சிறுகதை: விசுவாசம்

ஶ்ரீராம் விக்னேஷ்“ நாட்டில  நடக்கிற  தப்புகளையெல்லாம்  என்னால  முடிஞ்சவரைக்கும்   தடுக்கணும்….  சம்மந்தப்பட்டவங்களைப்  புடிச்சு  சட்டத்துக்கு  முன்னால  நிக்கவெச்சுத்  தண்டிக்கணும்….  இந்த  ஒரே  நோக்கத்துக்காகத்தான்  நான்  இந்தப்  போலீஸ்  வேலையை  விரும்புறேனே  தவிர,  வேற  எந்த  நோக்கமும்  எனக்குக்  கிடையாது  ஐயா….”  பணிவோடு  பேசினேன்  நான்.

என்  பேச்சுக்குள்  பொதிந்து  கிடந்த  கம்பீரத்தையும், எதிர்காலத்தில்  ஒளிவிட்டுப்  பிரகாசிக்கப்  போவதுபோல,  அதன்மேல்  தெரிந்த  களையையும்,  அன்பழகன்  ஐயா  உள்ளூர  எடைபோடுவதை  என்னால்  உணர  முடிகின்றது.
அறுபது  வயதைக்  கடந்துவிட்டபோதும்,  இன்னமும்  துடியாட்டமாய்  செயல்படும்  அன்பழகன்  ஐயா  முகத்திலே  இலேசானதோர்  புன்னகை  தெரிந்தது.

“இந்த  பாருப்பா….  என் வயசில  பாதிக்கும்  கம்மியானவன்  நீ….  அத்தோட  ஒலகத்தைப்பத்தி  எம்புட்டு  தெரிஞ்சுகிட்டிருக்கியோ  எனக்கு  தெரியாது….  கடமை, நேர்மை  அப்பிடி  இப்பிடீன்னு  சொல்லிக்கிட்டு,  இந்த  உத்தியோகத்துக்கு  போறவங்க  ரொம்பப்பேரு,  நாளைக்கு  நாலு  காசைக்  காணுறப்போ,  கையை  அழுக்கு  ஆக்கிடுராங்க….  நீ  அப்பிடிச் செய்வேன்னு  நான்  சொல்ல  வரல்ல….  நீயா  விரும்பாவிட்டாலும்,  நீ  இருக்கக்கூடிய  சூழ்நிலை  உன்னய  செய்ய வெச்சிடும்….”

சூழ்நிலையின்  நிதர்சனத்தை  எண்ணி  நொந்தபடி  பேசினார். 

“ ஐயா…. நீங்க  சொல்றது  எனக்குப்  புரியாமலில்லை….  அதே டயிம்  அடுத்தவங்க  கடமையில  நான்  குறுக்கை  போகப்போறதும்  இல்லை….  என்  கடமையில  யாரையும்  கிராஸ்பண்ண  விடப்போறதும்  இல்லை….  மிஞ்சிப்போனா  என்ன  பண்ணிடுவாங்க….  தண்ணியில்லாத  காட்டுக்கு  மாத்திப்புடுவோம்னு  மெரட்டுவாங்க….  மாத்திட்டுப்  போகட்டுமே….  அதுக்குமேல  என்ன  பண்ணுவாங்க….  வெசத்தையா  வெச்சுடுவாங்க….  அப்பிடீன்னாலும்  பரவாயில்ல….”

என்  பேச்சிலே  தெரிந்த  உறுதி, அன்பழகன்  ஐயாவை  சிறிது  அதிர வைத்தது. தொடர்ந்து  அவரது  பேச்சிலே  சிறிது  கோபம்  தெரிந்தது.

“ஏ….  என்னப்பா  பேசுறே….  கொஞ்சம்  நல்ல  வார்த்தையாய்  பேசுப்பா….”

நான்  தொடர்ந்தேன்.

Continue Reading →

சிறுகதை: பேராண்டி….!

