1:0. முன்னுரை
கற்பிற்குரிய மெய்ப்பாடுகளை, மனன் அழியாதவழி புலப்படுவன எனவும்; மனன் அழிந்தவழி புலப்படுவன எனவும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.23-24) இவ்வியலில் மேற்கூறிய மெய்ப்பாடுகளையும் அதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.
1:1. மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும்
மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளாக, முட்டுவயிற் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை ஆகியனவற்றைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்.மெய்.23) இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
1:1:1.முட்டுவயிற் கழறலும் அகநானூறும்
முட்டுவயிற் கழறலென்பது, “களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனை கழறியுரைத்தல் என்றவாறு.”(இளம்.மெய்.23.) என இளம்பூரணர் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். முட்டுவயிற் கழறலென்பது களவுக்காலத்து தலைவியைக் குறியிடத்துச் சந்திக்க இயலா காலத்து நேர்ந்த முட்டுப்பாடு காரணமாக தலைவனை கழறி உரைத்தலாகும். இதனை விளக்க, பாரதியும் பாலசுந்தரமும், குறுந்.296ஆம் பாடலையும்; மேலும் பாரதி, பாலசுந்தரம், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர்,
“நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றார் றோழிநங் களவே”(அகம்.122)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நொச்சி வேலியாகச் சூழ்ந்து நிற்கின்ற தித்தனது உறந்தையிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டினையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி நொச்சிவேலிப் புறங்காடு என்க என்பதில் ‘பலமுட்டின்றால் தோழிநங் களவே’ என்பது முட்டுவயிற் கழறலாகும். இதில் இரவு நேரச் சத்திப்பு இத்துணைத் தடைகளை உடையது. ஆகையால் விரைந்து மணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தலைவனை வற்புறுத்துவது இதிலுள்ள குறிப்பு.
1:1:2 முனிவு மெய்ந்நிறுத்தலும் அகநானூறும்
முனிவு மெய்ந்நிறுத்தலென்பது, “வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல்”(இளம்.மெய்.23) எனவும், “தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலமையும்.”(பேரா.மெய்.23.) எனவும், “வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்பாடு குறிப்பால் வற்புறுத்துதல்.”(பாரதி.மெய்.23) எனவும், “தலைவன் வரைவிற்குரியன புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத் தன் மேனியிற் புலப்படத் தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல்.”(பாலசுந்.மெய்.23)எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இவற்றுள் இளம்பூரணர் ‘வெறுப்பு பிறர்க்குப் புலனாகாமை’ எனவும், பேராசிரியரும் ஏனைய உரையாசிரியர்களும் ‘வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை’ எனவும் பொருள் கூறியுள்ளனர். முனிவு என்பது வெறுப்பு, மெய் என்பது உடல், நிறுத்தல், என்பது கோடாமை தலைமகன் மீதான வெறுப்பு தன் மெய்யின் வழியே வெளிப்படாது காத்தல் முனிவு மெய் நிறத்தலாகும். இதனை விளக்க, பாரதி, குறுந்.218 ஆம் பாடலையும்; மேலும், பாரதி, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறுந்.4 ஆம் பாடலையும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,