என அபிமான நடிகைகளிலொருவர் நடிகை ஜெயாபாதுரி. சாதாரண அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றம். மானுட உணர்வுகளை உள்வாங்கி மிகச்சிறப்பாக, இயல்பாக நடிக்கும் திறமை. இவை இவரது நடிப்பின் வலுவான அம்சங்கள். ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னரே இவருக்கு நடிப்புத்திறமையில் ஆர்வமிருந்தது. உலகப்புகழ்பெற்ற இயக்குநர் சத்யத் ரேயின் ‘மாநகர்’ திரைப்படத்தில் இவர் தன் பதின்ம வயதில் நடித்திருக்கின்றார். பின்னர் இவர் நடிப்பு, சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டு புனாவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சியடைந்தார். இவரது முதலாவது ஹிந்தித்திரைப்படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான ‘குட்டி’.
“வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்” – கவிஞர் விவேக் வேல்முருகன் –
வாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது. பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின் ‘அழகிய தமிழ் மக’னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார்? எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது? யார் நடித்தது? ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன். இதனால் எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கையில் அவை இடம் பெற்றுள்ள திரைப்படங்களின் கதைக்களனை அவற்றின் விக்கிபீடியாவிலுள்ள ஆங்கிலப்பக்கங்கள் மூலம் அறிந்துகொள்வேன். தமிழ் விக்கிபீடியாப் பக்கங்களில் அவை பற்றிய விரிவான பக்கங்களைக் காண முடியாது. ‘ஆண்டவன் கட்டளை’ (2016) திரைப்படக் கதையினையும் அவ்வாறே அறிந்துகொண்டேன்.
“எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு “ – கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல். ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிபதிவு & நடிப்பு எல்லாமேதாம்.
இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக்கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.
இப்பாடல் பலவகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல் காட்சிகளை உருவாக்கியிருக்கும் உயிர்த்துடிப்புள்ள, இயற்கை வளம் கொழிக்கும் ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி & தமன்னாவின் நடிப்பு எல்லாமே நெஞ்ச வசியபடுத்திக் கட்டிப்போட்டு விடுவன. மன அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும் தன்மை மிக்கவை.
“அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்” – கவிஞர் கண்ணதாசன்
மானுட விடுதலை பற்றிய கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல். ‘சிட்டுக்குருவையைப் போல் விட்டு விடுதலையாகி’ நிற்கக் கனாக்கண்டான் மகாகவி பாரதி அடிமையிருள் சூழ்ந்த இருந்தியாவில். சுதந்திரமாகச் சிறகடிக்கும் புள்ளினத்தைப்பார்த்து, ஆடும் கடல் அலைகளைப்பார்த்து விடுதலை பற்றிய கனவில் மிதக்கின்றான் கவிஞன் இங்கே. ‘ஒரே வான். ஒரே மண். ஒரே கீதம்! உரிமைக் கீதம்’ என்று மானுட விடுதலையின் மகத்துவத்தைப் பாடுகின்றான் இவன். கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. எளிமையான மொழியில் எவ்வளவு ஆழமாக, சிறப்பாகக் கவிதையினை வடித்துள்ளார்.
“பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்….
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே” – கவிஞர் மேத்தா
அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத்தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் ‘வேலைக்காரன்’ திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘உதயகீதம்’ திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.
கவிஞர் மேத்தா என்றதும் ‘வானம்பாடிக் கவிதைக்குழு’ ஞாபகம் எழும். அவரது புதுக் கவிதைகளின் ஞாபகம் எழும். எனக்கு இவர் முதன் முதலில் அறிமுகமானது ஒரு சிறுகதையின் மூலம்தான். என் பால்ய பருவத்தில் நான் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணிக்கதிர், ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா, கண்ணன், கலைமகள் என்று விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவரே எழுத்தாளர் மேத்தா. அப்பொழுதெல்லாம் ஆனந்தவிகடன் நிறுவனத்தினர் மாதந்தோறும் மாவட்டமலர்ச்சிறப்பிதழ்களை வெளியிட்டு வந்தார்கள். மதுரை மாவட்டம், தஞ்சை மாவட்டம், சேலம் மாவட்டம் என்று மாதாமாதம் மாவட்டமொன்றைப்பற்றிய தகவல்கள், கட்டுரைகள்,கவிதைகளுடன் அம்மாவட்ட மலர் வெளிவரும். அம்மாவட்ட மலர்களில் அம்மாவட்ட மண்மணம் கமழும் மாவட்டமலர்ச் சிறுகதையொன்றும் வெளியாகும், அதற்கு பரிசும் வழங்கப்படும். அவ்விதமாக விகடனின் தஞ்சை மாவட்ட மலரில், பரிசு பெற்ற சிறுகதையாக வெளியானதுதான் மேத்தாவின் சிறுகதையும். அதுவே மேத்தாவின் முதற் சிறுகதையாகக்கூட இருக்கலாம். பின்னர் அதே விகடன் தனது பொன்விழாவையொட்டி நடாத்திய சரித்திர நாவல் போட்டியில் முதற் பரிசினைப்பெற்றதும் மேத்தாவின் ‘சோழ நிலா’வே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.
