[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த சிறுகதைகள் சில ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியான படைப்புகள் இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். – பதிவுகள்]
நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. நாம் சந்திக்க மாட்டோம். உங்கள் வயது எனக்குத் தெரியாது. என் வயதினராக இருப்பீர்களென நினைக்கிறேன். எனக்கு நாற்பத்தோரு வயதாகிறது. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகளிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள். என் மகளுக்கு பதினைந்து வயதாகிறது.என் மகனுக்கு பன்னிரண்டு வயசாகிறது. உங்களுக்கும் பன்னிரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறான். என் மகன் கானாவில் பிறந்தான். அப்போது மருத்துவர் அருகிலில்லை. நான் நலமாக இருந்தாலும் டாக்டருக்கு அதிக வேலைகள் இருந்ததாலும், ஒரு மருத்துவச்சி தான் என்னை கவனித்துக் கொண்டாள். அவள் ஒரு கானிய குடும்பத் தலைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். எனவே எந்த மருத்துவருக்கும் அவருக்குத் தெரிந்த அளவு தெரிந்திருக்க நியாயமில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் எனக்கு உறுதியளித்தார். “இது ஒரு ஆண் குழந்தையாகத் தானிருக்கும். ஒரு ஆனால் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியும்”. நான் வலியால் துடித்த போது அந்த பெண்மணி நான் பிடித்துக் கொள்ள தனது கைகளை நீட்டினாள். அந்தக் கைகள் மட்டுமே வாழ்வின் கடைசி நம்பிக்கைச் சின்னங்களாக நினைத்து நான் பற்றிக் கொண்டேன். “இதோ விரைவில் முடிந்து விடும். நான் உன்னிடம் பொய் செல்வேனா. இதோ பார். எனக்குத் தெரியும். நானும் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்,” என்று கூறினார்.