ஶ்ரீராம் விக்னேஷ்–  கவிஞர் தமிழ்க்கனல், கவிஞர்  இளசை அருணா ஆகியோரைத்  தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு,  நவம்பர்  –  2004 ல்,  எட்டயபுரம் – பாரதியார்  மணிமண்டபத்தில்  வைத்து  வெளியிடப்பட்ட,  “கரிசல் காட்டுக் கதைகள்” சிறுகதைத்  தொகுப்பில் வெளிவந்த   சிறுகதை  இது.) –


பெளர்ணமி  நிலவின்  ஆக்கிரமிப்பு  மீண்டும் ஒரு  பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின்  மெல்லிய வருடலினால், உடம்பை  இலேசாக  நெளித்துக்கொண்டேன்.

என்னைத்  தோளில்  சுமந்தபடி  நடந்துகொண்டிருந்த  தாத்தாவின்  கம்பீரம்  என்னை  உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.

தெற்கே  இரண்டு  மைலுக்கப்பால்,  ரயில்  பாதையில்  புகையைக்  கக்கிக்கொண்டு  குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின்  ஒலி  தெளிவாகக்  கேட்டது.

“பேராண்டி…. மணி  ரண்டு  ஆயிடுச்சுல…. சினிமா  முடிஞ்ச  உடனே கிளம்பியிருக்கணும்….  ரொட்டிக்கடைக்குப்  போனதால  லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா  கெட்டியா  உக்காந்துக்க…. தூங்கிக்  கீங்கி  விழுந்துடாதல…. இன்னும்  சத்துநேரத்தில  வீடு வந்திடும்…. சரியா…..”

“ நான்  ஒண்ணும்  தூங்கல்ல  தாத்தா….” பதில்  கூறினேன்  நான்.

இலேசாகத்  திமிறினார்  தாத்தா. அவர் பேச்சிலே  சிறிது  கோபம்  அடுத்து  வெளிவந்தது.

“என்னலே…. தாத்தா, பூத்தாண்ணுகிட்டு…. பேராண்டியிண்ணு  கூப்பிடச் சொல்லிக்கிட்டு  வர்றேன்…. நீ என்னமோ  ஓம்புட்டு  இஷ்டத்துக்கு  இழுத்து  உட்டுக்கிட்டே  போறே…. சொல்லுலே….”

“சரிலே…. பேராண்டீ………………..”  சத்தமாகச்  சொன்னேன்  நான்.

“கெக்கெக்கே….” என்று  தனது  பொக்கை  வாயால்  சிரித்துக்கொண்டார்  தாத்தா. தன்னோடு  சரிக்குச் சரியாக  நான்  பேசுவதில்  அவர்  கண்ட  இன்பம்  என்னவோ!

“பேராண்டி…. எனக்கொரு  சந்தேகம்….”  மெதுவாகக்  கேட்டேன்.

தாத்தா  உற்சாகமானார்.

“கேளுல…. கேளு…. என்னா  சந்தேகம்…. எப்ப  உனக்கு  கல்யாணம்  பண்ணி வைக்கப்  போறேன்னு  கேக்கப்போறியா…. இருலே…. தாத்தா மொதல்ல  ஒண்ணு  கட்டிக்கிட்டு,  அப்புறமா  உனக்கு  ஒண்ணு  கட்டி  வெக்கிறேன்….”

சொல்லிவிட்டு  மீண்டும்  “கெக்கெக்கே….” சிரிப்பு  தாத்தாவுக்கு.

மீண்டும்  நெளிந்தேன்  நான்.  பதிலடி  கொடுக்க  நினைத்தேன்.

“எதுக்கு  பேராண்டி  ஆளுக்கு  ஒண்ணு…. பேசாம  நாம  ரண்டுபேருமா  ஒரு  பொண்ணையே  கட்டிக்குவோம்….”

தாத்தாவுக்கு  பெரிய  குஷி.  அவர்  சிரித்த சிரிப்பின் குலுக்கலால்  என்  அடிவயிறு  கலங்கியது.

எனக்கு  சிறிது  கோபம்.  பேசாமல்  இருந்தேன்  நான்.  தாத்தா  என்னை  உலுக்கினார்.

“பேராண்டி…. என்னலே  உம்முண்ணு  இருக்கே…. நீ  கேக்கவந்த  விசயத்தை  மறந்திட்டியா…. சரிசரி….  இப்ப  கேளு….”

