தொழில் நுட்ப வளார்ச்சியால் நித்திய வாழ்வைப் பெறாலாம் எனப் பல ஆதாரங்களைக் காட்டிக் கூறுபவர் கூகிளின் (Google) பொறியியல் பணிப்பாளாரில் (director) ஒருவரான றே கேர்ஸ்வில் (Ray Kurzweil) ஆவர். 68 வயதான இவர் இன்னும் முப்பது வருடங்களில் இது சாத்தியமாகும் என எதிர்வுகூறி 2045 வரை வாழ்ந்து நித்திய வாழ்வை அடைவதற்காக தனது தேக, மன ஆரோக்கியத்தை மிகக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார். அவருடைய முக்கிய கருதுகோள், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி, நேரியல் (linear) வீதத்தில் இல்லாமல் அடுக்கேற்ற (exponential) வீதத்தில் நடைபெற்றாலும் அதனை நாம் உணராமல் இருப்பதே.
சற்றே சிந்தியுங்கள். 200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது மூதாதையர் ஒருவர் இன்னும் 200 வருடங்களில் 1,000 மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாகக் காண்பது போலக் காணலாம் என்றால் நம்பியிருப்பாரா? அவர் காலத்திற்கு முந்திய பல்லாயிரம் ஆண்டுகளில் நடைபெறாதது, இன்னும் 200 வருடங்களில் நடைபெறும் என்று கூறினால் நம்பக் கூடியதாகவா இருந்திருக்கும்? ஸ்கைப்பில் (skype) நேரில் பார்த்துக் கதைப்பது, ஆகாயத்தில் பறந்து செல்வது, குதிரைகளுக்குப் பதிலாகச் சொந்த இயந்திரக் குதிரையில் (மோட்டார் காரில்) செல்வது எல்லாம் நம்பக்கூடியதாகவா இருந்திருக்கும்?
றே கூறும் விஞ்ஞானவளர்ச்சி தானியங்கியியல் (Robotics), நனோ தொழில்நுட்பம் (Nano technology), மரபுப்பொறியியல் (Genetic engineering) எனும் மூன்று திசைகளில் நடைபெறும். இம்மூன்றும் ஒன்றை ஒன்று வளர்ப்பதற்கு மிகவும் அவசியமாகும். மூன்றும் வளர்ச்சி அடையும் பொழுது மொத்த வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.
தானியங்கியியல் (Robotics)
1946 இல் உருவான முதலாவது இலத்திரனியல் கணனி ”எனியாக்’ (ENIAC) இன், செயலாக்க வேகம் (processing speed) 0.1 MHz, விலை $ 500,000 ($ 6 மில்லியன் இன்றைய விலை), எடை 30 தொன் (ton), ஆக்கிரமித்த பரப்பு 1,800 சதுரஅடி, கன அளவு 8’x3’x100′, இதனை இயக்குவதற்கு தேவையான வலு 150 kW. ஆனால் தற்பொழுது வெறும் 2 இறாத்தல் நிறையேயுள்ள மடிக்கணினி (Laptop) 20,000 மடங்கு செயலாக்க வேகத்தில் (processing speed) $ 850 இற்கு வாங்கமுடிகிறது. ஒரு நுண்ணறிபேசி (smart phone) கூட ”எனியாக்’ ஐ விட மிகமிக அதிகமாக வேலை செய்கிறது.
Continue Reading →