அக்காட்டுப்பகுதியில் அக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்துத் தங்கியிருந்தனர். சில சமயங்களில் நீண்ட தடிகளைக் கால்களில் கட்டி ஒரு சிலர் நடந்து சென்று மாணவர்களான எங்களுக்கு விளையாட்டுக் காட்டுவார்கள். நாமும் செல்லும் வழியில் அவர்கள் இவ்விதம் நடப்பதை வியப்புடன் பார்த்துச் செல்லுவோம்.
அவ்விதமானதொரு நாளில்தான் இப்பாடலும் வவுனியா நகரசபைப்பக்கமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நகரசபை மண்டப அரங்கில் சில வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்விதமான சமயங்களில் இவ்விதம் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்போடுவார்கள். அம்மண்டப அரங்கில்தான் ஒரு முறை நாடகமொன்றும் அப்பாவுடன் சென்று பார்த்திருக்கின்றேன். அதன் பெயர் “உடையார் சம்பந்தம்”. இந்நகர சபை மைதானத்தில்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஜேவிபியினரின் முதலாவது புரட்சியின் போது இலங்கை வான் படையினரின் ஹெலிகொப்டர்கள் அடிக்கடி இம்மைதானத்தில்தான் வந்திறங்கிச் செல்வது வழக்கம்.
“எந்தெந்த நாடும் நமது.
சொந்தம் என்றாகும் பொழுது.
அன்பினில் ஆடும் மனது.
அத்தனை பேர்க்கும்
இனிது!
அமுது!
புதிது!” – கவிஞர் வாலி
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத சிறப்பான கானங்கள். பாடல்கள் அனைத்தும் பயண ஆவணங்களாகவும் விளங்கும் வகையில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இப்பாடற் காட்சிகளைப்பாருங்கள். அக்கூற்று எவ்வளவு உண்மையென்பதைப்புரிந்துகொள்வீர்கள்.
இப்பாடலில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் சந்திரகலாவுடன் நடித்த ஒரேயொரு திரைப்படம் இதுதான். ‘அலைகள்’ மூலம் தன் சிறப்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த நடிகை சந்திரகலா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னுமொரு திரைப்படம் ‘புகுந்த வீடு’. தனது இள வயதிலேயே மறைந்தது பேரிழப்பு. சிறந்த நடிகையான அவர் திரையுலகில் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருப்பார்.
எம்ஜிஆருக்காக எழுதும் காதற்பாடல்களில்கூடக் கருத்தாழம் மிக்க, சமுதாயப்பிரக்ஞை மிக்க வரிகளைப் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் வாலி. இப் ‘பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்’ காதலர்கள் இருவர் இணைந்து பாடும் காதற்பாடல். இடையில் வரும் கீழ்வரும் வரிகளைக் கவனியுங்கள்.
எனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய “வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் .” இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் ‘பதிவுகள்’ சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் வெளியான “பொப்இசை பாடகர் எஸ். இராமச்சந்திரன்” என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இவர் பாடிய ‘வான நிலவில் அவளைக் கண்டேன்’ பாடலுக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=gkzbvnUJBuE
(தினகரன் – இலங்கை) பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன் பரசுராமன்
1970 இலங்கையில் இயல் இசை நாடகம் முற்போக்கான எழுச்சியைக்கண்ட காலம். ஈழத்து சஞ்சிகை, ஈழத்து சினிமா, மெல்லிசைப்பாடல், இலங்கை பொப்பாடல் என வரிசைக்கட்டிக்கொண்டு கொடிக்கட்டிப்பறந்தது. இக்கால கட்டத்தில்தான் தொழில் ரீதியாக இலங்கை வானொலியில் இணைந்து தன் இசைத் திறமையால் இலங்கை பொப்இசை உலகில் பிரவேசித்து ரசிகர்களை கிரங்க வைத்தவர்தான் எஸ். இராமச்சந்திரன்.
