ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் முல்லைத்திணை அகமாந்தர்கள்

   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -முன்னுரை
பழந்தமிழர் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இதில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியமாகும். எட்டுத்தொகையில் நூல்களில் அகம் சார்ந்த நூல்களுள் ஒன்றான அகநானூறு மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த 400 அகப்பாடல்களின் தொகுப்பாகும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். வேறு நூல்களில் காணமுடியாத ஒரு வரையறையை இந்நூல் காணலாம். நான்காம் எண் முல்லை என்ற முறையில் இந்நூல் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவன் தலைவி மீது கொண்ட காதலும், தலைவி தலைவன் மீது கொண்ட காதலும் இவ்விருவரும் அன்பைப் பயிரினச் காட்சி உவமைகள் வாயிலாகவும், பயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் நிலைகளைக் கூட்டுப் பயிரினக் காட்சிகள் வாயிலாகக் காட்டி அகமாந்தர்கள் உள்ளத்தில் அன்பின் நிலைபேற்றினை உறுதிப்படுத்தும் உணர்வுகளைப் புலவர்களின் குறிப்பின் சுட்டிக்காட்டுவதை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்துவதை அறியலாம்.

தலைவனின் கூற்று
வினையின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே முல்லைத்திணையில் மிகுதியான கூற்று நிகழ்த்துகிறான். வினையை முடிந்து மீண்டும் வரும் சூழலில் தலைவனானவன் தன்னோடு வரும் தேர்ப்பாகனிடம் தன்னுணர்வை வெளிப்படுத்துகிறான். தலைவனுக்குரிய கிளவிகளையெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக்குறிப்பிடும்போது,

பேரிசை ஊர்தீப் பாகர் பாங்கினும்     (தொல்.பொருள்.நூ:144)

என்று நூற்பாவின் மூலமாகக் கூறுகிறார்.

தலைவியைப் பிரிந்திருக்கும் போது பாகன் ஒருவனே தலைவனுடன் நெருங்கிப் பணிபுரிபவனாக, நெருங்கியத் தொண்டனாக இருப்பதால் பாகனிடம் மட்டுமே தலைவன் தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். இதனை,

.   .   .   .   .   .   முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையிலும் (தொல்.பொருள்.நூ:44)

என்ற நூற்பாவின் மூலமாகச் சுட்டுகிறது.

முல்லைத்திணையில் தலைமகன் தேர்ப்பாகன் கூறுவதாகப் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாசறையில் இருக்கும்போது தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக ஒரு பாடலும், வினையை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக பதினான்குப் பாடல்களும், தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக மூன்று பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர வினைமுற்றியத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பது போல் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக இரு பாடல்களும், பாசறையில் இருந்த தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதாக நான்கு பாடல்களும், தலைவன் பாசறையிலிருந்து தனக்குத் தானே சொல்லியதாக ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.