“இப்ப  உம்பேரு  என்ன  உண்டோ…. அதே  பேருதான்  எனக்கும் வச்சிருக்கு…. இல்லியா…. அது  ஏன்….?”

Continue Reading →

சிறுகதை: கார் பாடம்

- கடல்புத்திரன் -பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.”கட்டல்ட் சீரா”காரை முந்தி வேலைசெய்த …தளத்தில் கணேஸ்,”டேய் ,சுப்பர் காராடா,மச்சாள், அவ்வளவு பெரிய பிழை இல்லாமல் கனநாளைக்கு ஓடுவாள், ஓட்டம் அந்த மாதிரி இருக்குமடா”என்று ஒவ்வொரு நாளும் அவளைப் பற்றி புகழ்ந்து, புகழ்ந்து… தள்ளிக் கொண்டிருப்பான், ஓடிக் கொண்டிருந்த யப்பான் காரையும் பின்னால் ஒருவன் வந்து இடிக்க, சொன்னால் நம்ப மாட்டீர்கள் ,அதன் செசியே சிறிது வளைந்து விட்டது. பின்னால் இடித்தவனில் பிழை. மூன்றாந் தரக் காப்புறுதி தான், இவனிலே பிழை என்றால், ஐய்யா, தலையிலே கையை வைத்துக் கொண்டு … இருக்க வேண்டியது தான்.

அதை விட அதிசயம் அடிபட்ட பிறகும் கார் ஓடியது தான். யப்பான் கார் , கால் கை போனாலும் ஓடுற கார் .

அதனாலே அதற்கு மவுசும் அதிகம்.ஆனால் அவனுக்கு வெறுத்து விட்டது. பதிவு மையத்தில் புகாரை பதித்து விட்டு, காப்புறுதிக்காரனுக்கு தெரிவிக்க, அவன் அடிபட்டுத் திருத்துற கார் கராஜ் ஒன்றிட விலாசத்தைத் தெரிவித்தான். “அங்கே கொண்டு போய் விடு”என்றான்.

பிறகும், அவனுக்கு சார்ப்பாகவே நடக்கிறது.”செசி வளைந்ததால் கழிக்க வேண்டியது தான்”கராஜ்காரன் தெரிவிக்க, “நட்ட ஈடாக 2000 டொலர்கள் தர முடியும்,என்ன சொல்றே”என காப்புறுதிக்காரன் ,ரிம் கொட்டேனில் வந்து சந்தித்துக் கதைத்தான்.இந்தியன்.சுழியன்கள் என்று இந்த நிறுவனமும் இவர்களையே இப்படியான விசயங்களிற்கு அனுப்புகிறார்கள்.”அவ்வளவு தான் தர முடியும்.அது தான் அதனுடைய பெறுமதி “என்றான்.காரையே அவன் 1500 டொலருக்குத் தான் வாங்கியவன்.”சரி” என்றான். செக்கை எழுதி யே கொண்டு வந்திருக்கிறான். உடனேயே தந்தான்,

குடித்த கோப்பிக்கும் அவனே காசைக் கொடுத்திருந்தான்.

பிறகென்ன தேடி அலைந்து இந்த கட்டலஸ் சீரா, பழைய காரை 2000 டொலருக்கு வாங்கி இருந்தான். இந்தக் காரின் தயாரிப்பை இப்ப நிறுத்தி விட்டார்கள். காரை, புகழ்வதை கணேஸ் மட்டும்  நிறுத்தவே இல்லை.

காரில் ஓட்டத்திலே பிழை இல்லை தான் . அதாவது எஞ்சின் நல்லது. ஆனால்,எரிபொருள் ஓடுற குழாய்கள் மாற்ற வேண்டி வந்தது. எரிபொருள் தாங்கியில் ஓட்டை விழுந்து அதையும் மாற்றியது. நிறுத்தியில் மாற்றும்.முக்கிய பகுதியை விட மற்றப் பகுதிகள் எல்லாத்திற்கும் கராஜ்காரனுக்கு 200 டொலர் படிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். காரை வைத்திருக்கிறவர்கள் அதைப் பற்றிய அறிவையும் காட்டாயம் கொண்டிருக்க வேண்டும். ஊரிலே என்றால் பழுதான பகுதியை வெட்டி எறிந்து விட்டு ,கராஜ் ஆள் தானே கூட தயாரித்து ஒட்டி அந்த மாதிரி ஓட வைத்து விடுவான். இங்கே,மீள  உயிர்ப்பிக்கிற பகுதிகள் மலிவு சிலவேளை முழு தொகுதியையே மாற்றுவார்கள். ஆனால்,தொட்டதுக்கும் 200 டொலர் அழ வேண்டி வரும் ஊரிலே செலவும் குறைவு.

