1) பயப்படுதல்
என் கவிதையை கண்டு பயப்படுகிறேன் .
அதில் பொய்களும் உண்மைகளும் கனவுகளும் கலந்திருக்கின்றன.
அதிலுள்ள பொய்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன .
மேலும் அதிலுள்ள உண்மைகள் எனக்கு பெருமையை ஏற்படுத்துகின்றன.
அதிலுள்ள கனவுகள் எனக்கு மயக்கத்தை தருகின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை கேலியாக பார்க்கின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை அடையாளம் காட்டுகின்றன .
எனக்கு என் கவிதையை கண்டால் பயமாக இருக்கிறது.
அதனால் பிரார்த்திக்கிறேன் “தயவு செய்து என் கவிதைகள் காலத்தை தாண்டி நிற்க வேண்டாம்; ஏழைகளின் அருகில் நண்பனாக உட்கார்ந்திருந்தால் அது போதும்”
2) ஆச்சரியப்படல்
என் கவிதையை கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த உலகம் என் கவிதைக்குள் மாட்டிக்கொண்டு என்னிடம் கேட்கிறது என்னை விடுவி.
அங்கு வெள்ளை மாளிகை, கிரெம்ளின் என அத்தனை அதிகார பீடங்களும் அடைபட்டு கிடக்கிறது.
என் கவிதையின் கொடி பறக்கிறது அனைத்து அதிகார பீடங்களிலும் .
என் கவிதையின் வார்த்தைகள் அதன் அருகில் உள்ள வார்த்தைகளுடன் பேசிக்கொள்கின்றன.
என் கவிதையின் வார்த்தைகள் காத்திருந்த வாசகனிடம் புதிரை கேட்காமல் பதிலை சொல்லி புதிரை சொல் என கேட்கிறது .
என் தாயை முதல்முறை பார்த்தது போல ஆச்சரியமாக உள்ளது என் கவிதையின் சாகசங்களை பார்க்கும்போது.
என் காகிதம் என்னை ஆச்சரிய குறியிடு என கெஞ்சுகிறது
அதே சமயம் என் பேனா என்னை மீறி ஆச்சரியக்குறியிட்டு மகிழ்கிறது .