Continue Reading →

ஆய்வு: தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இந்திய அளவில் சில மாநிலங்களில் திரெளபதியம்மன் வழிபாடு காணப்படுகிறது. அதனுடைய தொடர்ச்சி தமிழ் நாட்டின் தொண்டைமண்டலப் பகுதியிலும் காணப்படுகிறது. தொண்டைமண்டலப் பகுதியில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன் சமணசமயமும் பெளத்தசமயமும் வேராகவும் தலைமையிடமாகவும் கொண்டு பக்திநிலையை உருவாக்கி மக்களிடத்தில் பெரும்பான்மை பெற்றுத் திகழ்ந்து விளங்கியது. அப்போது அப்பகுதி மக்கள் பெரும்பான்மையோர் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களில் இருக்கின்ற கடவுள்களை இறைவனாக வழிபட்டுவந்தனர். இப்பகுதியில் முதலில் சமணம் ஆதிக்கம்பெற்றும் இரண்டாவதாகப் பெளத்தம் ஆதிக்கம் பெற்றும் சிறந்து விளங்கியது. தமிழ் இலக்கியங்களைக் கூர்ந்துநோக்கிப்பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் சில பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. சங்கம்மருவிய இலக்கியத்தில் பெருபான்மையான நூல்களின் பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. காப்பிய இலக்கி யத்தில் பெரும்பான்மையாகச் சமணப்புலவர்கள் இயற்றிய நூல்களாகும்; சில பெளத்தப்புலவர்கள் இயற்றிய நூல்களும் அறியப்படுகின்றன. மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றிய பாடல்களும் இலக்கியங்களும் ஆகும். ஆனால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின் பக்தி இலக்கிய நிலை உருவாகி சைவம், வைணவம் என்ற இருபெரும்பக்தி நிலைகள் தோன்றியதன்மூலம் சமணமும் பெளத்தமும் அழிந்து, சைவமும் வைணமும் இங்கு வேர் ஊன்றத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையில் சைவமும் வைணமும் மக்கள் இடத்தில் சிறப்புற்று விளங்குகின்றன. இம் மதங்களுக்குத் தலைமையிடமாக விளங்கியது தொண்டை மண்டப்பகுதியே ஆகும். கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சித் தொண்டைமண்டலத்தில் நிலவியிருந்தது. அப்போது, பல்லவமன்னர்கள்மீது வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்துள்ளனர். அதில் குறிப்பாகச் சாளுக்கிய மன்னர்களான முதலாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் ஆகியோர் படையெடுத்து வந்துள்ளனர். அக்காலங்களில் போர்கள் மிகுதியாக இருந்த காரணங்களால், பாரதக்கதைகள் கோவில்களில் படிக்கப்பட்டுள்ளன. பாரதக்கதைகளில் குறிப்பாகப் பாண்டவர்கள் போர்த்திறத்தைப் பற்றியும் திரெளபதியின் ஆற்றலைப்பற்றியும் மிகுதியாகப் படிக்கப்பட்டன.

தொண்டைமண்டலத்திலுள்ள கூரம் சிவன் கோவில் முதல் கற்கோவிலாகும். பரமேசுவரவர்மன் சிறந்த ஒரு சிவபக்தன் ஆவான். இவர் தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்; பலவற்றைப் புதுப்பித்தார். இவர் கூரம் என்ற சிற்றூரில் சிவன் கோவில் ஒன்றைக் கல்லாற் கட்டினார்; அதற்கு இவ்வரசன் பரமேசுவர மங்கலாம் எனத் தன் பெயர்பெற்ற சிற்றூரை மானியமாக விட்டார். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம் எனப் பெயர் பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதல் கற்கோவிலாகும். இப்போது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவர் காலத்தில் நடந்துவந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். இவர் கோவிலில் பாரதம் படிக்கச் செய்த அரசனாவார். கூரம் பட்டயம் முதல் இரண்டு சுலோகங்கள் பரமேசுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன என்பதை சி. சீனிவாச சாஸ்திரி எழுதிய பல்லவ வரலாறு எனும் நூலில் குறிப்பிட்ட செய்தியை மா.இராசமாணிக்கனார் (2008:153) தான் எழுதிய பல்லவ வரலாற்றில் கூறியுள்ளார். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் தான் பல்லவர் – சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது. அப்போராட்டம் இவருக்குப்பின் 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்தது (இராசமாணிக்கனார்,2008:98). பரமேசுவரவர்மன் கி.பி.670-685 வரையில் அவருடைய காலக்கட்டமாகும். இவருடைய வரலாற்றைப் படித்தால் சாளுக்கிய மன்னர்களுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் அவர்கள் பாரதக்கதைகள் படிப்பதற்கு நிலங்கள் மானியமாகக் கொடுக் கப்பட்டதைக் காணலாம் (இராசமாணிக்கனார்,2008:142-156). பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலம் தொடங்கி பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் காலம் வரையில் நீண்ட போர்கள் நடைபெற்றன. அதில் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மனுக்கும் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் நீண்ட காலங்கலாகப் (நாட்களாகப்) போர்கள் நடைபெற்றன. பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்ற போர்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்றும் போரில் நிரந்தரமாக வெற்றி பெறவேண்டும் என்றும் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் தன் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாரதக்கதைகளை நாள்தோறும் படிக்கும்படியும் நாள்தோறும் கூறும்படியும் செய்தான். இதனால் அவர் காலத்தில் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் பாரதக்கதைகளைக் கூறுவோருக்கும் பரமேசுவரவர்மன் நிலங்களை வழங்கினார் என்று கூரம் செப்பேட்டிலும் தண்டன் செப்பேட்டிலும் காணக்கிடக்கின்றன (முத்தையா,1988:29). பாரதவிருத்தி எனும் நூலில் சோழமன்னர்கள் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் கூறுவோருக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துள்ளனர் என்பதைக் காணமுடியும். இன்றும் தமிழகத்தில் உள்ள கோவில் களுக்கு நிலங்கள் மானியங்களாக இருப்பதைப் பல கோவில்களின் வாயிலாக அறியலாம் (சதாசிவப் பண்டாரத்தார்,2008:90). தமிழ் நாட்டில் பல ஊர்களில் பாரதக்கதைகள் கூறப்பட்டதையும் பாடப்பட்டதையும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் காணக்கிடக்கின்றன (நாகசாமி,1990:3). செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள கருங்குழி என்ற ஊரில் அவ்வூர் மக்கள் எட்டு ஏக்கர் நிலத்து வருவாயைப் பாரதக்கூத்து நடத்துவதற்கு மானியமாக வழங்கி வருகிறார்கள். இது கூத்திரு மானியம் என்றும் கூத்தியர் மானியம் என்றும் வழங்கப்படுகிறது (துளசி இராமசாமி,2000:69). பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் மக்களிடம் போர்வேட்கையைத் தூண்டுவதற்காகப் பாரதக்கதையினைக் கூத்தின் மூலம் பரப்ப நினைத்துக் கூத்து நடத்துவதற்கு என்று கோவில் ஒன்றைக் கட்ட எண்ணினான். அது திரெளபதி கோவிலாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதினான். அதன் காரண மாகத் தோன்றியதுதான் திரெளபதியம்மன் கோவில் என்று துளசி. இராமசாமி கருதுகிறார் (2000:70).