இப்ப பேவிய்யூ வீதியிலே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது பின் பக்க இடது ரயரிலே காற்றுப் போய் விட்டது.

Continue Reading →

(அன்னையர் தினத்தை முன்னிட்டு) சிறுகதை: “ நான் – அம்மா புள்ளை!”

ஶ்ரீராம் விக்னேஷ்அதிகாலை  ஐந்துமணி.  அறையின் கதவு தட்டப்படும் சத்தம்.  எரிச்சலாக இருந்தது.  

சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன்.

அங்கே… அறிமுகமில்லாத  ஒரு  சிறுவன்.

“யாரப்பாநீ…. காலங்காத்தால  வந்து  கதவைத்தட்டி  உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’

கொட்டாவி விட்டபடி  கேட்டேன்.

தெருவில்  பால்க்காரர்களின்  சைக்கிள் ’பெல்’ ஒலி….  இட்லிக்கடையில்  ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன  வைகறையை  வரவேற்றன.

அந்தச்சிறுவன்,  என்னை  ஏறஇறங்க  நோக்கினான். வலக்கரம்  நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான்.

“வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி அவங்கசொல்ற வேலைய செஞ்சு குடுப்பேன்….”

பேச்சினில்  பணிவு. பார்வையில்கம்பீரம்.  “மனக் கேமரா” வில் அவனைக் “கிளிக்” செய்தேன்.

தொடர்ந்து அவனே பேசினான்.

“ நேத்து பகல்பூராவும்  நீங்க வீடுதேடி அலைஞ்சதும்., பூசாரி அருணாசலம்ஐயா  தயவால சாயந்தரம்போல  இந்த “ரூம் “  கெடைச்சதும்… வரையில  எனக்குத்தெரியும்….”

நான்  குறுக்கிட்டேன்.

“சரி..சரி…  இப்பநீ  எதுக்குவந்தே…  சொல்லிட்டுக்  கெழம்பு ”

“தப்பா  நெனைக்காதீங்க….  பஞ்சாயத்துநல்லீல  தண்ணிவருது….  குடமோ, பானையோ இருந்தாக்  குடுங்க…. சத்தே  நேரமானா   கூட்டம்ஜாஸ்தியாகிடும்…. “பணிவாக வந்தது அவன் குரல்.

நேற்று  மதியமே பூசாரி அருணாசலம்  அண்ணாச்சி  கூறியிருந்தார்., “ தண்ணிபுடிக்கக் குடம் ஒண்ணு  வாங்கிக்க….”

அப்போது  வாங்குவதற்கு  மறந்துவிட்டேன். இப்போது இந்தச் சிறுவன் முன்னே தலை சொறிந்தேன்.

“ இல்லைப்பா…. நான்  குடமெதுவும்  வாங்கிக்கல்ல….. இண்ணைக்கு  வாங்கிக்கிறேன்…. நாளையிலயிருந்து  தண்ணிபுடிச்சுக்  குடு……”

பதிலை  எதிர்பாராமல்,  கதவை அடைத்தேன். தூக்கம்  உலுக்கி  எடுத்தது.

Continue Reading →

சிறுகதை: ‘டார்லிங்’

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்லண்டன் 2019-

அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச் செய்தவளுக்குப் பல விதமான பரிசுகளைக் காய்களென்றும் பழங்களென்றும் கொடுத்துவிட்டு கால மாற்றத்தில் தளர்ந்து,முதிர்ந்து தங்கள் வாழ்க்யை முடித்துக் கொண்டிருக்கின்றன.

