காதல் ஒரு குழப்பமான வாழ்க்கை. காதல் பற்றிய குழப்பங்களால் மனநோயாளிகளாக வாழ்பவர்களை எண்ணி முடிக்க முடியாது. காதல் உணர்விற்கு இத்தகைய எதிர்மறை தனிச்சிறப்பும் இருக்கின்றது. இத்தகைய தனிச்சிறப்பை சுட்டிக்காட்டுவதால் எங்களைக் கோபிக்காதீர்கள் காதல் விரும்பிகளே!
சமூகவிஞ்ஞானக் களங்களில் காதலித்து இணைந்தவர்கள் ஏராளம். சமூக மேன்மைக்காக உழைப்பதே இவர்களின் காதலுக்கு இதயத்துடிப்பு. இத்தகைய இதயங்களைப் பற்றிக்கொண்டே காதலின் வரலாறை ஆராயப்போகின்றோம்!
காதலாகி கசிந்து உருகிய பின்பு திருமணம் செய்யாமல் விலகியவர்களும் ஏராளம். காதலித்துத் திருமணம் செய்த பின்பு விவாகரத்துக்கு விரைபவர்களும் ஏராளம்.
திருமணம் செய்த பின்பு காதலர்களாக மலர்பவர்களும் இருக்கிறார்கள். திருமணத்தால் அறிமுகமான பின்பு விவாகரத்துக்கு வழியின்றி சகிப்புத்தனமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
பல்வேறு நபர்களிடம் காதல் உறவைக் தொடர்ந்தபின்பு அறிமுகம் இல்லாதவரை திருமணம் செய்பவர்களும் உண்டு. திருமண வாழ்வில் ஈடுபட்டபின்பு பல்வேறு காதலர்களுக்காக ஏங்குபவர்களும் உண்டு. காதலித்தால் கண்டிப்பாக திருமணம் செய்தாக வேண்டுமோ என்பர் நம்மில் சிலர். திருமணம் செய்தவர்கள் மனதார காதல் செய்ய வேண்டுமோ என்பர் இன்னும் சிலர்.
திருமணம் செய்யாவிட்டால் எதற்கு காதலாம் என்று வாதிடுபவர்கள் ஒருபுறம். காதலிக்காவிட்டால் திருமண வாழ்வில் என்ன பலனுண்டு என்று சலித்துக்கொள்பவர்கள் மறுபுறம்.
காதலர்களின் கலப்புத் திருமணம் சமூகவிடுதலையைச் சாதிக்கும் என்கிறார்கள் சமூகப் போராளிகள். காதல் திருமணம் செய்தவர்களை ஆணவப்படுகொலை செய்கிறார்கள் சாதி வெறியர்கள். இத்தனை பெரிய பதட்டங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையில் நாம் பேசியாக வேண்டும் காதலர்களே!
காதல் வேறு திருமணம் வேறு என்பதை எப்படி புரிய வைப்பது என முயல்கிறோம். சம்பந்தம் இல்லாத இவற்றை சம்பந்தம் செய்வதற்கு என்ன அவசியம் என்பதை உணர்த்த முயல்கிறோம்.