தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத்தமிழர் வாழ்க்கை முறையும் கடவுட் கோட்பாட்டு கட்டமைப்பும் இயல்புநிலைச் சார்ந்த வழிமுறையின் பின்னணியை உணர்த்தி நிற்கிறது. வழிபாட்டு அமைப்பு முறை உலகளாவிய தன்மையில் எந்தத் தடத்தில் தொடங்குகிறதோ அவ்வழி இங்கும் உள்ளதென்பது புலப்படுகிறது. வைதீக அமைப்பு முறையும் தொல் தமிழர் கடவுட்கொட்பாட்டு வழித்தடமும் எந்த நிலையில் ஒத்துப் போகிறதென்றும் எங்கு வேறுபடுகிறது என்றும் மானிட வளர்நிலை அமைப்பில் பார்க்கிறபோது தமிழர்க் கடவுட்கோட்பாட்டு அமைப்பின் அடித்தளத்தை உணரமுடியும்.
வழிபடுதல்:
வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.
“விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 1
தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிரசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும்.
‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’2