மார்ச் மாதம்; 8-ம் திகதி. சர்வதேச மகளிர் தினம் எங்கும் சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே. பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
கீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது. ஒரு கொடூரமான உதாரணம்: இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு. இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது. மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை. எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.
2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது. மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள். அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள். உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.
உலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே. இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.