Continue Reading →

போலிச் செய்தி எனும் போர்க் கருவி!

எழுத்தாளர் க.நவம்‘போலிச் செய்தி’ தமிழுக்குப் புதிய பதமல்ல. ஆனால் அதன் ஆங்கில வடிவமான ‘fake news’ மேற்குலகில் 3 வருடங்களுக்கு முன்னர் பலரும் அறிந்திராத ஒரு வார்த்தை. இப்போது அது ஜனநாயகத்துக்கும் கட்டுப்பாடற்ற விவாதத்துக்கும் மேற்குலகின் புதிய ஒழுங்கமைப்புக்கும் அச்சுறுத்தல் தரும் வார்த்தையாகிவிட்டது. அரசல்புரசலாக அடிபட்டுவந்த அவ்வார்த்தையை அம்பலத்துக்குக் கொண்டுவந்த பெருமை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே சாரும். அவரது பெருவிருப்புக்குரிய வார்த்தையாக மட்டுமன்றி, ’2017ஆம் ஆண்டின் வார்த்தை’ என்ற விருதுக் கௌரவதையும் தன்வயப்படுத்திக்கொண்ட வல்லமை மிக்க சொல்லாகிவிட்டது! .

போலிச் செய்தி என்னும் பதத்தை 2017 இறுதியில், டொனால்டு ட்ரம்ப் தனது மிகப் பிரியமான சமூக ஊடகமான ட்விட்டரில் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினார். பிரபல முன்னணி ஊடகங்களான New York Times, Washington Post, CNN போன்றவற்றைப் போலிச் செய்திகளின் கருவூலங்கள் எனக் குறிப்பிட்டார். CNN, ABC, NBC நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகள் யாவும் போலிச் செய்திகள் எனச் சாடினார். தமக்குப் பிடித்தமற்ற செய்திகளனைத்தும் போலிச் செய்திகளே எனப் பிரகடனம் செய்தார். ட்விட்டரில் இச்சொல்லை இற்றைவரை உபயோகித்துவரும் அவர், ஊடகங்கள்மீது தொடர்ந்தும் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.

