சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் ஆறாவதாக இடம்பெறும் மதுரைக்காஞ்சி அளவில் பெரியதாகும். பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையின் மாண்பையும், அதனை ஆண்ட தலையானங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் செம்மாந்த பண்புகளையும் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் பாடுகிறார். காஞ்சித் திணையின் பாடுபொருளான நிலையாமையையும் பாண்டிய மன்னனுக்கு அறிவுறுத்துகிறார். மேலும் பாண்டிய மன்னனின் நிருவாக மேலாண்மைதிறன் சிறப்பாக / செம்மையாக விளங்கியதை இவர் பாடலில் காணமுடிகிறது. இவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. பாண்டிய மன்னராட்சியில் நிலவிய சங்கக் காலத்துச் சமூக நிலை, அரசியல் நிலை, நீதி வழங்கும் நெறி முறைகள், அறங்கூறும் அவையம், வணிகநிலை சமய நிலை, தொழிலாளர் நிலை, பெண்களின் நிலை, விழாக்கள், மன்னனின் கொடை போன்ற பல்வேறு நிருவாகத்திறன்களை மதுரைக்காஞ்சி வாயிலாக அறியமுடிகிறது.
சமூகஅமைப்பு:
பழந்தமிழர் சமுதாயத்தில் சாதிப்பிரிவினை இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை மக்கட்பாகுபாடு, இயற்கையையும் தொழிற்பண்பையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. நிலஅமைப்புக்கு ஏற்ப மக்கட்பாகுபாடு இருந்தது. இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வையே மேற்கொண்டனர்.
நீர்வளமும் நிலவளமும்:
ஒரு நாடு நன்னாடாக விளங்குதற்கு மக்கள் உணவுக் குறையின்றி வாழ்தல் வேண்டும் எள்பதே மன்னரின் தலையாய கடமையாக இருந்தது. எனவே நீர்வளமும் நிலவளமும் பெருக்குதலைத் தமது கடமையாகக் கொண்டனர். இயற்கைப் பகையாகிய பசி ஒழிதல் வேண்டும். உணவுப் பொருளைப் பெருக்குவதற்கு நிலத்தை வளப்படுத்தல் வேண்டும். இத்தகைய வளமை பாண்டிய நாட்டில் நிறைந்து இருந்ததையும் காணமுடிகிறது.