‘நானும் அப்படியா? இந்த செடி கொடிகள் தங்களை இந்தப் பூமியில் விதைக்கச் சொல்லி யாரையும் கேட்கவில்லை, எனது திருப்திக்கு எனது தேவைக்கு விதைத்தேன், பாதுகாத்தேன், இன்று அந்த விதையின் பல பரிமாணங்களை ஒரு பாதுகாவலன் மாதிரிப் பார்த்தக் கொண்டிருக்கிறேன்’ வாடித் தளர்ந்து கொண்டிருக்கும் திராட்சையிலைகளைத் தடவியபடி யோசித்துக் கொண்ட போது அவள் மனம் சட்டென்று அவளைப் பற்றிக் கேள்வி கேட்டது.

‘வாழ்க்கை என்ற வெற்றுக் கானல் நீரோட்;டத்தில் நானும் இப்படித்தானா? என்னைப் போன்ற பல பெண்களும் இப்படித்தானா, சுயமாக எதுவும் செய்ய முடியாத வெற்றுவிதைத் தொடர்களா,கானல் நீரோட்டத்தில் வெறும் பிம்பங்களா? ஞானேஸ்வரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்து அவள் கணவரின் குரல் சத்தமாக அவளையழைத்தது.

‘ஞானேஸ்வரி. யாரோ கதவைத் தட்டுகினம்’. அவர் மிகவும் சத்தமாக அவளையழைக்கிறார்.

அவளின் கணவருக்குப் பல வருத்தங்கள். பெரிதாக நடந்து திரிய முடியாது. அவள் ஒரு இயந்திரம்.அவர் அழைத்த குரலுக்கு அசைந்து திரியும் ஒரு நடமாடும் மனித இயந்திரம்.

அவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தாள்.

ஞானேஸ்வரி தனக்கு முன்னால் நிமிர்ந்து நின்றிருந்த ஆங்கிலேயப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள். அன்று திங்கட் கிழமை.வெளியில் பாடசாலை போகும் குழந்தைகள், வேலைக்குப்போகும் மாந்தர்கள் என்று தெருவில் பல சந்தடிகள். வந்து நின்ற ஆங்கிலேயப் பெண்மணி,’ ஹலோ எனது பெயர் மேரி டானியல், உள்ளூராட்சியின் முதியோர் நலவிடயங்களைச் சார்ந்த விசாரணைப் பிரிவிலிருந்து வருகிறேன். நீங்கள் திருமதி அருளம்பலம் ஞானேஸ்வரிதானே?’.

அவள் ஒரு அழகிய பெண். குரலும் மிகவும் இனிமையாகவும் கனிவாகவுமிருந்தது. முதியோர்களின் பராமரிப்புக்கென்றே பிறந்த அன்பான முகத்தில் ஒரு அழகிய சிறு புன்முறுவல் தவழ்ந்துகொண்டிருந்தது.

Continue Reading →

சிறுகதை: போர்வை

எழுத்தாளர் அகஸ்தியர்– எழுத்தாளர் அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் அனுப்பிய சிறுகதை. மின்னஞ்சல்களுக்குள் மறைந்து தவறிவிட்டதை இன்று கண்டுணர்ந்தோம். -பதிவுகள் –


இவன் தற்காலத்து நாகரிகப் பையன். ஆனால், யாழ்ப்பாண  வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள்,  விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று  நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன்  கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும்  பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு. 

‘இந்தா ரண்டரையாகுது….’

சுரேஷ் மனசுள் லேசான கீத சுகம் நீவிற்று. சோர்ந்த உடல் சுரீரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி ‘வார்ச்’ பார்க்க, முகத்தில் குதூகல மையல் பம்மிய ஆனந்த பரவசம்.

‘இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு’

‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசரகோலமாகியது. ‘ஹங்கரில்’ கொழுவினான். ‘பாத்றூம் பேஷன் பைப்’ திறந்து சாடையாக முகம் அலம்பி, துவாய் எடுத்துப் பறதியாகத் துடைத்த பின், ‘சிவில் சேட்’, ‘ஜக்கற்’, ‘சூஷ்’ மாட்டினான்.

‘இனி வெளிக்கிடுவம்’

அடுக்குப் பண்ண, ‘பத்ரோன்’ இவன் எதிரே ருத்திரசர்மன் மாதிரி ‘றெஸ்ரோறன்’ சாலைக்கு வெளியே நிற்கின்றான்.

