ஈழத்து இலக்கியப் பரம்பலின் முக்கிய வகிபாகமாக விளங்குவது புலம்பெயர் இலக்கியம். அதன் வகை தொகையற்ற பெருக்கம்;; அவற்றை நாடுகள் ரீதியாகப் பிரித்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. புலம்பெயர் இலக்கியத்தின் ஆழ்ந்தகன்ற வெளிப்பாடு மட்டுமன்றி அவற்றின் களம், பேசுபொருள் ஆகியவையும் அவை பற்றிய தனித்தனியான பார்வையின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்ரேலியா தமிழ் இலக்கியம், நோர்வே தமிழ் இலக்கியம், இங்கிலாந்து தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம்; என நாடுகளை எல்லையாகக் கொண்டு புலம்பெயர் படைப்பிலக்கியம் வகுக்கப்படுகிறது.
கனடா புலம்பெயர் படைப்பிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களுடன் புதிய இளம் எழுத்தாளர்களும் கைகோர்த்து பெரும் படைப்பிலக்கியத் துறையாக கனடா தமிழ் இலக்கியம் விரிவுகண்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம், கூத்து, திரைப்படம், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து என பல்வேறு வடிவங்களில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை வழங்கிவருகிறார்கள்.
கனடா தமிழ் இலக்கியம் பற்றிய ஆரம்பக் கட்டுரையாக, என்னால் முடிந்தவரை கனடாவில் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற சகலரையும், சகல படைப்புக்களையும் பதிவுசெய்யும் ஒரு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.
கவிதை:
மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை, ஹைக்கூகவிதை எனப் பல பரிணாமங்கள் கண்ட கவிதை வரலாறு புகலிடக் கவிதை என்னும் புதியகவிதைக் களத்தில் சர்வதேசத் தன்மையோடு முற்றிலும் மாறுபட்ட புத்துலகக்கவிதையாய் இன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. இழப்புக்கள், வேதனைகள், விசும்பல்கள், விரக்தி, பெருமூச்சுக்கள், பொருமல்கள், காணாமல்போதல்கள், அகதிப்பயணம், கடத்தல்கள், எல்லைதாண்டிய பதுங்கல்கள், அந்நியதேசம், புரியாதமொழி, புதுக்கலாச்சாரம், பழக்கப்படாத காலநிலை என்று புலம்பெயர் ஈழத்தமிழனின் வாழ்வின் பல்வேறு அனுபவ அங்கங்களும் அவனுடைய இலக்கியத்தின் கச்சாப்பொருளாகவும் வெளிப்படுகின்றன. கவிதை அதற்கு அனுசரணையான வடிவமாக பெரும்பாலும் கையாளப்பட்டிருக்கிறது. மதுக்கோப்பையில் மிதந்தோடும் மதுவைப் போல புலம்பெயர் படைப்பாளிகளின் கவிதைகளின் உணர்வுகளும் பொங்கிப் பிரவாகிப்பன.
கனடாவின் இலக்கிய, சமய விழாக்களில் பெரிதும் களைகட்டி நிற்பது கவியரங்க நிகழ்வுகள்தான். புலம்பெயர் வாழ்வின் அவதியில் கிடைக்கின்ற சிறுபொழுதுக்குள் கவியரங்கக் கவிதைகள் படைப்பதும் இலகுவாகவே இருக்கிறது. கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர்கள் இணைந்து கவிதை வகுப்புக்கள், கவிதை எழுதுவது எப்படி என்பது தொடர்பான கருத்தரங்குகள் என்பனவும் அவ்வப்போது நடாத்துவார்கள். வானொலி நிகழ்வுகளிலும் கவிதைக்குத் தனியிடம் இருக்கிறது. கனடாவில் வாழும் கவிஞர்களின் தொகையும் அதிகம்தான். அந்தவகையில் கவிஞர் வி.கந்தவனம், தீவகம் வே.இராஜலிங்கம், அனலை ஆறு இராசேந்திரம், சேரன், செழியன், திருமாவளவன், சக்கரவர்த்தி, இரா. சம்பந்தன், இராஜமீரா இராசையா, சபா அருள்சுப்பிரமணியம், மா.சித்திவினாயகம், வீணைமைந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
Continue Reading →