குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது 5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு. இது பாரதியாரிலிருந்து இன்றைய அனோஜன் பாலகிருஷ்ணன் வரை ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற அவலம். இதில் ஈழ – புகலிட இலக்கிய உலகம் இன்னுமொரு படி மேலே. அரசியல் நெருக்கடிகளுக்குள் அதிகம் சிக்கித் தவித்து வரும் எம் சமூகமானது, தமது நெருக்கடிகளின் மூச்சுத்திணறலினை படைப்பாளியின் மீது பிரயோகிப்பது இன்று சர்வ சாதரணமாகிவிட்டது. இதில் முக்கியமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரு துருவ எதிர்முனைப்புடன் இயங்கும் எம் சமூகத்தினர் ஒவ்வொரு படைப்பாளியையும் இந்த நுண்நோக்கி கருவியுடனேயே ஆராய முற்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு படைப்பாளியும் பலத்த நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கல்களுக்கும் ஒரு வித மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். மேற்குறித்த சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு படைப்பாளியையும் அவன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஒற்றைப்பரிமணா படிமங்களை உடைத்து அதில் இருந்து அவனை மீட்டெடுத்து அவனது பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தி, மீண்டும் வாசகர்கள் முன் அவனை மீள் அறிமுகம் செய்வதும் இன்று எம்முன் உள்ள தலையாய கடைமையாகும்.
இங்கு குணா கவியழகனும் மேற்குறித்த சுழிகளுக்குள் சிக்குண்டே கிடக்கின்றார். அவர் மீது வாசிக்கபப்டும் குற்றப்பத்திரிகையும் மிகக் குறைவானவையல்ல. எனவே குணா கவியழகனையும் கூட ஒரு மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அவர் சிக்குண்டு கிடக்கும் படிமக் கூண்டிற்குள் இருந்து அவரை மீட்டெடுத்து அவரது பண்முகப் பரிமாணங்கள் மீதான ஒரு கறாரான விமர்சனத்தை முன் வைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குணா கவியழகன் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம், போருழல் காதை எனும் 5 நாவல்களை எழுதி முடித்துள்ளார். அவரால் எழுதப்பட்ட படைப்புக்கள் மூலம் அவரை அறிய முற்பட்ட அனைவரும் அவரை ஒரு தமிழ்த் தேசிய தளத்தில் இயங்கும் ஒரு புலி ஆதரவுப் படைப்பாளியாக அடையாளங் காணுகின்றனர். அதனால் புலி ஆதரவு தளத்தில் இயங்கும் வாசகர்கள் அவரை ஒரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் உன்னத வரலாற்றை எழுதும் ஒரு படைப்பாளியாகக் கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர். புலி எதிர்ப்புத் தளத்தில் இயங்குபவர்கள் அவரை புலிகளின் அராஜகங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும், இறந்து போன தமிழ்த் தேசியத்திற்கு உயிர் கொடுக்க முனையும் ஒரு பாசிச எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றனர். குணா கவியழகன் மீது குத்தபட்ட இந்த முத்திரையை அகற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இதற்கு இவரது வாழ்வு, சூழல், பின்புலம் குறித்த விசாரணையுடன் இவரது நூல்களையும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி ஒரு மீள் பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானதாகும்.