மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன், ஆண்மான், ஒளி, சாத்திரம், மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை, உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை, சிற்பம், ஓவியம், கட்டிடம், நாட்டியம், கூத்து, ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து, ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.
“நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மண்ணில் மகிழ்ந்து, மண்ணின் மனத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகள்” என்று ஓ.முத்தையா அவர்கள் கூறுகிறார். கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ, நோக்கங்களையோ அல்ல. மனிதன் கலையின் வழியாகத் தன்னைத்தானே தானே வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று இரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார். இதில் தப்பாட்டம் என்ற பறையாட்டம், தென்மாவட்டங்களிலும், ஜமாப் (திடும்) என்ற ஆட்டம் கொங்கு நாட்டிலும் நிகழ்த்தப்படும் கலைகள் இரண்டும் நாட்டுப்புறக் கலையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும், தப்பாட்டத்திலிருந்தே திடுமெனும் ஜமாப்; ஆட்;டம் வளர்ச்சி கொண்டவையாகும். அத்தகைய சிறப்புபெற்ற தப்பு, திடும் ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் அமைப்பு, பயன்பாடு, இசைக்கும்முறை, அதன் வகைகள், அதனை உருவாக்கும்முறை குறித்து ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.
பறையாட்டம் / தப்பாட்டம்
பறை என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். ஆடு, மாடு ஆகிய விலங்குகளின் தோலினை வட்ட வடிவமான மரக்கட்டையில் இறுகக்கட்டி இசைக்கிற ஒரு வகை தோல் இசைக்கருவியாகும். “இந்திய சங்கத்தில் அவநந்த வாத்தியங்கள் எனப் பறை அழைக்கப்படுகிறது. அவநந்தம் என்றால் மூடப்படுவது என்று பொருளாகையால் ஒரு பாத்திரமோ, மரத்தாலான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநந்தம்’ என்றும், ‘புஸ்பகாம்’ எனவும் அழைக்கப்படுகிறது என்று டி.எஸ் பார்த்தசாரதி கூறுகிறார்.
இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும், சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். இப்பறை சங்க காலத்திலிருந்து தமிழக நிலப்பரப்பில் குறிஞ்சியில் குறிஞ்சிப்பறையாகவும், முல்லைநிலத்தில் முல்லைப்பறையாகவும், மருதநிலத்தில் மருதப்பறையாகவும், நெய்தல்நிலத்தில் நெய்தல்பறையாகவும், பாலைநிலத்தில் பாலைப்பறையாகவும் பெயரிடப்பட்டு மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டன.