளது. புனைவின் மிருகங்களை எதிர்த்து ஒரு நாள் நாம் போராட வேண்டியிருக்கும். இந்த கட்டுரையை காபெக்தன் ஆன நான் ஏற்கனவே அலஸ்காவின் அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளேன் .புனைவின் மிருகங்களால் பலியானோரின் எண்ணிக்கை ஏழாயிரம் என இனஸ்கோவின் அறிக்கை சொல்கிறது.”

Continue Reading →

அறிவியல் புனைகதை: ’மவுஸ்’ –

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.

செய்தி இதுதான்.
|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|

எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது—குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்—இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை—கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

Continue Reading →