முன்னுரை
மனிதன் ஒரு விலங்கு. விலங்கு நிலையிலிருந்த மனிதனின், விலங்கு குணத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. குறிப்பாக ஒழுக்கம், அன்பு, பண்பாடு, சத்யம் போன்ற ஒழுகலாறுகள் மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டன. குறிப்பாகச் சத்யம்; சத்யம் என்றால் உண்மை அல்லது வாய்மை எனலாம். விலங்கு நிலையிலிருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனை நல்வழிப்படுத்த, மனிதனிடமிருந்து மனிதனைக் காக்க உருவாக்கப்பட்டதே சத்யம். எனவே ஒவ்வொருவரும் சத்யத்தின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தாலே அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டானின் சத்யம் தொடர்பான கருத்தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கவிஞர் வெள்ளியங்காட்டான் – ஓர் அறிமுகம்
கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி, பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சில காலம் கோவையிலிருந்து வெளிவந்த ‘நவஇந்தியா’ இதழில் மெய்ப்புத் திருத்துனராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்று கன்னட மொழியிலும் பல படைப்புகளை வெளியிட்டதோடு, கன்னடப் படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1991- இல் தனது 87-வது வயதில் காலமானார்.