– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வது கிராமங்களாகும். இக்கிராமங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வருகின்றது. அத்தகைய கிராமங்கள் மனிதனுடைய இயல்பான வாழ்வையும், வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பிரிதிபலிக்கின்ற காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றது. வாழ்க்கை நடைமுறையும், பேச்சு வழக்குகளும், பழமொழிகளும், விடுகதைகளும், வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் விதைப்பது கிராமங்களேயாகும். இத்தகைய கிராமத்துப் பதிவுகளைச் சர்க்கரை எனும் நாவலில் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி; குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
நாட்டுப்புறமும் இலக்கியமும்
‘கிராமம்’ என்பது வேளாண் தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் கொண்டு பொருளாதாரத்தைப் பெருக்கி வாழக்கூடிய இடமாகும். இங்கு குழுவினரோடு வாழ்வதும், உற்றார் உறவினர்களோடும், உடன் பிறந்தோர்களுடனும் என வாழ்கின்ற நிலையே கிராம வாழ்க்கையாகும். இத்தகைய கிராமம் அல்லது குழுவில் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று பல்வேறு நிலைகளில் இருப்பதைக் காணலாம். மேலும், இவர்கள் பல்வேறு கலை இலக்கியங்களைப் படைக்கிறார்கள் என்பதையும் கிராம மக்களின் வாயிலாக அறியலாம். இப்படிப்பட்ட கிராம மக்களின் படைப்பிலக்கியங்கள் (folklore) நாட்டுப்புற இலக்கியங்களாக உருவெடுக்கின்றன என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. ‘folklore’ என்ற சொல் ‘மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஒரு இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு-சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழி வழியாக வழங்கி வருகிறது’ (ஆறு.இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.8) என்ற பொருளினைக் கொண்டது என்று கூறப்படுவதை இதன் வாயிலாக அறியலாம்.