தம்மைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் எல்லாமே போலிச் செய்திகள் என அங்கலாய்த்துத் திரியும் அமெரிக்க அதிபர், தேர்தல் காலம் முதற்கொண்டு தமக்கு ஆதரவாக மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உண்மைச் செய்தியாக நற்சான்று வழங்கி வருகின்றார். ஊடகங்களை மக்களது எதிரிகள் என்கின்றார். அவர் தொடர்பான அநேகமான CNN, CBS, NBC செய்திகள் எதிர்மறையானவை என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் போலிச் செய்திகள் என்பதுதான் தவறு. உண்மையறவற்றை அவர் போலிச் செய்திகள் என்பதில்லை. பதிலாக, தமக்கு அசௌகரியமானவற்றையும் பாதகமானவற்றையுமே அவர் போலிச் செய்திகள் என்பதுதான் வேடிக்கை! இது ஊடக சுதந்திரத்தின் மீதான, ஆதாரமற்ற தாக்குதலென விமர்சிக்கப்படுகின்றது. 

முற்றுமுழுதாகப் புனையப்பட்ட கதைகளே போலிச் செய்திகள் எனப்படுகின்றன. இவை பொய்யானவை; இட்டுக்கட்டப்பட்டவை; ஆதாரங்களற்றவை. வாசகர்களைத் தவறாக வழிப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார மார்க்கமாகப் பயன்படுத்தப்படுகின்றவை. அண்மைக்கால உண்மைச் செய்திகளினதை விட, போலிச் செய்திகளின் உலகு மிகமிக விசாலமானது. சிலவற்றுள் சில உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எவ்வித சூழ்நிலைப் பொருத்தப்பாடும் இருப்பதில்லை. உறுதி செய்யத் தேவையான உண்மைகள், அடிப்படை ஆதாரங்கள் இருப்பதில்லை. வேண்டுமென்று ஆத்திரமூட்டும் மொழியில், முக்கியமான விபரங்களைத் திட்டமிட்டுத் தவிர்த்து, ஏதோ ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்துவதாகப் போலிச் செய்திகள் வரையப்படுகின்றன. சிலவேளைகளில் தவறுதலாக அல்லது கவனக் குறைவாக உருவாக்கிப் பரப்பப்படுகின்ற போதிலும், போலிச் செய்திகள் பொதுவாகத் தவறானவை; நேர்மையற்றவை; நேர்த்தியற்றவை; ஏமாற்றுவதை அல்லது பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு, உருவாக்கிப் பரப்பப்படுபவை; உண்மையை மூடி மறைப்பவை: பொதுசன அபிப்பிராயத்தின்மீது செல்வாக்குச் செலுத்துபவை; தமக்கான ஆதரவைப் பெருக்கவும் எதிர்ப்பை நசிக்கவும் முற்படும் அரசாங்கங்களதும் அதிகாரம் மிக்கவர்களதும் ஆயுதமாகப் பயன்பட்டு வருபவை.

Continue Reading →

ஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்

- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. - பதினெண் மேற்கணக்கு எனப்படும் சங்கஇலக்கியத்திற்குப் பிறகு பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு புறநூல் களவழிநாற்பது ஆகும். சோழமன்னனான  கோச்செங்கணானுக்கும்,  சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும்  இடையே  கழுமலத்தில்  இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல். இதை எழுதியவர்  பொய்கையார்  என்னும்  புலவர். இவர்  சேரமன்னனுடைய நண்பன் ஆவார். கழுகலத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது. இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும்  புரிந்த வீரப்போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகள் பெற்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “களவழி என்பது ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடுவதாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.” (இளம்.தொல்.பொருள்.ப.115) அவற்றை ஏரோர் களவழி, தேரோர் களவழி எனக் குறிப்பிடும்; இளம்பூரணர், ஏரோர் களவழி என்பது நெற்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதென்றும், தேரோர் களவழி என்பது போர்க்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,

“ஓஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் மலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ் மேலாள்
ஆவுதை காளாம்பி போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து”    (களவழி நாற்பது. 36)

