ஆய்வு: திருவள்ளுவரின் எதிர்காலவியல் அணுகுமுறை

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது மனித வாழ்க்கைக்குரிய இலக்கை இயம்புவது. மனித குலத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நல்லவர்களையும் அவர்களுக்கு இடையூறு செய்யும் தீயவர்களையும் அன்பு, அறம் போன்ற நல்லுணர்வுகளையும் அவற்றைப் பகைக்கின்ற வன்பு, மறம் போன்ற அல்லுணர்வுகளையும் இலக்கியங்கள் வடிக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதால் இலக்கியங்கள் அனைவருக்கும் பொதுவாக விளங்குகின்றன.

இலக்கியம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த கோடான கோடி மக்களுடைய எண்ணங்களின் பேழையாகும். காலந்தோறும் அப்பேழை பெருகுகின்றது. ஏனைய கலைகளிலும் இலக்கியம் வாழ்வொடு பொருந்திய கலையாதலின் இலக்கியம் இயற்றிய புலவன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித சமுதாயம் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் எத்தகைய பயன் கிடைக்கும் என்பது பற்றிய எதிர்கால அணுகுமுறையில் இலக்கியம் படைக்கின்றான். அவ்வாறான இலக்கியங்களுள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர், உலகத்தோர்க்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் முதன்மையராய் வைத்து எண்ணப்படுகிறார். உலகம் போற்றும் திருக்குறளில் அவர் வகுத்துள்ள ஒழுக்கமுறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுவதற்குரியதாய், பொதுநோக்கப் பார்வையோடு இயற்றப்பட்டுள்ளது. ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டியவர். தாம் பெற்ற இன்பத்தை மற்றையோரும் பெறவேண்டும் என்னும் உயரிய எண்ணத்தராய், அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்கமுறையை திருக்குறள் மூலமாக உணர்த்தியுள்ளார்.

Continue Reading →

ஆய்வு: காப்பியங்களில் பெண்கள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?ஒரு பெண் தனக்குரிய உரிமைகளை அறிந்து உணர்ந்து அதன்வழி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே பெண்ணியம் பேசுதல் ஆகும்.இப்பெண்ணியச் சிந்தனை தற்போதைய பெருவளர்ச்சி என்றாலும் ஒருபக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்தகாலத்;திலும் பெண்மைக்குக் குரல் கொடுத்தவைகள் இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தான் தோன்றிய காலத்தைப் பதிவுசெய்வதற்காகவும், சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தைக் கூறுவதற்காகவும், இந்தச் சமூகம் எவ்வாறு விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. இதற்குப் பல இலக்கியச்சான்றுகளைச் சுட்டலாம். குறிப்பாகக் காப்பியங்கள் இங்கு ஆய்வுக்குரிய எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்என்ற முழக்கம் தோன்றும் முன்னர் கி.பி 100- லேயே இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் காலத்தே தோன்றிய முதல் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி அனைத்துக் காப்பியங்களிலும் பெண்களை மையப்படுத்துவதைக் காணமுடிகின்றது.

சங்கம் மருவிய காலத்தில் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையில் நீதி இலக்கியங்கள் தோன்றி அறவுரைகளை எடுத்தோதின. அக்கால இறுதிப்பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். குறைந்த அடிகளில் தோன்றிய சங்கப்பாடல்கள் மற்றும் நீதி இலக்கியப்பாடல்கள் தாண்டி ஒரு முழு வரலாற்றைக் கூறும் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.

உலகமொழிகளில் தோன்றிய காவியங்கள் புகழ்பெற்ற அரசனை, ஆண்டவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்க குடிமக்கள் காப்பியமாகத் தோன்றியது சிலப்பதிகாரம். குறிப்பாக,