அவன் முகத்தில் மலர்ச்சி ததும்பும் சிரிப்புக் கவியவில்லை. கண்களில் அக்கினி கக்கிற மின்னல். சாந்தமான முகபாவம் தேங்கிய போதும், ‘விறுமசத்தி’ சாடை பத்ரோன் முகம் ‘சப்’பென்று இருக்கிறது.

தன்னுள் சுரேஷ் ‘கறுமுறு’த்தான் :

‘உவன் பத்ரோன் நெடுகலும் உப்பிடித்தான்’

பரவச நிலை குலைந்து நிற்கையில் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு. இவனை மீறிக் குதறிப் போயிற்று.

‘வெளிக்கிட்டாச்சு, மெல்லமா நடையைக் கட்டுவம்’

மனசு கிளர்த்திற்று : ஓர் இடறல்.

‘பொன்ஸர்’ சொல்லுவமா, விடுவமா?’ புருவம் நெருட, கண நேர யோசினை. பத்ரோன் பார்வை ‘இதமாக’த் தோணுவதாயில்லை.

Continue Reading →

சிறுகதை: கப்பவூட்டுத் தம்பிகள்

* சமர்ப்பணம் : மறைந்த உயிர் நண்பர் தாஜுக்கு

எழுத்தாளர் ஆபிதீன்பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது – மொட்டை மாடி மேல். ‘கப்பக்கார வூடு’ என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள்! எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது? இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ ‘இது அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.

கப்பக்கார வீடு… கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு…

எல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன? கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை ‘நகுதா’ (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது! போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் – சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை – 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து ,  ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை !

கப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை ‘கப்பவூட்டுத் தம்பி’ என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி… அவரின் ‘தம்பி’…

சிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.

சிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து ‘ஒரு நல்ல செய்தி’ என்று அன்றுதான் சொல்கிறார்.

‘எழுதுறதை வுட்டுப்புட்டீங்களோ ?’ – வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.

‘இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்!’. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது ‘சர்’ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் ‘எப்படி இருக்கிறீங்க?’ என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்…

Continue Reading →

காதலர்தினக்கதை : மனம் விரும்பவில்லை சகியே!

- எழுத்தாளர் குரு அரவிந்தன் -நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.

‘ஏன் வலிக்கவில்லை?’

‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.

நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.

உள்ளக கணக்குப் பரிசோதனைக்காக நாங்கள் அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. எங்களுக்காகத் தனியாக ஒரு தடுப்பறையை அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் முன்பக்கத்தில் கண்ணாடி யன்னல்கள் ஓரமாக அழகான ஆடைகள் அணிந்த அலங்காரப் பொம்மைகளை வைத்திருந்தார்கள்.

அந்தப் பொம்மைகளுக்கு நடுவேதான், ஆடை மாற்றிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக எனது கண்ணில் பட்டாள். புதியவளாக இருக்கலாம், அவளும் ஒரு அழகிய பொம்மைபோலக் கண்ணாடி யன்னலுக்கு வெளியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றதால், முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. அவள் அசைந்த போதுதான் அவள் நிஜம் என்பதைப் புரிந்து கொண்டேன். புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தும் ஆடைகளை இப்படித்தான் அடிக்கடி பொம்மைகளுக்கு மாற்றிக் காட்சிக்கு வைப்பார்கள். அன்று அதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள், அதாவது அலங்காரப் பொம்மைகளுக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.

அவளது அழகை நான் ரசித்தேன். இவ்வளவு கொள்ளை அழகை எங்கிருந்து இவள் பெற்றாள்? சொற்ப நேரம் பார்த்த அவளது அசைவுகள் ஒவ்வொன்றும் எனது மனத்திரையில் பதிந்து என் உணர்வுகளைத் தூண்டி எனக்குள் என்னவோ செய்தது. அன்று மதியம் உணவருந்திய பின் ஓய்வெடுக்கும் அறையில் நாங்கள் சற்று நேரம் கரம் விளையாடினோம். தண்ணீர் எடுப்பதற்கு தற்செயலாக உள்ளே வந்தவள், அருகே வந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தாள்.

