பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இனி காண்போம்.
மயில்:-
மயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
மேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.
சிரித்தமுல்லை:-
மாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அணில்:-
கத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கடித்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
வானும் முல்லையும்:-
நம் எண்ணங்களைப் போல் விரிந்துள்ள என்ன தெரியுமா?அது வான். நமது இருகண்களைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் சேர்ந்து தரும் ஒளி வானாகும்.
இந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும், மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
மழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.