[எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான ‘க்னவுச்சிறை’ நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி ‘கனவுச்சிறை’ நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. – பதிவுகள்-]
முனைவர் நா.சுப்பிரமணியன்:
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட – கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட – வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.