Continue Reading →

ஆய்வு: தமிழ் மொழியில் வேற்றுமையும் வேற்றுமைத்தொகையும்

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
மொழியில் பெயர்ச் சொற்களும், வினைச் சொற்களும் இன்றியமையாதவை. இவ்விரு சொற்களைக் கொண்டே பெரும்பாலான கருத்துகளை உணர்த்தலாம். எனினும், தெளிவாகவும் நுட்பமாகவும் கருத்துக்களை விளக்குவதற்கு ஒட்டுக்கள், இணைப்புச் சொற்கள், பெயரடைகள் போன்றவை மிகுதியாகப் பங்களிக்கின்றன எனலாம். ஒட்டுக்களில் வேற்றுமை பின்னொட்டாக அமைகின்றது. வேற்றுமை என்னும் சொல்லின் உருவாக்கத்தினையும், மரபிலக்கணத்தார், உரையாசிரியர், மொழியியலாளர் ஆகியோரின் வேற்றுமை பற்றிய வரையறைகளையும் வேற்றுமையின் எண்ணிக்கை பற்றியும் மெய்ப்பொருள் விளக்கத்தையும் வேற்றுமை ஆறு எனும் மொழியியலாளர் கருத்தையும் உருபுகளையும் சொல்லுருபுகளையும் இன்றியமையாமையையும் அவைத் தொகையாக வருவதையும் இவ்வியலுள் காண்போம்.

வேற்றுமை சொல்லாக்கம்
வேறு என்னும் குறிப்பு வினையடியாகப் பிறந்த மை ஈற்று உடன்பாட்டுத் தொழிற் பெயரே வேற்றுமை என்பதாகும். மாற்றம் அல்லது வேறுபாடு என்பது பொருளாகும். பெயர்க்கு வினையோடு உள்ள உறவில் நேரும் மாற்றத்தை வேறுபாட்டைக் குறிக்க இச்சொல்லை வழங்கியது மிகவும் பொருத்தமே. பல்வேறு மொழிகளிலும் வேற்றுமையைக் குறிக்கும் சொற்கள் இப்பொருளிலேயே வழங்குகின்றன.

வேற்றுமையின் விளக்கமும் வரையறையும்
வேற்றுமை பற்றி விளக்குவதிலும் வரையறுப்பதிலும் மரபிலக் கணத்தார்களும், உரையாசிரியர்களும், மொழியியலாளர்களும் சிற்சில வேற்றுமைகளைக் கொண்டுள்ளனர்.

மரபிலக்கணத்தார்

தமிழிலக்கண வரலாறு பதின் மூன்று இலக்கண வேற்றுமைகளைப் பேசுகின்றன. ஆயின், அவற்றுள் ஐந்து நூல்களே வேற்றுமையை வரையறுக்க முயல்கின்றன.

Continue Reading →

ஆய்வு: பசிப்பிணித்தீர்த்தலில் மணிமேகலையின் பங்களிப்பு

         - முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தலைக்கவே தோற்றுவிக்கப்பட்டன. இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ நெறிகளை வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கல்ல… ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய சிந்தனையை வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறத்தை தான் மணிமேகலை காப்பியம் முழுவதும் வலியுறுத்துகிறது. இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம், பத்தினியின் சிறப்பைக்கூறும் காப்பியம், சீர்திருத்தக் கொள்கை உடையக் காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் எனும் பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு. இக்காப்பியத்தில் உயிரினங்களுக்கு ஏற்படும் பசிக்கொடுமையை எங்ஙனம் நீக்குகிறது என்பதையும் நாமும் அதனை நம்முடைய வாழ்வில் எவ்வாறெல்லாம் கடைப்பிடிக்க இயலும் என்பதைப்பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மணிமேகலையின் சிறப்பு :
மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியம் தான் ஆயினும் சமயக்கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்து சமயக்கோட்பாடுகளும் இவற்றையே வலியுறுத்துகிறது. பசியின் கொடுமையை விளக்கும் பசிப்பிணித் தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாக பேசுவது இக்காப்பியத்தின் அறக்கோட்பாடாகும். இதைப்போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப்பேசவில்லை. எல்லாச்சமயங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றன. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்கமாட்டார்கள் இருக்கவும் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். பாரதியார் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை

“ வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம்….
(பாரதியார் கவிதைகள் -முரசு- 23)

என்று பசியைப் போக்குவதற்கு முதலிடம் தருகின்றார். பசித்திருப்பவனுக்கு உணவுதான் கடவுள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவார்’ உயிர் வளர்க்க ஊன் வளர வேண்டும், இல்லையேல் பசிக்கொடுமைகள் இவ்வுலகில் தலைவிரித்தாடும் மனித இனத்திற்கு மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் உணவே முதல் தேவையாக அமைகிறது. பசிப்பிணி உலகில் இல்லாமல் இருந்தால் தான் மனிதன் சிந்தித்து அதன்படி செயலாற்ற முடியும் இல்லையேல் மனிதன் மிருகமாக மாறிவிடும் சூழல் ஏற்படக்கூடும்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியங்களில் உயிரி நேயம்

