ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது.
சிவசம்புப் புலவரின் காலம்பற்றிய சிக்கல் தொடர்பாக 1981 ஆம் ஆண்டு, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட இளங்கதிரில், வெளியாகிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் “உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்” என்னும் கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி இங்கு நோக்கத்தக்கது.
“உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் தமிழ்ப் பணியை மதிப்பிட முன்பு அவர் வாழ்ந்த காலத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்ககாலம் வரையில் வாழ்ந்த சிவசம்புப் புலவரின் காலமும் சுலபமாக அறிந்து கொள்ளமுடியாமல், வரையறுத்து அறியவேண்டிய சிக்கலை உடையதா எனச் சிலர் கேட்கலாம். ஆங்காங்கு காணப்படும் வெகுசில மைல்கற்கள்தவிர கால ஆராய்ச்சி பிரச்சனைக்குரியதாகவே காணப்படுகின்றது. சிவசம்புப் புலவர் காலம் பற்றி இத்தகைய பிரச்சினை தோன்றுகிறது.“ 1