கடந்த நான்கு தசாப்தங்களைத் தாண்டியும் இலங்கை, தமிழகம் மற்றும் உலகளாவிய புலம்பெயர் நாடுகளிலும் வாழும், தமிழ் உள்ளங்களில் துள்ளிசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது இவரது பொப் இசை பாடல்கள். மனது மறக்காத சமூக நலம் நாடிய பாடல்களைத் தந்த அவரை திரும்பிப் பார்க்கின்றேன் பக்கத்திற்காகச் சந்தித்தேன்.
கவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று. அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று.
நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் அபூர்வராகங்கள். கூடவே நினைவுக்கு வரும் பாடல் இப்பாடல். நடிகை ஶ்ரீவித்யா தாய் எம்.எல்.வசந்தகுமாரி சிறந்த கர்நாடகப்பாடகி. ஶ்ரீவித்யாவும் சிறந்த பாடகி. சிறந்த நர்த்தகியும் கூட. ஆனால் அவர் சுடர்விட்டது திரையுலகில்தான். தமிழ்த்திரையுலகைப்பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ,, நினைவுக்கு வருவது பின்னாளில் அவர் நடித்த நடுத்தர அம்மா வேடங்கள் மூலமே. ஆனால் மலையாளத்திரைப்படங்களைப்பொறுத்தவரையில் நிலை வேறு. மிகச்சிறந்த நடிகையாக, பின்னணிப்பாடகியாக அவரை மலையாளத்திரையுலகம் கொண்டாடுகின்றது.
ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு தொடங்கிய அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. துயர் மிகுந்தது. ஆரம்பத்தில் நடிகர் கமலகாசனுக்கும், அவருக்குமிடையில் நிலவிய காதல்பற்றிச் செய்திகள் வெளியாகின. அதுவும் தோல்வியில் முடிந்தது. அது ஶ்ரீவித்யாவை உளரீதியாக மிகவும் பாதித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தனது கடைசிக்காலத்தில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் கிடந்தபோது அவர் தன்னைப்பார்க்க அனுமதித்த மிகச்சிலரில் கமலகாசனும் ஒருவர். அவர் நிலைகண்டு மிகவும் மனம் வருந்திய கமல் அவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று சிகிச்சை செய்ய முன்வந்ததாகவும் , அதை ஶ்ரீவித்யா மறுத்துவிட்டதாகவும் இணையத்திலெங்கோ வாசித்துள்ளேன்.
பட்டிக்காட்டுப் பொன்னையா வந்தது தெரியாமல் போன எம்ஜிஆர் திரைப்படங்களிலொன்று. இலங்கையில் திரையிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பாடலை யு டியூப்பில் கேட்டபோது உடனடியாகவே பிடித்துப்போனது.. முதற் காரணம் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலினிமை. அடுத்தது கே.வி.மகாதேவனின் இசை. அடுத்த காரணம் ஒன்றுமுண்டு. அது எம்ஜிஆர் & ஜெயலலிதாவின் நடிப்பு. பாடலுக்கேற்ப பாடலைச் சுவையாக்குவதில் இருவரின் பங்கும் முக்கியமானது. பாட,ல் வரிகளைப்பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதாக எவையுமில்லை, சந்தத்துக்கு எழுதியவை என்பதைத்தவிர.
பாடலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டமாக “நித்திரையை நீ மறக்க!” என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா “ம்ஹூ’ (சுசீலா) என்பார். தொடர்ந்து ‘நீல விழி தான் சிவக்க’ என வாத்தியார் கூற , ஜெயலலிதா ‘ஓஹோ’ என்பார். மீண்டும் வாத்தியார் “நித்திரையை நீ மறக்க!” என்று கூற, ஜெயலலிதா ‘ஆகா’ என்பார். மீண்டும் “‘நீல விழி தான் சிவக்க” என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா ‘ம்ஹூ’ என்பார். மேலும் டி.எம்.எஸ் ‘முத்திரையை நான் பதிக்க!’ என்று தொடர்ந்து ‘முந்நூறு நாள் நடக்க!; என்று முடிக்க, ஜெயலலிதா சிரிப்பார். சிரித்தது ஜெயலலிதாவா சுசீலாவா என்பதில் எனக்கொரு சந்தேகமுண்டு. தொடர்ந்து ஜெயலலிதா “உன் முகம் போலே” என்பார். பதிலுக்கு வாத்தியார் ‘ஆகா” என்பார். மேலும் ஜெயலலிதா ‘ என் மடி மேலே” என்பார். வாத்தியார் ஓகோ’ என்பார். பாடலின் இப்பகுதியை நடிகர்களுக்காகவும்,. பாடகர்களுக்காகவும் மிகவும் இரசித்தேன். நீங்களுமொரு தடவை அப்பகுதியைக் கேட்டுப்பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.