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை படிப்போமா?                        - முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவுகளைக் கொண்டது சங்க இலக்கியம். காதலில் தொடங்கிக் கடிமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கும் அகப்பாடல்கள், வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் போன்ற பல வாழ்வியல் கூறுகளைக் கொண்ட புறப்பாடல்களை உள்ளடக்கியது சங்க இலக்கியம்.

சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் பண்பியல் கூறுகளைப் படம்பிடித்த ஓவியங்கள் ஆகும். காதலும் வீரமும் இரண்டு கண்களாக எண்ணப்பட்ட காலம் அது. சங்கப் புலவர்கள் நாத்தழும்பேற அவற்றைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடல்களில் மிகுந்து காணப்படும் உயிரி நேயச் சிந்தனைகளை ஆய்வோம்.

சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

Continue Reading →

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் “ஐயோ” ஒரு பார்வை

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752  முன்னுரைமுன்னுரை
காடுகளில் வெகு தொலைவில் இருக்கும் இனத்தாரைக் கூக்குரலிட்டு அழைக்கும் போது ஓ… என்கிற சொல்லே அதீதப் பயனளித்தை அறிந்து உணர்ந்த ஆதித்தமிழன் உருவாக்கிய குறிப்பு மொழியே. ஐயோ. (Oh…My.. God) அசாதாரண  கொடூரமான மற்றும் துன்பகரமான சூழ்நிலையிலும். அபயம் வேண்டி ஆண்டவனை, தலைவனை, பெற்றோரை வியத்து அழைத்து முறையிடுவது தமிழர் தம் வழக்கம் மண்டையில் குட்டு பட்டாலும் உதடுகள் சொல் வார்த்தை ஐயோ.

ஐயோ – பொருள்
ஐயோ என்ற சொல் ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பட்ட கூக்குரலாகும். ஐயோ – அபாயகரமான சூழ்நிலயில் அபயம் வேண்டி ஒலிக்கப்பட்ட குறிப்பு மொழியாகும். இரக்கம், ஆக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிக்களை தம்மால் கட்டுபடுத்த முடியாத நிலையில் ஓலமிடுவது ஆதிமனிதனில் காடுகளில் திரிந்த போதிலிருந்தே தொடரும் உள்ளுணர்வின் தாக்கம் ஆகும். இது அனைத்து கலாச்சரங்களிலும் இன்றைக்கும் தொடரும் வழமை. ஐயோ  என்பது எமனின் மனைவியின் பெயராகும்.

சங்ககாலம்
ஐயோ! ஐயமே! வேண்டாம்! சங்ககால தொட்டு ஐயோ! பல பொருளில் பயன்பட்டு வருகின்றது அதன் நீளமும் அகலமும் மிகப் பெரிது! ஐயோ என்ற சொல் தமிழ்மொழி   தோன்றியதிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஐயோ, இங்கே வாருங்களேன் என்ற ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பப்பட்டும் கூக்குரலாகும். வலியைக் குறிக்க சங்ககால ஐயோ! கையறு நிலை அடைந்து தவிக்கும் போது பயன்படுத்தும் சொல்லாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் புறநானூற்றுப் பாடல் 255ல் அவலத்தைக் குறிக்க எடுத்தாளப்பட்டுள்ளது.

