[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா ‘ஆசிகந்தராஜாவின் முற்றம்’ என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. – பதிவுகள் -]
‘மாறுதல் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றி இலக்கிய விமர்சகர்கள் பொதுவாக குறிப்பிடுவதுண்டு. இலக்கியத்திற்கு மிக உகந்த பருவம் இது. கலாச்சார மாறுதல்கள் நிகழும் போது தான் சிறந்த படைப்புகள் உருவாகின்றன. தமிழில் காப்பிய காலகட்டம், அதற்கு மகுட உதாரணம். பௌத்த, சமண மதங்களின் வருகையை ஒட்டி உருவான கலாச்சார மாறுதல் (கலாச்சார உரசல் என்று மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்) பெருங்காப்பியங்களின் பிறவிக்கு வழிவகுத்தது. நிலைத்துபோன மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதனால் இலக்கியத்தின் களங்கள் மாறுபடுகின்றன. அதன் விளைவாக இலக்கிய மொழியை, இலக்கியத்திற்கேயுரிய தனி மொழியை (Meta Language) உருவாக்கி நிலை நிறுத்தக்கூடிய ஆழ்மனப் படிமங்களில் பெரும் மாறுதல்கள் உருவாகின்றன. இவ்வாறு இலக்கியம் முக்கியமான மாறுதல்களை அடைகிறது. உண்மையில் இலக்கியமாறுதல் என்பது சமூகம் கொள்ளும் மாற்றத்தின் ஒரு தடையமே. இலக்கியமாறுதல் அச்சமூக மாறுதலை மேலும் துரிதப்படுத்துகிறது. இந்திய மரபுமனம் மேற்கின் இலட்சியவாத காலகட்டத்தை எதிர்கொண்டமையின் மிகச்சிறந்த விளைவுதான் பாரதி. மாறுதல் பருவமே இலக்கிய ஆக்கத்தின் சிறந்த பின்னணி என்று நிறுவ பாரதி இன்னொரு சிறந்த உதாரணம். பாரதியில் தொடங்கிய அப்பருவம் இப்போதும் நீள்கிறது.
மாறுதல் பருவம் உற்சாகம், இக்கட்டு என்ற இரு தளங்கள் கொண்டது. மாறுதல் புதிய ஒரு வாழ்விற்கான கனவினை உருவாக்குகிறது. புதிய காலகட்டத்திற்கான சவால்களை முன்வைத்து மானுட ஊக்கத்தின் முன் சவால்களை திறந்து விடுகிறது. அதேபோல மாறுதல் மரபின் இன்றியமையாத கூறுகளை கூட பழைமை நோக்கித் தள்ளுகிறது. மனிதனின் சுயநலத்தையும் பேராசையையும் இத்தகைய மாறுதல் கணங்களே விசுவரூபம் கொள்ளச் செய்கின்றன. ஒரு உரையில் நித்ய சைதன்ய யதி இதைப்பற்றி சொன்னார். மாறுதல் காலகட்டம் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. சாத்தியங்கள் மனிதனின் இச்சா சக்தியை திறந்து விடுகின்றன. ஆக்க சக்தியாக வெளிப்படுவதும் இச்சா சக்தியே. சுயநலமாகவும் பேராசையாகவும் போக வெறியாகவும் வெளிப்படுவதும் அதுவே.
இலங்கை படைப்பாளிகள் புலம்பெயர்ந்த பிறகு ஒரு மாறுதல் பருவத்தின் பதிவுகள், தமிழிலக்கியத்தில் எழுந்தன. அத்துடன் இணையம் மூலம் தமிழிலக்கியத்தின் சாராம்சமான பகுதியுடன் அடையாளம் காணநேர்ந்த சில இந்தியப்புலம்பெயர் தமிழர்களும் இந்த மாறுதல் காலகட்டத்தின் இலக்கியப் பதிவுகளை உருவாக்கினார்கள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ரமணிதரன், சோபா-சக்தி, கலாமோகன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், சிறிசுகந்தராஜா, சக்கரவர்த்தி, வ.ந.கிரிதரன் என்று இலங்கை சார்ந்த தமிழ்படைப்பாளிகளின் புலம்பெயர் அனுபவக் கதைகள் முக்கியமானவை. காஞ்சனா தாமோதரன், மனுபாரதி, கோகுலக்கண்ணன், அலர்மேல்மங்கை, நா.கண்ணன் போன்று இந்தியத் தமிழர்களும் எழுதிவருகிறார்கள். இப்படைப்புகளில் பொதுத்தன்மைகளை வகுத்துக் கொள்ள இன்னும் காலம் ஆகவில்லை. எனினும் நம்பிக்கையூட்டும் பல ஆக்கங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை கூறாமலிருக்க முடியாது.