முன்னுரை
தமிழ் இலக்கிய, இலக்கண வளத்தைச் சங்கப் பாடல்களின் தனித்தன்மைகளைக் கொண்டும், இலக்கண மரபுகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்தின் பாடுபொருட்பொதிவாக அமைந்த முதல், கரு, உரி என்னும் பாடற்கூறுகள், அகப்பாடல் பாடல்மரபுகள், திணைக்கோட்பாட்டு மரபுகள், அதன் கருவுரு ஆகியன தமிழ் இலக்கியங்களின் காப்பியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், அறநூல்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் யாவற்றிலும் உட்பொதிவாக அமைந்து, இலக்கியத்தை வளப்படுத்தி வருவதனைக் காணலாம்.
தமிழ்மொழியின் தலைப்பெரும் காவியமாகத் திகழ்வது கம்பராமாயணம் ஆகும். அது தமிழ் மரபுக்கேற்றவகையில் படைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளமையால் இன்றைக்கும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றது.
கம்பர், வடமொழிக் காவியமான இராம காதையைத் தமிழில் கம்பர் இராமாயணமாகப் படைத்தளித்தாலும், அதில் தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளின் சாரத்தைக் காணஇயலும். சங்கச் செவ்விகளில் அகப்பாடல் மரபுகளையும், புறப்பாடல் மரபுகளையும் தன் காவியம் முழுவதும் ஒருசேரப் படைத்தளித்துத் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவற்றோடு மட்டுமல்லாது, கம்பர், சங்க அகப்பொருள் மரபினைத் தழுவியே தனது காவியத்தைப் படைத்துள்ளார் என்பதனைப் பல்வேறு சான்றுகளின் மூலம் அறியலாம். அவ்வகையில் கம்பராமாயண யுத்தகாண்டத்தில் இடம்பெற்றுள்ள ‘கடல்காண் படலத்’தில்; உணர்த்தப்படும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் கூறுகளான அக, புறத் திணைக்கோட்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
சங்கச்செவ்வி
சங்க இலக்கியங்களின் உயிராக அமைபவை அதன் திணைக்கோட்பாட்டு மரபுகளாகும். ‘அகப்பாடலாயினும், புறப்பாடலாயினும் திணைமரபுகளுக்கு உட்பட்டே படைக்கப்பெற வேண்டும’; என்பது சங்க இலக்கியக்கொள்கைகளில் முதன்மையான கருத்தியலாக அமைந்திருக்கின்றது.