Continue Reading →

ஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இந்தியா ஒரு பன்மொழி பண்பாடு கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சில தனித்த பண்பாடு, கலாச்சாரம் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் 36  வகையான‌ பழங்குடிமக்கள் வசித்து வருகின்றனா். பழங்குடி மக்களுக்கு அடையாளங்களாக விளங்கக்கூடியவை அவா்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவைதான். அவை அவ்வினத்தின் அடிப்படைப் பண்புகளாக விளங்குகின்றன. மொழி-பண்பாடு-சமூகம் இம்மூன்றையும் இணைத்து ஆய்வு செய்கின்ற போதுதான் அது ஓா் இனத்தின் முழுமையான ஆய்வாகக் கருதப்பெறும். பழங்குடி மக்களைப் பற்றியும் அவா்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வும் இன்று முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இன்று பழங்குடி மக்கள் தங்கள் தனித்த அடையாளங்களை இழந்து வருகின்றனா். குறிப்பாக கோவை மாவட்ட இருளா் பழங்குடியினா் சமீபகாலமாக தங்கள் பழங்குடியினத்துக்கே உரித்தான பண்பாட்டுக் கூறுகளை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனா். அந்த வகையில் இப்பழங்குடிமக்கள் இழந்த பண்பாட்டு கூறுகளை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இருளா் பழங்குடியினா்
இருளா் பழங்குடியினா் தமிழகத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனா். குறிப்பாக நீலகிரி மலைத்தொடா், கூடலூர், கோவை மலைப்பகுதிகள், விழுப்புரம், சேலம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா். கா்நாடகத்தில் குடகு மலைப்பகுதி, தா்மபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடக எல்லைகளிலும், கேரளத்தில் பாலக்காடு, மூணாறு, அட்டப்பாடி, ஆணைக்கட்டி மற்றும் மலைசார்ந்த பகுதிகளிலும் பெருமளவு வசிக்கின்றனா். இருளா் என்ற பெயா் இவா்களுக்கு தொடக்கத்தில் இல்லை, சங்க காலத்தில் வேடா் என்றே இவா்கள் அழைக்கப்பட்டனா். காலப்போக்கில் வெவ்வேறு பெயா்கள் இவா்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி வில்லியன், வெல்லியன், மலநாடு இருளா், மலைதேச இருளா், வேட்டக்கார இருளா், ஊராளி இருளா் என்றெல்லாம் இவா்கள் அழைக்கப்ட்டனா். இருளா் என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. இருளடா்ந்த காடுகளில் இவா்கள் வாழ்வதால் இருளா் என்ற பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் சிலா். இருளுக்கு ஒப்பான கருத்த மேனி நிறம் கொண்டதால் இவா்களுக்கு இந்த பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் வேறு சிலா். மேற்காணும் விளக்கத்தைத்தான் மானுடவியல் ஆய்வாளா் எட்கா் தா்ஸ்டனும் அளிக்கிறார்.

Continue Reading →

ஆய்வு: கொல்லர்களின் வாழ்வியலும் கருவிகளும்

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?

முன்னுரை
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றச் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கருவிகளைக் கொல்லர்கள் வடிவமைத்துத் தந்துள்ளனர். அவ்வாறு கொல்லர்கள் கருவிகளை வடிவமைப்பதற்கும், தாம் வடிவமைத்தக் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பட்டைத் தீட்டுவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லர்கள் – அறிமுகம்

கொல்லர்கள் பொற்கொல்லர், இரும்பு கொல்லர் என இருவகைப்படுவர். இவர்களில் இரும்பு கொல்லர்கள்,

“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”        புறம். 312.3

என்பதற்கு ஏற்ப மன்னன் மற்றும் வீரர்களுக்கு தேவையான இரும்பாலாகிய போர்க்கருவிகளைச் செய்து கொடுப்பது கடமையாகும். இக்கருவிகளைச் செய்தவர்கள் “கருங்கை வினைஞர்”, “கருங்கைக் கொல்லன்” என அழைக்கப்பட்டுள்ளனர்.

பெயர்க்காரணமும் வேறுபெயரும்
கொல்லன் தனது உலைக்களத்தில் தீ மூட்டும் போது கரியை அடுத்து உலையிலே போடுவதனால் அவன் கை எப்போதும் கரிய நிறம் உடையதாக இருக்கும். அதோடு இரும்பைக் காய்ச்சி அடுத்து சம்மட்டியால் அதனை ஓங்கி அடித்துக் கொண்டேயிருப்பதால் அவன் கைகள் காய்ந்து உரம்(வலிமை) ஏறியதாக சுரசுரப்பாகக் காணப்படும். இதனைக் கண்ட அக்காலப் புலவர், ”கருங்கைக் கொல்லன்” (புறம்.170.15) என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading →

ஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

கலாநிதி குணேஸ்வரன்ஆய்வுச் சுருக்கம் :
தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றன என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பனுவல்களின் வைப்புமுறையில் இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்து அவற்றில் நடுகல் குறித்த பாடல்களைத் தனியே வகையீடு செய்து விபரண முறையியல் அடிப்படையில் இந்த ஆய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது.