என்ற களவழி நாற்பது பாடலும் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வேளாண் மக்கள் விளையுங் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி” எனக் கூறுகிறார். வெள்ளைவாரணர் உரையில், “போர்க்களத்தில் நிகழ்த்த வேண்டிய போர் முறைகளை ஆராய்ந்தறிந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிபவனாகிய உழவர் வினையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும் என்கிறார்.”  ( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.37 )

Continue Reading →

ஆய்வு: தொண்டைமண்டலத்தில் தொல்பழங்காலப் பதிவுகள்

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலம் தொல்பழங்காலம் தொட்டே ஒரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இயங்கிவருகிறது. இது பழையகற்காலம், புதியகற்காலம், பெரும்கற்காலம் என்று அதன் தொன்மையினை வரையறுத்துக் காட்டுகிறது. இப்பகுதிகளில் தொல்லுயிர்ப்படிமங்கள், தொல்மரப்படிமங்கள், கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, ஈமத்தாழி, ஈமப்பேழை எனப் பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் காணக்கிடக்கின்றன.

தொல்லுயிர்ப்படிவுகள்
தொன்மைச்சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி அழிந்துபோன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் தொல்லுயிர் படிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருமளவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருங்காட்டுக்கோட்டை, கண்ணன்தாங்கல், சிவன்கூடல் போன்ற ஊர்களில் தாவரப் படிமங்கள், பழங்கற்காலக் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன (நடன.காசிநாதன்,2010:10-11).

பழையகற்காலப்பண்பாடு
இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் (Pleistocene) காலத்தில் பழையகற்காலப்பண்பாடு தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் காடுகளிலும் மலைகளிலும் நாடோடியாக வாழ்ந்தான். அவன் கொடியமிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தம்வாழ்வின் பல உபயோகங்களுக்கும் குவார்ட்சைட் (Quartzite) எனப்படும் கூழாங்கற்களிலிருந்து செய்யப்பட்ட கடினமான கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இந்தியாவில் இப்பழையகற்காலமானது கற்கருவிகளின் பொதுத் தன்மைகளையும் தொழில்நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் முதற் பழங்கற்காலம் (Early or Lower Palaeolithic Age) எனப்படும் காலம் ஏறத்தாழ 5,00,000 – 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் கூழாங்கற்களினாலான கைக்கோடாரி (Hand Axe), வெட்டுக்கருவி (Chopper), கூர்முனைக்கருவி (Points), வட்டுக்கருவி அல்லது தட்டுவடிவக்கருவி (Discoids), கிழிப்பான் (Cleavers) போன்ற பெரியவகை கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இதற்கடுத்துவரும் இடைப் பழங்கற்காலமானது (Middle Palaeolithic Age), சுமார் 50,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிலவியதாகும். இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் சிறிது அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றவனாகமாறி இருந்தான். இக்காலத்தில் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகள் அளவில் சிறியவையாகவும் நேர்த்தியானவையாகவும் செய்யப்பட்டிருந்தன. கூழாங்கற்களுடன் செர்ட் எனப்படும் இளம்பச்சைநிற வகைக்கற்கள் ஆயுதங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கைக்கோடாரி, கூர்முனைக்கருவி, வட்டுகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், ஈட்டிகள், வாய்ச்சிகள் போன்ற பலவகை கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைப் பழங்கற்காலம் (Later or Upper Palaeolithic Age) எனப்படும் சுமார் 20,000 – 10,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்றாவது காலக்கட்டத்தில் சில்லுக்கருவிகளை (Flake tools) பயன்படுத்தியதோடு, குவார்ட்ஸ் (Quartrz), செர்ட் (Chert) போன்ற வகைக்கற்களினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கூர்மையான, நேர்த்தியான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பிளேடு (Blade), துளைப்பான் (Borer), கத்தி (Knife), சுரண்டி (Scrapper), கிழிப்பான் (Cleaver) போன்ற வகையான கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்குறிப்பிட்ட மூன்று பழங்கற்காலப் பண்பாடுகளும் நிலவிய தற்கான சான்றுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (நடன. காசிநாதன்,2010:12).

