இராசபாளையம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனக்குப் பல இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் நீயே முளைப்பாய் என்ற நூலினுடைய ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமாகிய கரிசல்காரி, கவிதா ஜவஹர் எனக்கு அறிமுகம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக எங்களுடைய முதல் கவிதை நூலை ஒரே நாளில் வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீயே முளைப்பாய் என்ற கவிதைத் தொகுதியில் பெரும்பான்மையான கவிதைகள் மழை பற்றியதாகவே இருக்கின்றன. குறிப்பாக மழை காதலினுடைய குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு குறியீடாகவும் அதிகாரத்தினுடைய குறியீடாகவும் ஆசிரியர் பயன்படுத்திருக்கிறார்.
ஏறத்தாழ பதினைந்து கவிதைகள் மழை பற்றிய கவிதைகளாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஆசிரியருக்கு மழை மீது கொண்டிருந்த அலாதிப் பிரியம் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். தன்னுடைய முதல் கவிதையே மழை பற்றிய கவிதை தான். அந்த கவிதை,
‘நீ என்னை சந்திக்க
இயலாமல் போனதற்கு
மழை ஒரு தடையெனச்
சொல்வாயாயின்
அவசரமில்லை
அடுத்ததொரு ஜென்மத்தில்
உன்னை சந்திக்கிறேன்
அதுவரை மழை போதும் எனக்கு’
இந்தக் கவிதையில் ஒரு தலைவனோ அல்லது தலைவியோ தன்னுடைய அன்பையே மழைக்காகத், துச்சமென தூக்கி எறியக் கூடிய ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. நான் உன்னை இந்த ஜென்மத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்திலாவது உன்னைச் சந்திக்கிறேன் என்ற வரிகள். எனவே இந்தக் காதல் என்பது பல ஜென்மங்களைக் கடந்து நிகழக் கூடிய ஒரு உணர்வு என்பதைப் பதிவு செய்திருக்கிறார் (பக்கம்.2).
அதிகாரம் என்பது உழைப்பையும் மனிதத்தையும் ஆக்கிரமிக்கும் என்பதையும் அடங்க வைக்கும் என்பதையும் அதிகாரம் எல்லா இடங்களிலும் கோலேச்சும் என்பதை ஒரு கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.