பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியரும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும்.
வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின் மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 – ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.