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழ் இலக்கியத்தில் நீர்

முன்னுரை
பழந்தமிழ் இலக்கியத்தின் இமயம் போல இருப்பது சங்கப்பாடல்களே. காதலை   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -யும் வீரத்தையும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்று சங்கப் பாடல்கள் உள்ளன. காதல் பாடல்கள் அனைத்தும் அகப்பாடல்கள் என்றும் போர்ப்பாடல்கள் புறப்பாடல்கள் எனப் பிரித்துச்சொல்லப்படுகின்றன. மனித வாழ்க்கையில் இயற்கைக்கு நிகராக இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை உணரமுடிகின்றன. நீரின் தன்மையைப் பற்றி பல்வேறு பாடல்களின் மூலமாகப்புலவர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். தம் பாடலடிகளின் மூலம் கூறிய செய்திகளை சங்க இலக்கிய நூல்கள் மூலமாகக் கூறியுள்ளார்கள். பருவநிலையேற்றப் போல நீரின் தேக்கத்தைப் பற்றியும் இயற்யையாக உருவாக்கும் மழை நீர் தன்மையையும் பற்றியும் மனிதனின் ஆக்கப்பூர்மான ஓவ்வொரு செயலுக்கு இன்றியாமையாக ஒன்றாக நீர். நீர் பற்றிய செய்திகளை பழந்தமிழ் நூலின் அடிகளின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரை நோக்கமாக முற்படுகிறது.

ஐம்பூதங்கள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஐம்பூதங்கள் சமநிலையில் இருக்குமாயின் எந்த விதமானப் பாதிப்புகள் எப்போதும் மனிதனுக்கு வருவதில்லை. இயற்கையின் அமைப்பு ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பவற்றைச் சார்ந்தது. இங்கு மக்கள் நிலத்தை நிலமகள் என்னும் புவிமடந்தை என வழிபட்டனர். திருமகள் பற்றி கூறுவதை,

வரிறுதல் எழில்வேழம் பூநீர் மேல்சொரிதர
புரிநெகிழ் தாமரை மலர் அம்கண் வீறு எய்தி
திருநயந்து இருந்தன்ன தேம்கமழ் விறல் வெற்ப (கலித்.44:5-7)

என கபிலர் கலித்தொகைப்பாடலடிகளின் வழியாகச் சுட்டுகின்றார்.

நீர் என்பதும் இயற்கையின் மற்றொரு முக்கியக் காரணியாகும். கடலைச் சேரும் ஆறுகளை எல்லாம் தெய்வமாக எண்ணி மக்கள் வழிபடுகின்றனர். மக்கள் ஆறுகளுக்கு பெயர் வைத்து கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி, கிரு~;ணா, காவிரி, வைகை முதலியன ஆறுகளெல்லாம் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து இருந்துள்ளன. கங்கையைத் தன் தலையில் சூடியவர் சிவன் என்பதை,

அமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலித்.38:1)

என்ற பாடலடியின் மூலமாகக் கலித்தொகைக் கூறுகின்றது.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டி, அணங்குகள் (தெய்வங்கள்) காவல் புரிந்ததாக மக்கள் நம்பியுள்ளனார். அணங்கு மூலமாகச் சொல்லுகின்ற போது மக்கள் தவறாக ஏற்படுத்த மாட்டார்கள் என்ற சூழல் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். நீர் மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உண்பதற்கு நீர் எடுத்தனர். எந்தொரு நோயினை வராமல் இருக்க பிறச்செயல்பாடுகள் அங்கு நிகழாமல் பாதுகாத்தனர். தெய்வங்கள் தங்கும் குளிர்ந்த நீர்த்துறையை,

Continue Reading →

ஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். காவிரிச் சமவெளியில் ஓர் பேறுபெற்ற அம்மன் கோயிலாக விளங்குவது சமயபுர மாரியம்மன் கோயில். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் மாரியம்மனை மாரியாத்தா, கருமாரி, முத்துமாரி, அகிலாண்ட நாயகி, சாம்பிராணி, வாசகி, கவுமாரி, காரண சவுந்தரி, மகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுரதேவி, மகாகாளி, மகாமாரியம்மன், திரிசூலி, அம்மா எனப் பலவாறு அழைத்து வணங்கி மகிழ்கின்றனர். 