திறவுச் சொற்கள் : நடுகல், பதுக்கை, தொல்தமிழர் வழிபாடு, சங்கப் பனுவல்கள்

1. அறிமுகம்
தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை சங்கப்பனுவல்களில் கண்டு கொள்ளமுடியும். எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை, தமிழ்த் தொல்குடிகளின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப் பனுவல்களினூடாக பலியிடுதல், வெறியாட்டு, நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகளையும் அவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டடைய முடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூற்றுப் பாடல்களில் அதிகமும் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அப்பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண்பாட்டை அறிவதன் ஊடாக மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மையையும் கண்டடைய இயலும்.

2. சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகற்கள்
சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் அகநானூறு (16 பாடல்கள்) மற்றும் புறநானூற்றுப் (12 பாடல்கள்) பாடல்களிலேயே இவை அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இவ்விரு இலக்கியங்களின்வழி நடுகல் வழிபாடு பற்றி நுண்மையாக நோக்கமுடியும்.

Continue Reading →

ஆய்வு: அரிச்சந்திரன் யார்? (விழுப்புரம் மாவட்ட மக்கள் தொன்மக் கதையை இறப்பு நிகழ்வில் நிகழ்த்தும் பாடமாத்திச் சடங்குப் பாடலை முன்வைத்து)

- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -ஒரு சமுதாயத்தின் அமைப்பு, ஒழுக்கமதிப்பு ஆகியவற்றின் அடித்தளமாய் அமைகின்ற முக்கியமான சமுதாய ஆற்றலே தொன்மம். இது நம்பிக்கைகளை ஒழுங்குபடுத்தித் தொகுத்தமைப்பதுடன் நடைமுறைச் செயற்பாட்டை வழிப்படுத்துவதாகவும் ஒழுகலாற்று விதிகளைப் பயிற்றுவிப்பதாகவும் அமைகின்றது. இது சடங்கு உள்ளிட்ட அனைத்து வாழ்வியற் கூறுகளிலும் ஊடுரு விநிற்கின்றது. (M.I.Steblin kamenskij,1982:30) என காமன்ஸ்கி கூறுவதைப் போன்று தொன்மம் இலக்கிய உருவாக்கத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது.

மாற்றத்தையே மாற்றியமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்று வருபவன் மனிதன். இயற்கையை வென்றதிலும் மாற்றியமைத்துக் கொண்டதிலும் அவனது பங்களிப்பை அறிய மதநூல்கள், புராண, இதிகாசங்கள், காவியங்களாகிய மரபுச் செல்வங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றைக் கற்பது கடந்தகால மனிதனை அவன் வாழ்ந்த சு10ழலை அறிய உதவும் (டி.டி.கோசாம்பி,2005:பதிப்புக்குறிப்பு). எனக் குறிப்பிடப்படுவதைப் போல, தொன்மங்கள் வெறும் கற்பனையாக மட்டும் அல்லாமல், அவை சமுதாயம் சார்ந்தனவாய் வரலாறு சார்ந்தனவாய் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பவனவாக, பண்பாட்டின் ஒரு கூறாக இருப்பனவானகவும் உள்ளன என்பதை மனதில் கொண்டே தொண்மங்கள் அணுகப்பட வேண்டியனவாக உள்ளன. அந்த வகையில் அரிச்சந்திரனின் நாட்டார் இறப்புப் பாடல்கள் வழி மெய்ப்பிக்க இப்பாடல் சான்றாக அமைந்து உள்ளன.

‘‘சாமிக் குருவே சாமிக் குருவே அடியேன் ஒரு விண்ணப்பம் சொல்கிறேன் திருமுடி, திருமுடி நோகாமல் தாழ்த்திக் கேலும். முந்திப் பிறந்தவன் நான்  முதல் பூணுல் அணிந்தவன் நான். சங்கும் பறையன் நான.; சாதிக்கெல்லாம் பெரிய ஜாம்பவன் நான்.  அறுநூல், பெறுநூல் அறுத்து எடுத்தவன் நான். ஆரியத் தெருவிலே தீவட்டிப் பெற்றவன் நான் என்றான் வீரவாகு.

Continue Reading →