‘ஹாய். ஐயாம் தீபா’ என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்தவள், ‘நானும் உங்களோடு விளையாட்டில் பங்குபற்றலாமா?’ என்று கேட்டாள்.
‘கோலக் குயிலோசை உனது குரலினிமையடீ!’ சட்டென்று பாரதியின் கவிதை வரிகள் ஞபகம் வந்தது. இவளுடைய நடையுடை பாவனையைப் பார்த்தபோது  பாரதியின் புதுமைப் பெண்ணாக இவளும் இருப்பாளோ என்று எண்ணத்தோன்றியது.

Continue Reading →

சிறுகதை: தலைவன் தேடு படலம்!

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -நிலத்தின் நீர் வேட்கை முற்றிலும் பூர்த்தியானதைப் பசுமையின் கரங்கள் வானத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. நைட் வாச்மேன் வேலைக்குப் போய்த்திரும்பிய சோர்வைப் போக்கிக்கொள்ள போர்வைகள் சூரியக்குளியல் மூழ்கின. மாலைச் சூரியன் நீச்சல் பழக கடலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய தலைவிக்கு அன்றை இரவு யுகத்தின் எல்லையாக நீண்டது. அது அவளுக்கு ஒரு முடிவை எடுக்க போதுமான இடைவெளியைத் தந்திருந்தது. அதனால் சூரிய உதயம் அவளுக்கு இனிய பொழுதாய் இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு வீட்டைவிட்டுத் தனியாகப் போவது இதுதான் முதல் முறை என்றாலும், அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை ஏதும் அப்போது ஏற்படவில்லை. கதிரவனின் சூட்டை இலவசமாக வாங்கிக்கொண்டிருந்த தரையின் மேற்பரப்பு அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தது. அவற்றின் சோதனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தன பிரிந்து சென்ற காதலனின் நினைவுகள். 

அவளுடைய நடையின் வேகம் தளர ஆரம்பித்தது. நீண்டதூரம் நடந்த களைப்பும் சூரியனின் வெக்கையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி பயமுருத்திப் பார்த்தன என்றாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 

தென்னை மர நிழலில் அழையாத விருந்தாளியாய் அவள் அடைக்கலம் புகுந்த போது சூரியன் பூமியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் உக்கிரத்திற்கு மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியவர்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையே முதன்மைச் சாட்சியங்களாய் இருந்தன.

அடிவயிற்றைத் தடவிய விரல்களின் பூரிப்பை முகம் வெளிக்காட்ட நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். தென்றலின் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் தருணங்களில் மட்டும் வெயிலின் சோர்வு ஓய்வு கொண்டது. 

நூடுல்ஸ்க்கு வெள்ளையடித்தது போன்ற தலையைக் கொண்ட பெண்ணின் கண்கள் நிழலுக்கு ஒதுங்கிய தலைவியை ஸ்கேன் செய்துகொண்டிருந்தன. வயதிற்கு மீறித்தெரிந்த அழகினைப் பெருமூச்சுடன் கூடிய அவளுடைய பார்வைத் தோலுத்துக் காட்டியது. அதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட தலைவி, தன்னுடைய பார்வையை மரத்தின் நிழலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பின் மீது திருப்பினாள். அப்போதும் அவளுடைய கைகள் அடிவயிற்றைத் தடவியவாறே இருந்தன.

இளமைத் தோற்றமுடன் காணப்பட்ட முதியவள் இவ்வாறு சொன்னாள் இளம்பெண்ணைப் பார்த்து. “இந்த வெக்கையில் தனியாய் எங்கே போகிறாய் பெண்ணே! துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா?……..” என்று.

Continue Reading →

சிறுகதை: பால்ய விவாஹம்

சீர்காழி தாஜ் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது  சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ மீள்பிரசுரமாகின்றது –

– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில்  பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை.  நிலவும்   வாழ்வியற் போக்குகளை  இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. ‘பால்ய விவாஹம்’ என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் ‘பால்ய விவாகம்’ பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது. 

ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். –  வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் –


சிறுகதை: பால்ய விவாஹம் – சீர்காழி தாஜ்

இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும். தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பி வலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த   இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!

Continue Reading →