சமயபுரம் அருள்மிகு மாரியம்மனை இப்பகுதியில் காணப்படும் பிற அம்மன் கோயில்களான அன்பில், நார்த்தமலை, தென்னலூர், கொன்னையூர், புன்னை நல்லூர், வீரசிங்கம்பேட்டை மற்றும் வைத்திகோயில் ஆகிய திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களோடு சகோதரி முறையாகக் தொடர்புபடுத்திக்கூறும் முறையும் மக்களிடம் உண்டு. தஞ்சை வளம்பக்குடி மாரியம்மனும் ஒர் சகோதரியாகக் கூறுவதும் வழக்கில் உள்ளது. இன்னும் சிலர் மாறுபட்ட சகோதரி வரிசையைக் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் தமிழக அம்மன் கோயில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு எனபதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

மாரியம்மன் விளக்கம்
பொதுவாகக் கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்கக் கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி(மழை) அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகக் கருதுகின்றனர். தமிழர் வாழும் அனைத்து ஊர்களிலும் நாடுகளிலும் மாரியம்மனுக்கு ஓர் தனிச்சிறப்பு உண்டு. கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின் பஞ்சம் தீர்க்கும் மாரியம்மனை வழிபடுவோருக்கு நோய்கள் எதுவும் அண்டாது. வேம்பினை விரிச்சமாய் கொண்டு எங்கும் நிறைந்திருக்கிறாள்.

1.சமயபுரம் முத்துமாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை திருவரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விசயநகர மன்னன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாகச் சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விசயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706இல் அம்மனுக்குத் தனியாகக் கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

Continue Reading →

ஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்

 

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலப் பகுதிகளில் பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் போன்ற வழிபாடுகள் பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்பட்டுள்ளன. தற்போது இச்சிறுதெய்வ வழிபாடுகள் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்படவில்லை. ஆனால் சமணசமய பெளத்தசமயக் கோயில்களில் ஐயனார், சாஸ்தா வழிபாடுகள் காணப்படுகின்றன (வேங்கடசாமி,2003:125-126).

ஐயனார்

ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் என்னும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த்தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகிறது. இந்தத் தெய்வம் பெளத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பெளத்தமதத்திலிருந்து சாஸ்தா என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பெளத்தமும் தமிழும் என்னும் நூலில் எழுதப் பட்டுள்ளது. சமணர்களுடைய கோவில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத்தெய்வத்திற்குப் பிரம்மயட்சன், சாத்தனார் முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக்கோயிலில் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. ஏனைய சமணத்திருக்கோவில்களிலும் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறுதெய்வங்களில் ஒன்றாகும். சமணர்களாக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். பெளத்தமதத்திலிருந்தும் சமணமதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பெளத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமையாதெனில், பெளத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை ஆகும். சைவக்கோவில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமாணக் கோவில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் பூசை முதலிய சிறப்பும்பெற்று இன்றும் விளங்குகின்றார் (வேங்கடசாமி, 2003 : 125 – 126).

தொண்டைமண்டலத்திற்கு உட்பட்ட மறைந்துபோன சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் மறையாமல் உள்ள சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் பின்வருமாறு காணலாம். கீழ்க்காணும் குறிப்புக்கள் அனைத்தும் சீனி.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும் (2003 : 131 – 152).

சென்னைமாவட்டம்
மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக்காலத்தில் சமணக்கோவில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக்கோவிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோவிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பதாகும். திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவராவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் பின்வருமாறு அமைகிறது:

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழகத்தின் எல்லை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -பண்டைத் தமிழகத்தின் எல்லை
தொல்காப்பியர் காலத்தில் பண்டையத் தமிழகம் இலக்கண இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியல் கூறுகளிலும் சிறந்து விளங்கியது. இதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் சான்றாக அமைகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தற்கால இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்த பண்டைத் திராவிடம், தொல்காப்பியர் காலத்தில் சுருங்கிக் காணப்படுகிறது. அது தமி்ழ்கூறும் நல்லுலகமாகச் சிறப்புற்று நின்றிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழ்கூறும் நல்லுலகமாகச் சிறந்து விளங்கியது என்பதை,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

(பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)

பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அறியமுடிகிறது. இப்பாயிரத்தில் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிலமாகத் திகழ்ந்ததை எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் எல்லைப் பகுதியைச் சிலப்பதிகாரம்,

Continue Reading →

ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்துகின்றன. காதல், வீரம் என்ற இரு இலக்கியப் பாடுபொருள்களைக் கொண்டு படைக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் அக்கால மக்களின் பண்பாட்டுப் பதிவுகள் எண்ணத்தக்க ஒன்றாக விளங்குகின்றன. தண்டமிழ் மொழிக்கண் தோன்றிய சங்க மருவிய நூல்களில் எட்டுத்தொகையில், ஐந்தாவதாக ‘ஒங்கு பரிபாடல்’ என உயர்ந்தோரால் உயர்த்திக் கூறப்படுவது ‘பரிபாடல்’ என்னும் சிறப்புமிகு நூலாகும். 

சங்க நூல்களில் அகப்பொருள்-புறப்பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவும் விதத்தில் புலமைச்சான்றோரால் படைக்கப்பட்ட பெருமைமிகு நூலாகவும் இந்நூல் திகழ்கின்றது. திருமாலையும், முருகனையும், வையைப் பேரியாற்றையும் வாழ்த்துவதனை உட்பொருளாகக் கொண்டு தமிழகப் பண்பு, காதல், வீரம், பண்பாடு, அறம், பண்டைத்தமிழர் பின்பற்றிய சடங்குமுறைகள், அவர்கள் பின்பற்றி நடந்த நம்பிக்கைகள் முதலான கூறுகளை புனைநலத்துடன் எடுத்துரைக்கும் நூலாகவும் விளங்குகின்றது.

இத்தகு சிறப்புமிகு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை உ.வே.சாமிநாதையரைச் சாரும். பரிமேலழகர் இந்நூலுக்கு உரை கண்டுள்ளார் என்பது இதன் தனிச்சிறப்பு. இத்தகு நூலின் வாயிலாகச் சங்கப் புலவர்கள் புலப்படுத்தும் கலையும் கலைநுட்பத்திறனும் குறித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

பரிபாடல் – பெயர்க்காரணம்
பல பாவகைகளையும் ஏற்று வருதலின் ‘பரிபாடல்’ என்னும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். ‘பரி’ என்பதற்கு, ‘குதிரை’ என்று பொருள் கொண்டு. பரிபாடலின் ஒசை. குதிரை குதிப்பது போலவும். ஒடுவது போலவும் நடப்பது போலவும் இருத்தலின் ‘பரிபாடல்’ என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். 

‘அன்பு’ என்னும் பொருள் படும் ‘பரிவு’ என்னும் சொல் இறுதி கெட்டுப் ‘பரிபாடல்’ என வந்ததெனக் கொண்டு, அப்பாடல் அகத்திணையைச் சுட்டுவது” எனக் காரணம் கூறுகின்றார் சோம. இளவரசு. “பரிபாட்டு என்பது இசைப்பா ஆதலான்” எனப் பரிபாடல் உரையாசிரியர் பரிமேலழகர் அதன் இசை இயல்பை எடுத்துக்காட்டுவர். இசை தழுவிய உருட்டு வண்ணம் பரிபாடலுக்கு உரியது ஆகும்.

“இன்னியல் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்’ என்னும் பரிபாடலில் வரும் அடியும் அதன் இசைச் சிறப்பை உணர்த்தும். இவற்றை நோக்கும்போது “இசை பரிபாடல் என்பதே இசை என்னும் சொல் கெட்டுப் பரிபாடல் என வழங்கலாயிற்று’ என்று கருதலாம் என்பர் இரா. சாரங்கபாணியார். கலிப்பாவால் இயன்ற நூல் கலித்தொகை என்று பெயர் பெற்றது போலப் பரிபாடல் என்னும் ஒரு பாவகையான் இயன்ற நூலாதலின் இப்பெயர் பெற்றது என்று கொள்ளுதல் தகும்.

Continue Reading →