முன்னுரை
பிறப்பு இறப்பு என்பது எவ்வுயிர்க்கும் பொது என்றாலும், மனிதர்களைப் பிறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் இறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் உண்டென்றும் மக்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒவ்வொருவரின் வாழ்நாளும் கணிக்கப்படுகின்றன என்றும் நம்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கணிக்கப்பட்ட மொத்த நாட்களும் முடிந்தபிறகு உயிரை வெளவுவதற்குக் கூற்றுவன் வருவான் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது. இந்தத் தொன்ம நம்பிக்கையை எட்டுத்தொகை முதலான சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்நூல்கள் கூற்றுவனைப் பல பெயர்களில் குறித்துள்ளன. காலத்தைக் கணிப்பதால் அவன் ‘கணிச்சி’ எனப்பட்டான். இவன் நடுவுநிலைமையோடு செயல்படுவதால் ‘நடுவன்’ (இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூற்பா எண்: 406) என்று பிற்காலத்தினரால் குறிக்கப்பட்டுள்ளான்.
இந்தக் கூற்றுவன் தொன்மம் எப்போது உருவாகியிருக்கலாம், கூற்றுவனின் ஆயுதங்கள் யாவை, எட்டுத்தொகை நூல்களில் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ள செய்திகள் யாவை என்பன ஆயப்படவுள்ளன. குறிப்பாகக் ‘கணிச்சி’ என்ற மழுப்படையை அல்லது குந்தாலி என்னும் தோண்டும் கருவியைக் கூற்றுவன் பயன்படுத்துவதாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. இது பிற்காலத்தில் பிறிதொரு கருவியாக மாறியது எப்படி என்பது ஆராயப்படவுள்ளது. இப்படி உயிர்களுக்குத் தீர்ப்பளிக்கும்நிலையில் ஓர் அறக்கடவுள் எனச் சித்திரிக்கப்பட்ட கூற்றுவன் எவ்வாறு சிவன், திருமால், முருகன் ஆகியோர்க்கு அடங்கியவனாக மாற்றப்பட்டான் என்பதையும் சிவன் எவ்வாறு காலகாலனாக (எமனுக்கே எமனாக) மாறினான் என்பதையும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.
முன்னோடித் தொன்ம ஆய்வுகள்
முனைவர் கதிர்.மகாதேவன் “தொன்மம்” (1984) என்ற நூலில், ‘இலக்கியத்தில் தொன்ம உத்திகள்’ என்ற பகுதியில் சங்க இலக்கியங்களில் தொன்மம் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் குறிப்பிட்டுள்ளார். “சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம்” (2000) என்ற நூல் வே.அண்ணாமலை அவர்களால் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், “வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்” (2001) என்ற நூலை முனைவர் பெ.மாதையன் வெளியிட்டுள்ளார். அதில், ‘சங்க இலக்கியத்தில் தொன்மங்கள்’ என்ற நான்காம் பகுதியில் சங்க இலக்கியத் தொன்மங்களை விரிவாக ஆய்ந்துள்ளார். இதில் கூற்றுவனைப் பற்றியும் இரண்டரைப் பக்க அளவில் (156-158) ஆய்ந்துள்ளார். அந்தக் கட்டுரையிலிருந்தும் முந்தைய ஆய்வுகளிலிருந்தும் தரவுகளை எடுத்துக்கொண்டு மேலும் இந்தக் கட்டுரை பயணிக்கிறது.