தாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.
இதையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.
அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் “வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி”யை தொகுத்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது கடந்த மூன்று வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி நேயர்களது மனம் கவரும் வகையில்; அமைந்திருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும்.
கலை இலக்கியம் சார்ந்த விடயங்களும், சமூக அக்கறை சார்ந்த விடயங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்து மேலும் வலு சேர்க்கின்றன. தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டிலுள்ள பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாப். முஹம்மது எஸ். முஹ்ஸீன், வானொலிக் கலைஞர்களான ஏ.ஜே. ஷஹிம், பாத்திமா ரிஸ்வானா, மரீனா இல்யாஸ் சாபி, சைபா அப்துல் மலீக், பஸ்மினா அன்ஸார், பாத்திமா பர்ஸானா ஆகியோரின் அயராத உழைப்பில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக தொடர்ந்தும் இடம்பெற வேண்டுமென்பதே நேயர்களது பேரவா.